ஞாயிறு, 13 அக்டோபர், 2013

செத்த நதிகளை அல்லது துயரங்களைச் சேகரிப்பவன்


செத்துப் போன நதிகளைச்
சேகரித்துக் கொண்டிருக்கிறேன்
இப்போதைக்கு அது என்
பொழுது போக்காயிருக்கிறது

பழங்கால நாணயங்களைப் போலவோ
புராதன ஓவியங்களைப் போலவோ
அல்லாமல்
வெகு எளிதாய் இருக்கிறது
செத்த நதிகளைச் சேகரிப்பது..

பிச்சைக்காரனின் தட்டில் கிடக்கும்
சில்லறைகளைப் போல
கொஞ்சமே கொஞ்சம் நீருடன்
குற்றுயிரும் குலையுயிருமாய்க்
கிடக்கும் நதிகளைக் கவனமாய்க்
குறித்து வைத்துக் கொள்கிறேன்;
என் எதிர்காலச் சேகரிப்பில்
அவை ஒரு நாள் வந்து சேரும்

செத்த நதிகளின் சேகரிப்பில்
என் சாதனை பேசப்படுமொரு நாளில்
கடற்கரையில் நின்றபடி
கடலை நோக்கிக் கேட்பேன்:
'உன்னிடம் திரும்பி வராத
நதிகள் குறித்து நீ அறிந்திருக்கிறாயா?' என்று;
'செத்துப்போன நதிகளின் ஆன்மாக்கள்
அலைந்து திரியும் தடங்களை
உன் நெடிய மணல்வெளியெங்கும்
நீ கண்டிருக்கிறாயா?' என்று

பின்னர்
ஆற்றவொணா ஆத்திரத்தில்
கடல் என்னை மூழ்கடித்து விடக் கூடும்
அல்லது
பெருந்துயரத்தில் அது வற்றிவிடக் கூடும்


Twitter Bird Gadget