சனி, 27 அக்டோபர், 2012

மணல்வெளித் துயரம்



முன்னொரு நாளில்
பாய்ந்திருந்த நதியின் தடங்களைத்
தனக்குள் புதைத்துக் கொண்டு
ஒரு பாலையென நீண்டு விரிந்து கிடக்கிறது
மணல்வெளி

தகிக்கும் அதன் வெம்மையின்
துயர் தணிக்கும் உபாயம் யாரறியக் கூடும்?

இரு கரைகளிலும்
அடர்ந்திருக்கும் பச்சை மரங்களின்
இலைகளில் கிளைகளில்
இன்னுமிருக்கக்கூடும் நதியின் எச்சங்கள்

அம்மரங்கள்
அசைந்து அசைந்து விசிறியும்
ஆற்றவியலாது நீள்கிறது
மணல்வெளியின் வெம்மைத்துயர்

அது
பருவமழையின் துக்க விசாரிப்புகளின்
போதாமையில்
தணிவதாயில்லை

நகரும் மேகங்கள்
கடந்து செல்லும் பறவைகள்
பயணிக்கும் நான்
யாரும் அறியக்கூடுவதில்லை;
காலணிகளற்றுக் கடந்துபோகும்
ஏதேனும் சில கால்கள் மட்டுமே
பகிர்ந்து கொள்ள முடியும்
அதன் வெம்மையின் துயரத்தை..

இருகரைகளையும் இணைக்கும்
இப்பாலத்தின் மீது
ரயிலில் கடக்கும் போதெல்லாம்
அதிர்ந்து அதிர்ந்து
விம்மி விம்மி அடங்குகின்றன
இப்பெரு மணல்வெளியும்
என் சிறுநெஞ்சமும்..


4 கருத்துரைகள்:

பூங்குழலி சொன்னது…

அம்மரங்கள்
அசைந்து அசைந்து விசிறியும்
ஆற்றவியலாது நீள்கிறது
மணல்வெளியின் வெம்மைத்துயர்

காலணிகளற்றுக் கடந்துபோகும்
கால்கள் மட்டுமே
பகிர்ந்து கொள்ள முடியும்
அதன் வெம்மையின் துயரத்தை

பூங்குழலி சொன்னது…

புதைந்து போனதொரு நதியின் துயர் சொல்லும் மனம் பற்றும் கவிதை

அப்துல் காதர் சொன்னது…

நன்றிங்க பூங்குழலி!

அப்துல் காதர் சொன்னது…

நன்றிங்க தனபாலன்!

Twitter Bird Gadget