சனி, 14 ஜூலை, 2012

உழவர்களைக் கொலை செய்தல்வெகுசுலபமாய் இருக்கிறது
உழவர்களைக் கொலை செய்வது..

மென்னியை முறிக்காமல்,
முதுகெலும்பை நொறுக்காமல்,
குருதி பார்க்காமல்,
வெகுசுலபமாய் இருக்கிறது
உழவர்களைக் கொலை செய்வது..

தேவைக்கதிகமாய் நீங்கள் வாங்கிக் குவிக்கும்
நிலங்களின் கீழே புதைக்கப்பட்டிருக்கக் கூடும்
கொல்லப்பட்ட உழவர்களின் உடல்கள் சில..

மினரல் வாட்டர் போத்தல்களை
வாயில் கவிழ்க்கும் வேளைகளில்
உங்கள் நாவுகள் சுவைக்கக் கூடும்
கொல்லப்பட்ட உழவர்களின்
குருதியை, கண்ணீரை, வியர்வையை..

தொழிற்சாலைகளின் ஓரம்
நெருங்க நேர்ந்தால்
வெளிவரும் புகையில், கழிவுகளில்
உங்கள் நாசிகள் உணரக்கூடும்
கொல்லப்பட்ட உழவர்களின்
உடல்கள் கருகும் வீச்சத்தை..

இப்படியாகவும், இன்னும் வேறு வழிகளிலும்
வெகுசுல‌பமாகவே இருக்கிறது
உழவர்களைக் கொலை செய்வது..

ஆயினும்
இந்தக் கொலைகள் குறித்து
நீங்கள் விசாரிக்கப்படவோ
தண்டிக்கப்படவோ போவதில்லை..
குறைந்தபட்சம்
நீங்கள் குற்ற உணர்வுறவோ
கவலையுறவோ தேவையில்லை..

காரணம்
உழவர்களின் கொலைகள் யாவும்
தற்கொலைகள் என்றே
ஒருமனதாய்ப் புனைந்து வைக்கப்படும்.
11 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வேதனைப் பட வைக்கும் வரிகள்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_13.html) சென்று பார்க்கவும். நன்றி !

Unknown சொன்னது…

வலைச்சரம் மூலம் உங்கள் பதிவை கண்டேன்... உழவர்கள் நிலை பற்றிய உங்கள் கவிதை அருமை... என் வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன்... "பாதை மாறும் பயணம்" கட்டுரை படித்து கருத்துரைக்கவும்... நன்றி

அம்பாளடியாள் சொன்னது…

காரணம்
உழவர்களின் கொலைகள் யாவும்
தற்கொலைகள் என்றே
ஒருமனதாய்ப் புனைந்து வைக்கப்படும்.

இது சத்தியமான வரிகள் .எதிர்காலத்தில் கட்டடங்கள்
மிஞ்சும் .ஆனால் உண்ண உணவு என்பது ???????????............
வலிதரும் வரிகள் .தொடர வாழ்த்துக்கள் .

cheena (சீனா) சொன்னது…

அன்பின் அப்துல் காதர் - உழவர்களின் கொலைகள் தற்கொலைகளாகக் கருதப்படும். உண்மை நிலை - என்ன செய்வது .. இயற்கையினை அழித்து செயற்கயகாக வீடுகல் கட்டிக் கொண்டிருக்கிறோம். கால்ம் போகும் போக்கு ஒன்றும் சொல்ல இயலாது. கவிதை அருமை - சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown சொன்னது…

அருமை

இடி முழக்கம் சொன்னது…

மனதை உருக்கும் கவிதை.. மனிதத்தை தட்டி எழுப்பும் வரிகள்......... என்ன ஆனாலும் நமக்கெல்லாம் சுடலை ஞானம் போல அப்பப்ப மனித நேயம் துளிர் விடும் அதே வேகத்தில் கருகியும் விடும்..

அப்துல் காதர் சொன்னது…

வாருங்கள் தனபாலன்!

வாருங்கள் ஆயிஷா!

வாருங்கள் அம்பாளடியாள்!

வாருங்கள் சீனா!

வாருங்கள் ஞானம் சேகர்!

அனைவருக்கும் எனது வணக்கங்களும் வரவேற்புகளும்!

அனைவரது மேலான பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

அப்துல் காதர் சொன்னது…

வலைச்சரத்தில் இக்கவிதையை அறிமுகப்படுத்திய நாடோடி அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

அப்துல் காதர் சொன்னது…

வாருங்கள் இடிமுழக்கம்!

நீங்கள் சொல்வது மிகச்சரியே! கருத்துக்கு மிக்க நன்றி!

ஜெயசரஸ்வதி.தி சொன்னது…

வலைச்சரம் மூலம் என் முதல் வருகை ...

நிதர்சனமான உண்மை ...
அருமையான பதிவு ,..!

அப்துல் காதர் சொன்னது…

நன்றிங்க ஜெயசரஸ்வதி!

Twitter Bird Gadget