ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

இயற்கையின் பெருந்துளிகளும் சிறு துரும்பாகிய நானும்..3


9.
பெருமழைக்கெனத் தவமிருக்கிறது
ஓடையாய் சுருங்கிவிட்ட
நதிக்குழந்தை..
அப்பெருமழை நாளில்
அது
தன் தாய் வீடேகும்.

அதுவரை
தன் அலைகளைக்
கரைகளில் அறைந்து
அரற்றிக் கொண்டிருக்கும்
கடல்தாய்.

10.
களைத்துப்போன கோடை
வழித்தெறியும்
வியர்வைத் துளிகள்
வீழ்கின்றன
பருவமழையின் முதற்துளிகளாய்..

11.
பருவமழை பெய்யுமா
தெரியவில்லை;
உழவன் விதைத்துக் கொண்டிருக்கிறான்
நம்பிக்கையை.


செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

தீராத விளையாட்டு
உலகெங்கும் போர்க்களங்களில்
விளையாட்டுக் களங்களைப் போல்
வலம் வருகிறார்கள் இராணுவ வீரர்கள்.
விமானங்கள் டாங்கிகள் துப்பாக்கிகள்
அவர்களது விளையாட்டுக் கருவிகளாய் இருக்கின்றன.
வியூகங்கள் வகுத்து
எதிரிகளை வீழ்த்தி எக்காளமிடுகிறார்கள்;
ஊர்களை பெண்களைச் சூறையாடுகிறார்கள்;
சிலசமயம்
செத்துப்போன எதிரிகளின் உடல்கள் மீது
சிறுநீர் கழித்துக் கொண்டாடுகிறார்கள்.

வாழ்க்கை என்னும் விளையாட்டை
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் தாய்மார்கள்.
விதிகளை மீறி
தாய்மார்களின் விளையாட்டில் நுழைந்து
அவர்களைத் தோற்கடிக்கிறார்கள்
இராணுவ வீரர்கள்.
கனவுகள் சிதற
கருணை மிகுந்த தங்கள் விழிகளைத்
திறந்தபடி செத்துப்போகிறார்கள்
தாய்மார்கள்.

அவர்கள் விழிகள் வெறிக்கும் திசையில்
அவர்களது குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
விதிகளை மீறி
குழந்தைகளின் விளையாட்டில் நுழைந்து
அவர்களையும் தோற்கடிக்கிறார்கள்
இராணுவ வீரர்கள்.
பொம்மைகள் சிதற
கள்ளமில்லாக் கண்களை மூடியபடி
செத்துப் போகிறார்கள்
குழந்தைகள்..

குருதி உறைந்திருக்கும்
போர்க்களங்களெங்கும்
உயிரற்ற உடல்கள்
அடையாளந் தெரியாமல்
உறுப்புகள் பிய்த்தெறியப்பட்டுச்
சிதறிக் கிடக்கின்றன.
குருதியால் கூடுதலாக வரையப்பட்ட ரேகைகளோடு
தனித்தனியாய்க் கிடக்கின்றன
கணக்கற்ற கைகளும் கால்களும்.

அவற்றிலிருக்கும்
யாதாகிலுமொரு பிஞ்சுக்குழந்தையின் கைதான்
இனி துடைத்தாக வேண்டும்
விளையாட்டை நிறுத்தத் தெரியாத
கடவுளின் கண்ணீரை.Twitter Bird Gadget