ஞாயிறு, 31 ஜூலை, 2011

ஓர் இரவு..இருள் குறைந்த நகரத்தின்
இரைச்சலொழிந்த இவ்விரவில்
தனிமையைத் தின்று கொண்டிருக்கிறேன்
அல்லது
தனிமை என்னைத் தின்று கொண்டிருக்கிறது..

சுவர்க் கடிகாரத்தின் முள் நகரும் ஓசை
பேரிரைச்சலென செவி பிளக்கிறது..
இரவு விளக்கின் மெல்லிய வெளிச்சமோ
உச்சி சூரியனென உடலெரிக்கிறது..

அறைக்குள் நுழைந்து
பின் திடுக்கிட்டுத் திரும்பும்
எலிகளும் கரப்பான்களும்
நானின்னும் உறங்காதது குறித்து
எரிச்சலுறுகின்றன..

துயரத்தை யாரிடம்
பகிர்ந்து கொள்வதென யோசித்துக் கொண்டிருக்கையில்
’உச்’ கொட்டியவாறு
தங்கள் இரங்கலைப் பதிவு செய்கின்றன
சுவர்ப்பல்லிகள்..

நேரத்தை நகர்த்தவென
காற்றில் விரல் கொண்டு
நான் வரையும் ஓவியங்கள்
இந்த இரவைப் போலவே
அர்த்தமற்றிருக்கின்றன..

இத்தனை நீளமான
இந்த இரவைச் சபித்தபடி
படுக்கையில் புரள்கையில்
தொலைவில் ஒலிக்கிறது
சேவலொன்றின் கூவல்..

ஒருவழியாய்
இன்னும் சற்றைக்கெல்லாம்
முடிந்து விடும் இவ்விரவு
எனதிந்தக் கவிதையைப் போலவே..!

பின்குறிப்பு:
இரவு உறக்கம் பெரும்பாக்கியம்;
இரவில் உறங்குவோர் பேறு பெற்றோர்..!

(அறிஞர் அண்ணாவின் நாடகத் தலைப்பை இக்கவிதைக்கு நன்றியோடு பயன்படுத்தியிருக்கிறேன்..)

சனி, 16 ஜூலை, 2011

கவிதை, கவிதையைத் தவிர வேறில்லை..4

.
கவிதை செய்வதென தீர்மானித்தபின்
கை நழுவும் சொற்கள்
வந்து வந்து
கண் சிமிட்டிப் போகின்றன‌
கவிதையைக் கைவிடுவதென தீர்மானித்தபின்..

எனக்கும்
சொற்களுக்குமான‌
இவ்விளையாட்டில்
ஒப்புக்குச் சப்பாணியாய்
விழி பிதுங்கி நிற்கிறது
கவிதை..!
.
.

ஞாயிறு, 10 ஜூலை, 2011

கவிதை, கவிதையைத் தவிர வேறில்லை..3


அடர்ந்த வனங்களின்
நீண்ட இருள்பாதைகளைப் போல்
கவனமாய்க் கடக்க வேண்டியிருக்கிறது
வெகு நேர்த்தியாய் செய்யப்பட்டிருக்கும்
கவிதைகள் சிலவற்றை..


கவிதை, கவிதையைத் தவிர வேறில்லை..2


.
சொற்களில் இறங்கி
கவிதைகளைத்  தேடுபவர்கள்
சிலவற்றைக் கண்டு கொள்கிறார்கள்..
எஞ்சியவை
மர்மமாய்ப் புன்னகைத்தபடி
மறைவாய் நிற்கின்றன
சொற்களுக்கு வெளியே..
.
.

ஞாயிறு, 3 ஜூலை, 2011

கவிதை, கவிதையைத் தவிர வேறில்லை..1


அடுத்த கவிதைக்கென
தேடிக் கொண்டிருக்கையில்
தோட்டத்துக் குயில்
உதிர்த்துச் செல்கிறது
சொற்கள் சிலவற்றை..

அவற்றைக் கொண்டு
நிலவையெழுத
எத்தனிக்கையில்
அவை பறந்து செல்கின்றன
பட்டாம் பூச்சிகளென..

பின்
உறங்கும் பூனைக்குட்டியின் 
வெதுவெதுப்பான 
தழுவலைச் சொல்ல முயன்று
அதனின்றும்
வெளியேறுகின்றன அச்சொற்கள்..

தோட்டத்துக் குயில்
நிலவு
பட்டாம்பூச்சிகள்
பூனைக்குட்டி
என ஒவ்வொன்றாக
முயன்று தோற்றபின்
இறுதியில்
தன்னையே எழுதிக் கொள்கிறது 
இக்கவிதை..!        
.
.  
    
Twitter Bird Gadget