5.
மரவட்டையே!
கணக்கற்ற
உன் எளிய கால்களால்
யுகங்களைக் கடந்து வந்திருக்கிறாய்..
நீ
என் மூதாதைகளின் மூதாதை..
நான்
உன்னை வணங்குகிறேன்.
6.
எனக்கெனவொரு நிழலை
வனைந்து தருகிறான்
கதிரவன்..
அது என்னைப் போல
இருப்பதேயில்லை..
சமயங்களில்
அதைப் போலவும்
அது இருப்பதில்லை.
7.
பெருமலையே!
நான் உன் காலடிகளில்
வீழ்ந்து கிடக்கிறேன்..
திகைப்பூண்டை மிதித்தவனாய்
உன்னைச் சுற்றி சுற்றி வருகிறேன்..
நீ
எங்கள் நகரத்தின்
கட்டடங்களைப் போல
சீர்மையாகவும் செம்மையாகவும் இல்லை..
எனினும்
உன் ஒழுங்கின்மைதான்
எத்தனை அழகு!
நானுன்
பிரம்மாண்டத்தின் முன்
மண்டியிட்டுப் பணிகிறேன்.
8.
தருவே!
உன் பெருநிழல் குறித்த
பெருமித உணர்வில்
உன் தலைக்கனம் கூடியிருக்கவில்லை..
எல்லாத் திசைகளிலும் நீண்டிருக்கும்
எண்ணற்ற கிளைக்கரங்களால்
நீ உன் இறைவனைத் தேடிக் கொண்டிருக்கவில்லை..
அன்றாடம் உதிர்த்திடும்
எண்ணற்ற இலைகளின் இழப்பில்
நீ பக்குவப்பட்டிருக்கிறாய்..
உன்னில் வந்தமரும் பறவைகள்
உனக்கானவையல்ல என்பதையும்
நீ அறிந்தேயிருக்கிறாய்..
உன்மீது எறும்புகள் ஊர்ந்தபோதும்
அணில்கள் விளையாடியபோதும்
நீ மறுப்பேதும் சொல்வதில்லை..
உன் கிளைகளில் பறவைகள் கூடுகட்டியபோதும்
உன் பொந்துகளில் பாம்புகள் குடியிருந்தபோதும்
நீ எதிர்ப்பேதும் காட்டுவதில்லை..
நீ நீயாகவே இருக்கிறாய்
வெயில் எரித்தபோதும்
மழை நனைத்தபோதும்..
நீ நீயாகவே இருக்கிறாய்
தென்றல் வருடியபோதும்
சூறாவளி கிளை முறித்தபோதும்..
குளிர் தருவே!
நீயே புத்தன்;
நான் உன்னைச் சரணடைகிறேன்.