சனி, 28 ஆகஸ்ட், 2010

தனிமைக் காலங்கள்


.
1.
ஆறுதலாய் நான்..
பயமற்று
எப்போதும் என்னுடனிருக்கிறது
தனிமை.
----------------------------------------------------
2.
தனித்திருக்கிறேன்..
நிலவே
நீயேனும் வருவாயா
எனதறை நிரப்ப?
----------------------------------------------------
3.
என் தனிமை
அறிமுகம் செய்து கொள்கிறது
புத்தனிடம் தன்னை.
----------------------------------------------------
4.
நீண்ட நாள் தனிமை
துயரமானது;
தற்காலிகத் தனிமை
இன்னும் துயரமானது.
----------------------------------------------------
5.
தனிமையில் அழுவதில்
வசதியிருக்கிறது;
கோழையென்று யாரும்
குற்றம் சாட்டுவதில்லை.
----------------------------------------------------
6.
கடவுள் கூட
தனித்திருப்பதில்லை
மனிதக் கற்பனையில்.
----------------------------------------------------
7.
தனித்திருக்கின்றன
வானுக்கும் மண்ணுக்கும்
இடையில்
மழைத் துளிகள்.
----------------------------------------------------
8.
காலைச் சுற்றி வரும் நாயும்
தனிமையும் ஒன்று;
துரத்தியடிப்பது
நிரந்தரத் தீர்வாகாது.
ஒன்று
நாயை வளர்க்க வேண்டும்;
இல்லை
அதைக்  கொன்று போட வேண்டும்.
.
.

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

அலையும் இருப்பு

.
.
மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறேன்
குப்பைகள் நிறைந்ததான
உலகமிதில்..

தொடக்கத்தில்
எனக்கெனவொரு
குப்பை கையளிக்கப்பட்டு
அறிமுகப்படுத்தப்பட்டது
ஆன்மீகமென..

பின்னொரு நாளில்
வேறு சிலரால்
அதன் அடையாளம் மாற்றப்பட்டது
நாத்திகமென..

தொடர்ந்து
'துவம்'களெனவும் 'இசம்'களெனவும்
அதன் வடிவம் மாறிக்கொண்டேயிருந்தது;
நிறம் மாறிக்கொண்டேயிருக்கும்
பச்சோந்தியைப் போல..

ஆயினும்
பிறிதொருவரின் குப்பையை விடவும்
அது உயர்ந்ததாகவுமில்லை;
தாழ்ந்ததாகவுமில்லை
எந்தவொரு நாளிலும்..

அவ்வப்போது
கூட்டிப் பெருக்கி
வெளியே வீசிய பின்னும்
குறையாமல் கூடிக்கொண்டேயிருக்கிறது
குப்பை இன்னும்..

இப்போதெல்லாம்
நிலை கொள்ளாமல்
அலைந்து கொண்டேயிருக்கிறது
என்னிருப்பு;
குப்பைகளற்றதானவொரு
வேற்றிடம் தேடி..
.
.

சனி, 7 ஆகஸ்ட், 2010

நீயும் எனது அறையும்: சில காதல் குறிப்புகள்


குறிப்பு 1 
உன் வருகை நிகழும்
ஒவ்வொரு முறையும்
சொற்களற்ற
கவிதையையொத்திருக்கிறது
மௌனத்தால் நிரம்பியிருக்கும்
எனதறை..

குறிப்பு 2 
சொல்லிவிட்டு
எனதறைக்குள்
நீ
நுழையும்போதெல்லாம்
சொல்லாமலே வெளியேறுகின்றன
எனது கனவுகள்..

குறிப்பு 3 
நீ
அறியாதபோதும்
என் குறிப்பறிந்திருக்கின்றன 
நீ
உள்ளே நுழைந்ததும்
காற்றில் தானாகவே மூடிக் கொள்ளும்
எனதறையின் ஜன்னல்கள்..

குறிப்பு 4 
எனதறையின் 
எல்லாப்  பொருட்களும்
உன் தொடுதலின்
சுகமறிந்தவை;
என்னைத் தவிர..

குறிப்பு 5 
உன் விரல்பட்டு 
கிழிவதற்கென
காத்திருக்கிறது
நாள்தோறும்
எனதறையின் நாள்காட்டி..

குறிப்பு 6 
நிரம்பி வழிகிறது
எனதறையின் குப்பைத் தொட்டி 
உனக்கென நான்
எழுதிக் கிழித்த கடிதங்களால்..

குறிப்பு 7 
நாணமுற்ற பல்லிகள்
காணக் கிடைக்கின்றன
எனதறையின் சுவர்களில்
அது அவைகளுக்கு
நீ
அறிமுகம் செய்தது..

குறிப்பு 8 
உனக்கெனவொரு
வாசமிருப்பதை
அறிவிக்கிறது எனதறை
நீ
வந்து போனபின்..






Twitter Bird Gadget