ஞாயிறு, 16 டிசம்பர், 2012

நான் ஆதி மனிதன்


நான் ஆதி மனிதன்
என்னை விட்டு விடுங்கள்
திரும்பிச் செல்கிறேன்

நான் ஆதி மனிதன்
உங்கள் நாகரிகங்களிலிருந்து
என்னை விடுவியுங்கள்
என் குகைகளுக்குத் திரும்புகிறேன்

நான் ஆதி மனிதன்
உங்கள் கலாச்சாரங்களிலிருந்து
என்னை விடுவியுங்கள்
என் காடுகளுக்குத் திரும்புகிறேன்

நான் ஆதி மனிதன்
உங்கள் சமத்துவமின்மைகளிலிருந்து
என்னை விடுவியுங்கள்
என் மலைகளுக்குத் திரும்புகிறேன்

நான் ஆதி மனிதன்
உங்கள் மொழிகளிலிருந்து
என்னை விடுவியுங்கள்
என் சைகைகளுக்கும் குறிகளுக்கும் திரும்புகிறேன்

நான் ஆதி மனிதன்
உங்கள் ஆடைகளிலிருந்து
என்னை விடுவியுங்கள்
நான் நிர்வாணத்துக்குத் திரும்புகிறேன்

நான் ஆதி மனிதன்
உங்கள் சாத்தான்களின் உலகத்திலிருந்து
என்னை விடுவியுங்கள்
என் கடவுளிடம் திரும்புகிறேன்

நான் ஆதி மனிதன்
என் காடுகளை எனக்குத் திருப்பித் தாருங்கள்
உங்கள் மொத்தத்தையும் திருப்பித் தருகிறேன்;
உங்கள் ஆயுதங்களையும்..


சனி, 27 அக்டோபர், 2012

மணல்வெளித் துயரம்



முன்னொரு நாளில்
பாய்ந்திருந்த நதியின் தடங்களைத்
தனக்குள் புதைத்துக் கொண்டு
ஒரு பாலையென நீண்டு விரிந்து கிடக்கிறது
மணல்வெளி

தகிக்கும் அதன் வெம்மையின்
துயர் தணிக்கும் உபாயம் யாரறியக் கூடும்?

இரு கரைகளிலும்
அடர்ந்திருக்கும் பச்சை மரங்களின்
இலைகளில் கிளைகளில்
இன்னுமிருக்கக்கூடும் நதியின் எச்சங்கள்

அம்மரங்கள்
அசைந்து அசைந்து விசிறியும்
ஆற்றவியலாது நீள்கிறது
மணல்வெளியின் வெம்மைத்துயர்

அது
பருவமழையின் துக்க விசாரிப்புகளின்
போதாமையில்
தணிவதாயில்லை

நகரும் மேகங்கள்
கடந்து செல்லும் பறவைகள்
பயணிக்கும் நான்
யாரும் அறியக்கூடுவதில்லை;
காலணிகளற்றுக் கடந்துபோகும்
ஏதேனும் சில கால்கள் மட்டுமே
பகிர்ந்து கொள்ள முடியும்
அதன் வெம்மையின் துயரத்தை..

இருகரைகளையும் இணைக்கும்
இப்பாலத்தின் மீது
ரயிலில் கடக்கும் போதெல்லாம்
அதிர்ந்து அதிர்ந்து
விம்மி விம்மி அடங்குகின்றன
இப்பெரு மணல்வெளியும்
என் சிறுநெஞ்சமும்..


சனி, 29 செப்டம்பர், 2012

வீடுகளைக் கனவு காண்பவன்


வீடுகளால் நிரம்பி வழியும்
கனவுகளுக்குச் சொந்தக்காரன் அவன்
வீடுகளைத் தவிர வேறெதையும்
அவன் கனவு காண்பதேயில்லை

அவன் கனவில் வரும் வீடுகள்
நகரத்து மாடி வீடுகளைப் போலவே
யாரும் எளிதில் அணுகமுடியாதவாறு
இரும்புக் கதவுகளோடும் குறைந்த வெளிச்சத்தோடும்
அமானுஷ்யமாய் இருக்கின்றன

மழையும் வெயிலுங்கூட
அவற்றின் ரகசியங்களை அறியமுடியாதவாறு
இறுகச் சாத்தப்பட்டிருக்கும் அவ்வீடுகளைக்
கதவுகளிடமிருந்தும் சாளரங்களிடமிருந்தும்
அவன் விடுவிக்கிறான்

எல்லா அறைகளும் படுக்கையறைகளாகவே
இருக்கும் அவ்வீடுகளில்
அவனோடு படுத்துறங்குவோர் யாவரையும்
அவன் முன்பே அறிந்திருக்கிறான்

கனவில் ஒருநாள் திடீரென மழைபெய்ய
அவன் வேறுவழியில்லாமல்
கதவுகளாலும் சாளரங்களாலும்
மழையின் முகத்தில் ஓங்கி அறைகிறான்

அதிர்ச்சியில்  கனவிலிருந்து வெளியேறிய மழை
யதார்த்தத்தில் நுழைய
திடுக்கிட்டுக் கண்விழித்தவன்
தன் கனவை வாரிச் சுருட்டிக் கொண்டு
ஓரிடம் தேடி ஒதுங்குகிறான்

கனவு வீடுகளில் அவனோடு
படுத்துறங்கியோர் யாவரும்
பக்கத்தில் ஒதுங்கியிருக்க
அவர்கள் அவனைக் கண்டு
புன்முறுவல் பூக்கிறார்கள்

நேரந்தெரியாத அந்த இரவில்
விடாமல் பெய்து கொண்டிருந்த மழையில்
அந்தச் சாலையோர சிறுவனின் கனவு
கொஞ்சம் கொஞ்சமாய்
நமுக்கத் தொடங்குகிறது


ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

மகிழ்ச்சியையும் லீப்ஸ்டர் விருதையும் பகிர்ந்து கொள்கிறேன்




இப்படி ஒரு விருது இருப்பதை நேற்றுதான் அறிந்தேன். இவ்விருதை எனக்களித்த தோழர் சிவஹரிக்கு  எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். வலையுலகில் கால் பதித்து சுமார் மூன்றாண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இது ஒரு மகிழ்ச்சியான தருணம்தான். அண்மையில் வலைச்சரத்தில் ஆசிரியப் பொறுப்பேற்கும் வாய்ப்புக் கிடைத்தபின் உடனடியாகக் கிடைத்திருக்கும் மற்றொரு வெகுமதியாக இதைக் கருதுகிறேன்.

இனி லீப்ஸ்டர் விருது பற்றி நான் அறிந்து கொண்டதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

லீப்ஸ்டர் விருது எனப்படுவது இளம் வலைப்பதிவர்களை ஊக்குவிக்க வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருதாகும். 'லீப்ஸ்டர்' என்பதன் பொருள் 'மனதுக்குப் பிடித்த' என்பதாகும்.

இதன் விதிமுறைகளாவன:

1. முதலில் இவ்விருதை வழங்கியவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

2. இவ்விருதை நகலெடுத்து உங்கள் வலைப்பூவில் ஒட்ட வேண்டும்.

3. பின்னர் இவ்விருதை 200-க்கும் குறைவான பின்தொடர்பவர்களைக் கொண்ட, நீங்கள் தகுதியானவர்கள் எனக் கருதும் ஐந்து  வலைப்பதிவர்களுக்கு வழங்க வேண்டும்.

4. இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகவலைத் தொடர்புடைய வலைப்பதிவரின் வலைப்பூவில் பின்னூட்டமிடுவதன் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.

இனி நான் பெற்ற இவ்வின்பத்தை என்னைக் கவர்ந்த வலைப்பதிவர்களுக்கு வழங்குகிறேன்.

என்னை மிகவும் கவர்ந்த கவிஞர். அற்புதமான நவீனக் கவிதைகளுக்கும் மரபுக் கவிதைகளுக்கும் சொந்தக்காரர். கவிதையின் பல்வேறு கூறுகளைத் தன் கவிதைகளில் முயன்று பார்ப்பவர். இவர் இந்த விருதுக்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்தவர். இவ்விருதை இவருக்களிப்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.

2.  கவிதைகள்! - தோழர் அன்புராஜா
உவமை உருவகங்கள் நிறைந்த இவரது கவிதைகள் தொடக்கக் கால புதுக்கவிதைகளை நினைவூட்டக் கூடியவை. உரையாடல்களால் ஆன இவரது சில கவிதைகள் வாசிப்பின்பத்தைத் தூண்டக்கூடியவை. இவருக்கு இவ்விருதையளிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

3. இசையின் ஈர இயக்கங்கள் - நித்யவாணி மாணிக்கம்
மற்ற வலைப்பூக்களிலிருந்து வேறுபட்டிருக்கும் இவரது வலைப்பூ இசைக்கோலங்களால் நிரம்பியிருக்கிறது. இசையின் பல்வேறு கூறுகளைப் பற்றியும் இசைக்கலைஞர்களைப் பற்றியும் பல அரிய தகவல்கள் இவரது வலைப்பூவில் மிகுந்து கிடக்கின்றன. இவருக்கு இவ்விருதை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

4. கோடங்கி - இக்பால் செல்வன்
காரசாரமாக இருக்கிறது இவரது வலைப்பூ. சிந்தனையைத் தூண்டும் இவரது பதிவுகள் வரவேற்கப்பட வேண்டியவை. இவருக்கு இவ்விருதையளிப்பதில் உவகையடைகிறேன்.

5. பெண் என்னும் புதுமை - கோவை மு.சரளா
இவரது வலைப்பூ தத்துவார்த்தமாகவும் கவித்துவமாகவும் இருக்கிறது. வாசிப்பதற்கு நிறைய இருக்கின்றன இவரது வலைப்பூவில். இவருக்கும் இவ்விருதையளிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

அனைவருக்கும் எனது வாழ்த்துகள்!



ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

இயற்கையின் பெருந்துளிகளும் சிறு துரும்பாகிய நானும்..3


9.
பெருமழைக்கெனத் தவமிருக்கிறது
ஓடையாய் சுருங்கிவிட்ட
நதிக்குழந்தை..
அப்பெருமழை நாளில்
அது
தன் தாய் வீடேகும்.

அதுவரை
தன் அலைகளைக்
கரைகளில் அறைந்து
அரற்றிக் கொண்டிருக்கும்
கடல்தாய்.

10.
களைத்துப்போன கோடை
வழித்தெறியும்
வியர்வைத் துளிகள்
வீழ்கின்றன
பருவமழையின் முதற்துளிகளாய்..

11.
பருவமழை பெய்யுமா
தெரியவில்லை;
உழவன் விதைத்துக் கொண்டிருக்கிறான்
நம்பிக்கையை.


செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

தீராத விளையாட்டு




உலகெங்கும் போர்க்களங்களில்
விளையாட்டுக் களங்களைப் போல்
வலம் வருகிறார்கள் இராணுவ வீரர்கள்.
விமானங்கள் டாங்கிகள் துப்பாக்கிகள்
அவர்களது விளையாட்டுக் கருவிகளாய் இருக்கின்றன.
வியூகங்கள் வகுத்து
எதிரிகளை வீழ்த்தி எக்காளமிடுகிறார்கள்;
ஊர்களை பெண்களைச் சூறையாடுகிறார்கள்;
சிலசமயம்
செத்துப்போன எதிரிகளின் உடல்கள் மீது
சிறுநீர் கழித்துக் கொண்டாடுகிறார்கள்.

வாழ்க்கை என்னும் விளையாட்டை
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் தாய்மார்கள்.
விதிகளை மீறி
தாய்மார்களின் விளையாட்டில் நுழைந்து
அவர்களைத் தோற்கடிக்கிறார்கள்
இராணுவ வீரர்கள்.
கனவுகள் சிதற
கருணை மிகுந்த தங்கள் விழிகளைத்
திறந்தபடி செத்துப்போகிறார்கள்
தாய்மார்கள்.

அவர்கள் விழிகள் வெறிக்கும் திசையில்
அவர்களது குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
விதிகளை மீறி
குழந்தைகளின் விளையாட்டில் நுழைந்து
அவர்களையும் தோற்கடிக்கிறார்கள்
இராணுவ வீரர்கள்.
பொம்மைகள் சிதற
கள்ளமில்லாக் கண்களை மூடியபடி
செத்துப் போகிறார்கள்
குழந்தைகள்..

குருதி உறைந்திருக்கும்
போர்க்களங்களெங்கும்
உயிரற்ற உடல்கள்
அடையாளந் தெரியாமல்
உறுப்புகள் பிய்த்தெறியப்பட்டுச்
சிதறிக் கிடக்கின்றன.
குருதியால் கூடுதலாக வரையப்பட்ட ரேகைகளோடு
தனித்தனியாய்க் கிடக்கின்றன
கணக்கற்ற கைகளும் கால்களும்.

அவற்றிலிருக்கும்
யாதாகிலுமொரு பிஞ்சுக்குழந்தையின் கைதான்
இனி துடைத்தாக வேண்டும்
விளையாட்டை நிறுத்தத் தெரியாத
கடவுளின் கண்ணீரை.



ஞாயிறு, 15 ஜூலை, 2012

இயற்கையின் பெருந்துளிகளும் சிறு துரும்பாகிய நானும்..2


5.
மரவட்டையே!
கணக்கற்ற
உன் எளிய கால்களால்
யுகங்களைக் கடந்து வந்திருக்கிறாய்..

நீ
என் மூதாதைகளின் மூதாதை..
நான்
உன்னை வணங்குகிறேன்.

6.
எனக்கெனவொரு நிழலை
வனைந்து தருகிறான்
கதிரவன்..
அது என்னைப் போல
இருப்பதேயில்லை..
சமயங்களில்
அதைப் போலவும்
அது இருப்பதில்லை.

7.
பெருமலையே!
நான் உன் காலடிகளில்
வீழ்ந்து கிடக்கிறேன்..
திகைப்பூண்டை மிதித்தவனாய்
உன்னைச் சுற்றி சுற்றி வருகிறேன்..

நீ
எங்கள் நகரத்தின்
கட்டடங்களைப் போல
சீர்மையாகவும் செம்மையாகவும் இல்லை..
எனினும்
உன் ஒழுங்கின்மைதான்
எத்தனை அழகு!
நானுன்
பிரம்மாண்டத்தின் முன்
மண்டியிட்டுப் பணிகிறேன்.

8.
தருவே!
உன் பெருநிழல் குறித்த
பெருமித உணர்வில்
உன் தலைக்கனம் கூடியிருக்கவில்லை..
எல்லாத் திசைகளிலும் நீண்டிருக்கும்
எண்ணற்ற கிளைக்கரங்களால்
நீ உன் இறைவனைத் தேடிக் கொண்டிருக்கவில்லை..

அன்றாடம் உதிர்த்திடும்
எண்ணற்ற இலைகளின் இழப்பில்
நீ பக்குவப்பட்டிருக்கிறாய்..

உன்னில் வந்தமரும் பறவைகள்
உனக்கானவையல்ல என்பதையும்
நீ அறிந்தேயிருக்கிறாய்..

உன்மீது எறும்புகள் ஊர்ந்தபோதும்
அணில்கள் விளையாடியபோதும்
நீ மறுப்பேதும் சொல்வதில்லை..

உன் கிளைகளில் பறவைகள் கூடுகட்டியபோதும்
உன் பொந்துகளில் பாம்புகள் குடியிருந்தபோதும்
நீ எதிர்ப்பேதும் காட்டுவதில்லை..

நீ நீயாகவே இருக்கிறாய்
வெயில் எரித்தபோதும்
மழை நனைத்தபோதும்..

நீ நீயாகவே இருக்கிறாய்
தென்றல் வருடியபோதும்
சூறாவளி கிளை முறித்தபோதும்..

குளிர் தருவே!
நீயே புத்தன்;
நான் உன்னைச் சரணடைகிறேன்.



சனி, 14 ஜூலை, 2012

அறமே கொல்லும்



நல்லேர் உழவர்யாம் நடுக்குற் றலைவதே
சொல்லேர் உழவர்தம் சொல்லி லடங்குமோ?
அறம்பாடிக் கொல்லும் திறமேது மில்லை
அறமே கொல்லும் ஒருநாளி லும்மை




உழவர்களைக் கொலை செய்தல்



வெகுசுலபமாய் இருக்கிறது
உழவர்களைக் கொலை செய்வது..

மென்னியை முறிக்காமல்,
முதுகெலும்பை நொறுக்காமல்,
குருதி பார்க்காமல்,
வெகுசுலபமாய் இருக்கிறது
உழவர்களைக் கொலை செய்வது..

தேவைக்கதிகமாய் நீங்கள் வாங்கிக் குவிக்கும்
நிலங்களின் கீழே புதைக்கப்பட்டிருக்கக் கூடும்
கொல்லப்பட்ட உழவர்களின் உடல்கள் சில..

மினரல் வாட்டர் போத்தல்களை
வாயில் கவிழ்க்கும் வேளைகளில்
உங்கள் நாவுகள் சுவைக்கக் கூடும்
கொல்லப்பட்ட உழவர்களின்
குருதியை, கண்ணீரை, வியர்வையை..

தொழிற்சாலைகளின் ஓரம்
நெருங்க நேர்ந்தால்
வெளிவரும் புகையில், கழிவுகளில்
உங்கள் நாசிகள் உணரக்கூடும்
கொல்லப்பட்ட உழவர்களின்
உடல்கள் கருகும் வீச்சத்தை..

இப்படியாகவும், இன்னும் வேறு வழிகளிலும்
வெகுசுல‌பமாகவே இருக்கிறது
உழவர்களைக் கொலை செய்வது..

ஆயினும்
இந்தக் கொலைகள் குறித்து
நீங்கள் விசாரிக்கப்படவோ
தண்டிக்கப்படவோ போவதில்லை..
குறைந்தபட்சம்
நீங்கள் குற்ற உணர்வுறவோ
கவலையுறவோ தேவையில்லை..

காரணம்
உழவர்களின் கொலைகள் யாவும்
தற்கொலைகள் என்றே
ஒருமனதாய்ப் புனைந்து வைக்கப்படும்.




இயற்கையின் பெருந்துளிகளும் சிறு துரும்பாகிய நானும்..1


1.
பெய்யும் மழையில்
பேனாவை நிரப்பிக் கொண்டு
எழுதத் தொடங்குகிறேன்
வானம்பாடியின்
பாடலொன்றை..

2.
இரவின் அடர்பனியில்
உறைந்து கிடந்த
எனது சொற்கள்
வெயிலவிழ்ந்த விடியலில்
வெடித்துக் கிளம்புகின்றன..

இனி
அவை எதைப் பேசக்கூடும்?
இரவின் அடர்பனியையா?
இளங்காலை வெயிலையா?

3.
பெருநிழல்கள் குறுகுமோர்
உச்சி வெயிற் பொழுதில்
முடிவற்ற துயரமென நீண்டிருக்கும்
யாருமற்ற தார்ச்சாலை மீது
அலை அலையாய் அந்தரத்தில்
நர்த்தனமிடுகிறது கானல்..

எட்டியெட்டித் தொடினும்
கிட்டாதெனத் தெரிந்தும்
துரத்தித் துரத்திக் குதூகலிக்கிறேன்..

கானலின் நடனத்திற்கு
நானொரு தப்புத்தாளம்.

4.
காலை முதல் மாலை வரை
தன் நிறங்களைக் கொண்டு
பூமியை நேர்த்தி செய்யும்
கதிரவன்
மாலையில்
மலைக்குத் திரும்புகிறான்
சோர்வோடும்
எக்கச்சக்கமாய் எஞ்சிவிட்ட
சிவப்பு நிறத்தோடும்..



சனி, 2 ஜூன், 2012

கோடையெனும் காதலி


1.
கோடைக்காலத்தில்
நான் எழுதிய கவிதைகளை
வாசித்துவிட்டு
தன்னைப் பற்றிய கவிதைகள்
ஏதுமில்லையென்று சினந்து
காறி உமிழ்கிறது கோடை..
பின்னர்
தகிக்கத் தொடங்குகின்றன
என் கவிதைகள் யாவும்..

2.
ஒரு மலரைப் போலவோ
சிறு தூறலைப் போலவோ
எப்போதும் இதமாய் இருப்பதில்லை;
ஒரு கோடையைப் போலவும்
உக்கிரமாய் இருக்கக்கூடும்
அன்பு.

3.
எல்லாக் கோடைகளிலும்
ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகவே
இருக்கிறார்கள்
சிறுவர்கள்.

4.
பேரன்பின் பிரகாசத்தால்
யாவற்றையும் நனைத்துக் கொண்டிருக்கிறது
கோடை..
வெறுப்பின் நிழலில்
பதுங்கிக் கொள்கிறார்கள்
மனிதர்கள்.

5.
யாரும் விரும்பாத
தனது முத்தங்களைச் சுமந்தபடி
மாலையில்
கடலுள் மாய்கிறது
கோடைச் சூரியன்.

6.
யுகம் யுகமாய்
நிராகரிக்கப்படும்
காதலைச் சேமித்தவாறு 
இம்முறையும்
கடந்து போகக்கூடும்
கோடையெனும் காதலி.
.
.

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

தனிமைக்காலங்கள்-2


1.
கண்களாலும் காதுகளாலும்
செய்யப்பட்ட சுவர்களின் நடுவே
நம்பிக் கொண்டிருக்கிறேன்
தனித்திருப்பதாய்..

2.
தனிமை
புத்தனெனில்
நான்
தனித்திருக்கவில்லை.

3.
எரிக்கப்பட்ட
பாம்பு மாத்திரையெனக்
கருகிக் கொண்டிருக்கிறேன்..
அதன் கருப்பு சாம்பலெனப்
பெருகிக் கொண்டேயிருக்கிறது
தனிமையின் துயரம்.

(பாம்பு மாத்திரை: தீபாவளியின் போது சிறுவர்கள் கொளுத்தி மகிழும் ஒருவகைப் பட்டாசு)

4.
நனைவதற்கு யாருமற்ற
நள்ளிரவு மழையின்
துயரத்தைப் பாடிக்கொண்டிருக்கிறேன்..
வாஞ்சையுடன்
சாளரம் வழியே
சாரலாய் எனை நனைத்து
என் தனிமையழிக்கிறது
மாமழை.

5.
காயசண்டிகையின் பசியென
வாட்டுகிறதென் தனிமை..
மணிமேகலையைத்
தேடியலைகிறேன்
நான்.

6.
இலைகளுதிர்ந்த
மொட்டை மரமென
நிற்கிறேன்..
அம்மரத்தடி சருகுகளெனச்
சலசலத்துக் கொண்டேயிருக்கிறது
தனிமைத்துயர்.

7.
விலக்கப்பட்ட கனியொரு பக்கம்
புத்தன் மறு பக்கம்
நடுவில்
மதில் மேல் பூனையெனப்
படுத்திருக்கிறது
தனிமை.
.
.

வெள்ளி, 30 மார்ச், 2012

ஓ..மனமே!


பொன்மனமாய் மின்னியதே யொருநாளி லப்போது
வன்மனமாய் புன்மனமா யதுவான திப்போது
நன்மனமாய் மீட்பதுவே பெரும்பா டெனும்போது
அம்மனந்தா னம்மணமா யாவதெப்போது?

சனி, 24 மார்ச், 2012

கேள் நெஞ்சே!

அதுசரி இதுசரி என்பார் நெஞ்சே
எதுசரியென முடிவெடு நீயே!

வருவதும் போவதும் இயல்பென நெஞ்சே
சிரிப்பதும் அழுவதும் கைவிடுவாயே!

இடியொடு மழைவரும் புயல்வரும் நெஞ்சே
நொடியும் கலங்கா திருந்திடுவாயே!

வெளிப்பட புரிபடத் தெரிவதேயில்லை  நெஞ்சே
தெளிந்திட உண்மையைத் தேடிடுவாயே!

அலைந்திடு திரிந்திடு அடிபடு நெஞ்சே
உண்மை உணர்ந்தபின் உய்ந்திடுவாயே!

பெரிதினும் பெரிதது பெண்மை நெஞ்சே
அறிந்துவுன் ஆணவம் அடங்கிடுவாயே!

இறையெது ஏதென  இரைந்திடும் நெஞ்சே
மறைவாய் உள்ளுள் உணர்ந்திடுவாயே!



சனி, 11 பிப்ரவரி, 2012

ஒழுங்கின்மையின் அழகு


எத்தனை நேர்த்தியாய் 
அழகாய்க் கலைக்கப்பட்டிருக்கின்றன
இந்தப் புத்தகங்கள்..

பெருந்தலைவர் ஒருவரின்
சுயத்தைப் புலம்பும் புத்தகம் 
சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருப்பதில்
புலம்பலின் வீரியம்
சற்றே மட்டுப்பட்டிருக்கிறது..

பெருங்கவிஞர் ஒருவரின்
கவிதைகளைச் சுமந்திருக்கும் புத்தகத்தில்
ஆங்காங்கே தட்டுப்படும் கிறுக்கல்கள்
பின்நவீனக் கவிதைகளையொத்து  பிரமிப்பூட்டுகின்றன..

பெரும் ஓவியர் ஒருவரின் ஓவியத்தை
முகப்பில் தாங்கியிருக்கும் புத்தகத்தில்
கண் காது மூக்கு உடலென எல்லா இடங்களிலும் 
செய்யப்பட்டிருக்கும் வண்ணத் தீற்றல்களில்
அவ்வோவியம் ஒரு நவீன ஓவியமென 
மாறியிருந்தது..

அத்தனையையும் அணு அணுவாய் ரசித்தபடி
இப்புத்தகங்களை ஒழுங்குபடுத்தி
மீண்டும் அடுக்கிக்  கொண்டிருக்கிறேன்..
பக்கத்து வீட்டு செவ்வந்திக் குட்டி 
இன்னொரு முறை
கலைத்தும் கிழித்தும் கிறுக்கியும் போவாளென்று..   
.
.


வெள்ளி, 27 ஜனவரி, 2012

கவிதை, கவிதையைத் தவிர வேறில்லை..5


கவிதை எழுதுவதைக்
கைவிடுவதெனத் தீர்மானித்தும்
இன்னும் விட்டபாடில்லை..

பின்பு
அது குறித்தும்
கவிதை புனைந்தாயிற்று..
.
.

சனி, 21 ஜனவரி, 2012

பொம்மை உடைக்கும் குழந்தைகள்


சில காகிதங்களோ
கொஞ்சம் களிமண்ணோ போதும்
நீங்கள் ஒரு பொம்மை செய்ய..

உங்கள் கற்பனைக்கேற்றவாறு
பொம்மை செய்து முடித்தபின்
பெருமகிழ்ச்சி கொள்கிறீர்கள்
முதல் குழந்தைக்கு தகப்பனானதைப் போல..

இப்போது பொம்மையை
உங்கள் குழந்தைக்கு
விளையாடத் தருகிறீர்கள் அதே மகிழ்ச்சியுடன்..
குழந்தையும் பெருமகிழ்ச்சி கொள்கிறது
பொம்மையோடு விளையாடி
அதை உடைத்தபின்..

ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி
ஒவ்வொன்றில் இருக்கக்கூடும்;
உங்களுக்கு பொம்மை செய்வதிலும்
உங்கள் குழந்தைக்கு பொம்மையை உடைப்பதிலும்
இருப்பதைப் போல..
.
.

புதன், 18 ஜனவரி, 2012

புயல் : ஒரு ஏழையின் சில கேள்விகள்


கேள்வி 1:
ஏழைகளின்
கூரைகளைப் பிய்த்தெறிந்த
இந்தப் புயலை அனுப்பிய
பெருமுதலாளி யார்?
கடவுளா?

கேள்வி 2:
வாயு
பகவானா?
அரக்கனா?

கேள்வி 3:
புயல் உருவாகுமிடம்
கடலா?
நரகமா?

கேள்வி 4:
நாங்கள்
பாவிகளாக இருக்கலாம்..
இந்த மரங்களும்
பறவைகளும்
என்ன பாவம் செய்திருக்கக் கூடும்?

கேள்வி 5:
குடிசைகள் இல்லாத
உலகம் படைக்க
இப்படி ஒரு குறுக்கு வழியா?

கேள்வி 6:
ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காணும் நீங்கள்
எங்கள் அழுகையில்
எதைக் கண்டு கொள்வீர்கள்?
.
.

செவ்வாய், 17 ஜனவரி, 2012

குறுங்கவிதைகள்


1.சிறகசைத்து மேலெழும்பும் பறவைகள்
பின் வீழ்கின்றன
சில இறகுகள்.

2.பெய்யும் மழை
நனைந்து கொண்டிருக்கிறது
வறண்ட ஆறு.

3.கொள்ளை அழகு
எப்படி அழைப்பேன்?
பெயர் தெரியாத பூ.
.
.

திங்கள், 16 ஜனவரி, 2012

முகவரியற்ற துயரம்



யாரோ யாருக்கோ
எழுதிய இக்கடிதத்தை
என் கைகளில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது
கடந்து போன வன்புயல்

மழையில் நனைந்திருக்கும் அது
கொஞ்சம் சேற்றையும்
நிறைய துயரத்தையும் சுமந்தபடி
என் கைகளில் கனத்துக் கொண்டிருக்கிறது

முகம் தெரியாத 
எவனோ ஒருவனின் வலிகளை 
வரிகளாய்க் கொண்டிருக்கும் அது
அவனது
வறுமை
இயலாமை
ஆற்றாமை என
துயரத்தின் பல பரிமாணங்களை
அடுக்கிக் கொண்டே செல்கிறது

பகிர்வதன் மூலம்
பெருந்துயரத்தைப் பாதியாக்கவே
எத்தனிக்கும் அது
எழுதப்பட்டவனிடம் எதையும்
யாசிக்கவுமில்லை; மண்டியிடவுமில்லை

புயல் விட்டுச் சென்ற சிதிலங்களின் நடுவே
நிராதரவாய் நின்று கொண்டிருக்கும் இவ்வேளையில்
என் கைகள் பற்றியிருக்கும் இக்கடிதத்தால்
இச்சூழலின் துயரம் 
ஒரு காட்டாறென
மேலும் மேலும் பெருகிக் கொண்டேயிருக்கிறது..
.
.

Twitter Bird Gadget