சனி, 26 நவம்பர், 2011

குறுங்கவிதை


சற்று முன்
நிலவை மறைத்திருந்த மேகம்
விலகிவிட்டது
ஆயினும்
கலங்கியிருக்கிறது குளம்
இப்போது.
.
.

சனி, 5 நவம்பர், 2011

ஆயுதம் கொல்வோம்!



யாரேனும் எங்கேனும்
நாள்தோறும் செத்துக் கொண்டேயிருக்கிறார்கள்
எப்படிச் சாகக்கூடாதோ அப்படி...
இனத்தின் பேரால்
மதத்தின் பேரால்
மொழியின் பேரால்
சாதியின் பேரால்
பட்டினியால்
துரோகத்தால்
அவமானத்தால்
ஏமாற்றத்தால்
வன்மத்தால்
இன்னும் எண்ணற்ற காரணங்களால்..

தேவபானங்கள் அருந்தி
கடவுளர்கள் மயங்கியிருக்கும் வேளைகளில்
இந்தச் சாவுகள் நிகழ்ந்து விடுகின்றன
அல்லது நிகழ்த்தப்படுகின்றன..

பின்னர் மயக்கந் தெளிந்து பதறியடித்து
கடவுளர்கள் விழித்தெழும் வேளைகளில்
சர்வாதிகாரிகள் சிலர் வன்முறையால் சாகடிக்கப்படுகிறார்கள்
சிலர் நாடு கடத்தப்படுகிறார்கள்
இன்னும் சிலர்
தண்டனை என்னும் பேரால்
அரசுகளால் தூக்கிலிடப்படுகிறார்கள்..

அவசர அவசரமாய்க் கூடும் அறிவுஜீவிகள்
பன்னாட்டுத் தொலைக்காட்சிகளில்
கலந்து விவாதிக்கிறார்கள்-
மரண தண்டனை தேவையா இல்லையா என்று..
விவாதங்கள் முற்றுப் பெறுவதற்குள்
நிகழ்ந்துவிடுகின்றன மேலும் சில மரணங்கள்..

ஆயுதங்கள் குவிந்துவிட்ட உலகில்
இரவில் ஆடைகளைக் களைந்து
ஆயுதங்களைத் தரித்தபடி உறங்குகிறார்கள்..
எதிரிகளுடன் சமாதானம் பேசும் வேளைகளில்
மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களை
கமுக்கமாய்த் தடவி உறுதி செய்தபடி
உரக்கப் பேசுகிறார்கள்..

எதிரிகள் தீர்ந்து போன வேளைகளிலும்
ஆயுதங்களில் துருவேறாமல் பாதுகாக்க
சகோதரர்களைக் கொன்று பழகுகிறார்கள்..
காரணம் கேட்டால்
தொன்மங்களைத் துணைக்கழைக்கிறார்கள்..
ஆயுதங்களும் தீர்ந்து போனால்
பின் சொற்களைக் கூர்தீட்டத் தொடங்குகிறார்கள்..

திட்டமிட்டு எல்லாப் பாவங்களையும்
செவ்வனே செய்து முடித்தபின்
பாவச்சிலுவைகளைச் சுமக்க
இன்னொரு இளிச்சவாயனைத் தேடுகிறார்கள்..

எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும்
எதையும் செய்ய வக்கற்றவர்கள்
கவிதைகள் எழுதிப் பரிசு பெறுகிறார்கள்
அல்லது
மேடைகளில் முழங்கிக் கைத்தட்டல் பெறுகிறார்கள்..

படைத்தவன் எனப் போற்றப்படுபவன்
எல்லாவற்றையும் கண்டு மனம் வெம்பியபின்
ஒருநாள் செத்துப் போகக்கூடும்
எப்படிச் சாகக்கூடாதோ அப்படி..!



திசைகளைத் தொலைத்தவன்

.
.
யாரும் முன்னெப்போதும்
பயணித்திராத பாதைகளில் 
பயணித்திடவே எப்போதும் திட்டமிடுகிறேன்..

வெளிச்சத்தின் சுவடுகள் ஏதுமற்ற
இந்த இருள் பாதைகளையே
மீண்டும் மீண்டும் விரும்பித் தேர்கிறேன்..

வழி நடத்தவோ
பின் தொடரவோ யாருமற்ற
கைவிடப்பட்ட இந்தப் பாதைகளில்
வழித்துணை யாருமின்றி
பயணித்துக் கொண்டிருக்கிறேன்..

கொண்டாட்டங்களுடன்
நகர்ந்து கொண்டிருந்தாலும் 
ஒரு பிண ஊர்வலத்தின் துயரங்கள் 
நிறைந்தே  தொடர்கிறது என் பயணம்..

யாரும் இப்பாதைகளில்
என்னைத் தொடர்ந்து துயருறுவதைத் தவிர்க்கவே
தடயங்களை அழித்தபடி
முன்னேறிக் கொண்டிருக்கிறேன்..

இந்தப் பாதைகளின் குறுக்கே
பள்ளத்தாக்கோ பெருமலையோ ஆழ்கடலோ
எதுவும் தடையென எதிர்ப்படலாம்..
எனினும் மாற்றுப்பாதைகளைத் தேர்ந்தெடுத்தபடி
தொடர்ந்து பயணித்துக் கொண்டேயிருப்பேன்..

கைவிளக்கேந்திய கருணையாளன் எவனும்
எதிர்ப்படுவான் என்றோ
எனக்கு வழி காட்டுவான் என்றோ
இதுவரை ஆரூடம் சொல்லவில்லை
பட்சிகள் எவையும்..

என்னிடம் நம்பிக்கைகளுமில்லை;
அவநம்பிக்கைகளுமில்லை..
சொல்வதற்கென்றோ
விட்டுச் செல்வதற்கென்றோ எதுவுமில்லை..

திசைகளின் தேவையற்றிருப்பதால்
திசைகளைத் தொலைத்தபின்னும்
தொடர்ந்து கொண்டிருக்கிறது என் பயணம்..

பயணிப்பதைத் தவிர
வேறெதுவாய்  இருக்க முடியும்
ஒரு பயணியின் நோக்கம்..
நான் பயணி என்பதால்
பயணித்தேன்; பயணிக்கிறேன்; இன்னும் பயணிப்பேன்..!
.
.

Twitter Bird Gadget