சனி, 22 மே, 2010

குறுங்கவிதைகள்

.
.
ஊர்த் திருவிழா

ரசித்துக் கொண்டிருக்கிறேன்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை.
.
.

குறுங்கவிதைகள்

.
.
அமாவாசை இருட்டில்

தேடியும் கிடைக்கவில்லை

நிலவு.
.
.

உனக்குத் தெரியாது..


.
.

கடுஞ் சொற்களை வீசிவிட்டு
பின் 'வலித்திருக்குமோ'
என்றெண்ணி
வருந்திக் கொண்டிருக்கும்
உனக்குத் தெரியாது
ஒருபோதும்
எனக்கு வலிக்கச் செய்ய
உனக்குத் தெரியாதென்பது..!
.
.

பூவே..பெண்பூவே..



எல்லாப்
பூக்களை விடவும்
அழகானவளல்ல நீ..!

உன்னை விடவும்
அழகான பூக்கள்
இருக்கக் கூடும்..

ஒருவேளை
அவை இன்னும்
பரிணாமிக்காதவைகளாய்
இருக்கலாம்..!


ஞாயிறு, 16 மே, 2010

குறுங்கவிதைகள்

.
.
கடலைப்  போலவும்  இல்லை

மேகத்தைப் போலவும் இல்லை

மழை.
.
.

குறுங்கவிதைகள்

.
.
மழை பெய்து  கொண்டிருக்கிறது

கரையாமல் இருக்கிறது

வானவில்.
.
.

குறுங்கவிதைகள்

.
.
எதுவுமே தெரியவில்லை

எதைக் கண்டு பயம்

இருளில்.
.
.

குறுங்கவிதைகள்

.
.
துரத்திக் கொண்டிருக்கிறேன்

தொலைவில்  ஓடிக்கொண்டிருக்கிறது

வாழ்க்கை.
.
.

ஞாயிறு, 9 மே, 2010

பிரளய நாளொன்றில்..



பூமி
தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது
பிரளய நாளொன்றில்..

பூமியின் மறு உயிர்ப்பாகவும்
இருக்கக்கூடும்
பிரளயமென்பது..

அது
உலகம் உறங்கி வழியும்
இரவின் அமைதியிலோ
உலகம் விரைந்து இயங்கும்
பகலின் பரபரப்பிலோ
நிகழக் கூடும்..

அந்நாளில் கோப்பைத் தேநீருடன்
நாளிதழில் முந்தைய நாள் நிகழ்வுகளை
நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கக்கூடும்
நடக்கவிருக்கும் அபாயம் அறியாமல்..
அல்லது
சாலையை வெகுகவனமாய்க் கடந்து கொண்டிருக்கக்கூடும்
இனியும் கவனத்தில் கொள்வதற்கொன்றுமில்லை
என்பதறியாமல்..

உங்கள் பிள்ளைகள்
'ஒளிமயமான எதிர்காலம்' குறித்தான
தன்னம்பிக்கைக் கருத்தரங்கைச்
செவிமடுத்துக்  கொண்டிருக்கக்கூடும்
காலங்கள் முற்றுப் பெறப்போகும்
கதை தெரியாமல்..

உங்கள் வாழ்க்கைத்துணை
உங்களின் தவற்றை மன்னித்து விட்டதாய்
ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கக் கூடும்
பாவங்கள் மட்டுமின்றி
புண்ணியங்களும் தண்டிக்கப்படப் போகும்
தீர்ப்பு நாள் வந்துவிட்டது தெரியாமல்..

அப்பிரளய முடிவில்
நோவாவின் கப்பலைப் போன்றொரு
விண்வெளிக் கப்பலில்
நீங்கள் பயணம் செய்யக்கூடும்..
அராரத் மலையைப் போன்றொரு
வேற்றுக்  கிரகம்
உங்களுக்குத் தஞ்சமளிக்கவும் கூடும்..

எந்த ஒரு கணத்திலும்
பிரளயம் நிகழ்ந்து விடுவதற்கான
வாய்ப்புகள் இருக்கவே செய்தாலும்
மறு பரிணாமத்திற்கெனத் தெரிந்தெடுக்கப்படும் உயிர்களில்
நீங்களும் ஒருவராய் இருப்பதற்கான
வாய்ப்புகள் மட்டும்
இல்லாமலே  போகக்கூடும்..!



நிலவில் தொலைந்தவன்


.
.
நிலவுக்குத் தெரியாது
எத்தனையாவது
நிலவுக் கவிதை இதுவென்பது..

கணக்கு எதுவும் வைத்துக் கொள்ளாமல்
காலம் காலமாய்
அது காத்துக் கொண்டேயிருக்கிறது
குழந்தைகளுக்காக;
இன்னமும் மரணித்து விடாத
வடை சுடும் பாட்டியோடு..

முழு நிலவின் இரவுகளிலோ
குறைநிலவின் இரவுகளிலோ
தொடர்ந்து நிலவில்
தொலைந்த வண்ணமிருக்கிறார்கள்
கவிஞர்கள்
தங்கள் கவிதைகளைத் தேடி..

அதிக வெளிச்சமுமில்லாத
அதிக இருளுமில்லாத
நிலவின் இரவுகள்
அழகானவையென்று
அதிசயிக்கிறார்கள் கவிஞர்கள்..
அவற்றை விடவும் அழகானவை என்பேன்
நிலவற்ற இருட்டு இரவுகளை..

மனித வன்மங்களும் அசிங்கங்களும்
இருட்டுப் போர்வைக்குள்
தங்கள் முகங்களைப் புதைத்துக் கொள்வதால்
நானும் கூட
நிலவில் தொலைந்து போகிறேன்-
நிலவற்ற அமாவாசை இரவுகளில்..!
.
.
Twitter Bird Gadget