ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

ஒரே வானம் இரு பார்வைகள்



.
மெதுவாய்க்
கழிக்கப்படுகின்றன
வாரத்தின் ஐந்து நாட்கள்
சென்னை மாநகரில்..

நெரிசலான போக்குவரத்து..
உயரமான கட்டிடங்கள்..
எந்திர மயமான மனிதர்கள்..

அண்ணாந்து பார்க்கிறேன்
வானம் குறுகலாய்த் தெரிகிறது..

விரைந்து கழிகின்றன
வார இறுதி நாட்கள்
சொந்த ஊரில்..

மிதமான போக்குவரத்து..
சின்னஞ்சிறு வீடுகள்..
அசலான மனிதர்கள்..

அண்ணாந்து பார்க்கிறேன்
வானம் இப்போது
விசாலமாய்த் தெரிகிறது..
.
.
.

வாழ்க்கைக் கோலம்



.
.
எப்போதும் போல்
வெள்ளைக் கோலமா?
இல்லை
மார்கழி மாதத்து
வண்ணக் கோலமா?

இத்தனை
காலம் கடந்தும்
பிடிபடவேயில்லை வாழ்க்கை..

எதுவானாலும் என்ன?
கலைந்து போவதுதானே கோலம்...
.
.

சனி, 24 ஏப்ரல், 2010

சிலந்தி வீடுகள்



.
என் வீட்டைப் போலவே
எப்போதும் அழகானவை
உன் வீடுகள்..

ஆனாலும்
அறுத்தெறிகிறேன்
உன் வீடுகளை..

ஒருபோதும் அழகில்லை
என் வீட்டில்
உன் வீடுகள்..
.
.

குழந்தையின் நிலா



 .
ஒருநாள்
நிலா  கேட்டது
நண்பனின் குழந்தை..
வானத்தில் காட்டினேன்
சிரித்துப் போனது..

அடுத்த நாள் என்னிடம்
அது தன் காலால்
நசுக்கிக் காட்டியது
தெருவோரம் தேங்கியிருந்த
மழைநீரில்
நிலாவை..
.
.

சிக்கன் பிரியாணியும் ஜீவகாருண்யமும்




.
சிக்கன் பிரியாணி
வாசத்தைப் போலவே
எப்போதும் என்னை (எல்லோரையும்)
வசீகரிப்பதாய் இருக்கிறது
ஜீவகாருண்யம்..

ஆனாலும்
இன்னும் எனக்கு சாத்தியப்படவில்லை
சிக்கன் பிரியாணியைக் கைவிடுவது

இப்போதெல்லாம்
சிக்கன் பிரியாணியின்
சுவை குறைந்தேயிருக்கிறது
குற்ற உணர்வு கூடியிருப்பதால்..

குளியலறைத் தண்ணீரில்
அடித்துச் செல்லப்படாமல்
கைதூக்கி விடப்பட்ட எறும்புகளோ
கடித்தாலும் அடிக்காமல்
துரத்தி விடப்பட்ட கொசுக்களோ
அல்லது
இரவில் பொறியில் சிக்கி
காலையில் கொல்லப்படாமல்
வெளியேற்றப்பட்ட எலிகளோ
எவ்வளவு இருக்குமென்று
கணக்கு எதுவும் வைக்கவில்லை ..

நிச்சயமாக எப்போதும்
இதைவிடக் கூடுதலாகவே
இருக்கிறது
என் பிரியாணிக்காகக் கொல்லப்படும்
கோழிகளின் எண்ணிக்கை..

எனக்காகக் கொல்லாமல் விடப்பட்ட
கோழிகள்  இவையென்று
எதையும் என்னால்
அடையாளம் காண முடியாவிட்டாலும் கூட
எதிர்காலத்தில்
என்றாவது ஒருநாள்
எனக்கும் சாத்தியப்படலாம்
சிக்கன் பிரியாணியைக் கைவிடுவது..

ஆனாலும்
சிக்கன் பிரியாணியைக் கைவிட வேண்டிய
அவசியம் எதுவுமில்லை உங்களுக்கு
சலிப்புத் தட்டும்வரை..

சலிப்புத் தட்டியபின்
சிக்கன் பிரியாணியைக் கைவிட்டபின்
யாரேனும் ஒருநாள் காரணம் கேட்டால்
சலித்து விட்டதாய்ச் சொல்லாதீர்கள்..
பௌத்தமோ  ஜைனமோ
உங்களை ஆட்கொண்டு  விட்டதாகவோ
ஜீவகாருண்யம்
உங்களைக் கவர்ந்து விட்டதாகவோ
சொல்லுங்கள்..
சமூகம் சற்று மேலதிகமாய்
உங்களை கவனிக்கக் கூடும்..

காரணம்
எதுவாயிருந்தால் என்ன?
கொல்லப்படுவதற்கென்றே
வளர்க்கப்படும்
சில கோழிகள் காப்பாற்றப்படுவதே
கடைசியில் நோக்கமாய் இருக்கட்டும்..

(கோழிகள் மட்டுமல்ல அனைத்து உயிர்களையும் நேசிப்போம்..

கொல்லான் புலால் மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிர்களும் தொழும்
                                                     -திருவள்ளுவர் )
.
.

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

பதில்களற்ற கேள்விகள்

கேள்விகளே
மீண்டும் மீண்டும்
பரிமாறப்படுகின்றன
பதில்களுக்காய்ப்
பசித்திருக்கும் வேளைகளில்..

ஒரு புதிருக்கும்
இன்னொரு புதிருக்கும்
இடையே
அவகாசங்களாய்த் தரப்படுகின்றன
இன்னும் சில புதிர்கள்..

'அடைதல்'
இல்லாத பயணங்கள்
எப்போதும் முடிகின்றன
எதிர்த் திசைகளில்..

விடுதலை வேண்டியவர்களுக்காய்
விரல் நீட்டப்பட்ட திசைகளில்
இன்னும் பெரிதாய்க்
காத்திருக்கின்றன
வேறு சிறைகள்..

அன்றாட
ஒத்திகைகளினூடாக
விரைந்து கழிகின்றன நாட்கள்
நெடியதொரு தூக்கத்தை நோக்கி..

இன்னும்
இருக்கவே செய்கின்றன
இருட்டு மூலைகள்
தத்துவ வெளிச்சங்களால்
தீண்டப்படாமல்..

இறுதியில்
கேள்வியற்றதாகிறது
வாழ்க்கை
அதற்கான விடை
அதுவே என்பதை
அறிந்து அடங்கும்போது..

வாழ்க்கையைத் தவிர்த்தும்
வாழ்க்கைக்கு வெளியேயும்
எப்போதும் இருப்பதில்லை
இன்னொரு  வாழ்க்கை..!
.
.

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

காவல் தெய்வங்கள்



வீட்டு நாய்களைப் போலில்லை
தெருநாய்கள்;
அதிகம் நம்மால்  விரும்பப்படுவதில்லை
அவை.

அழைப்பதற்கென
பெயரெதுவும் இருப்பதில்லை
அவற்றுக்கு..
ஒரு வாய் சமிக்ஞை
போதுமானதாயிருக்கிறது
உங்கள் குறிப்பறிவதற்கு..

உயர் வகை உணவுகள்
எதுவும் தேவைப்படுவதேயில்லை
தெரு நாய்களுக்கு..
எஞ்சியவைகளும் 
குப்பையில் வீசப்படுபவைகளுமே
நிறைவாய் இருக்கின்றன அவற்றுக்கு..

தவறாமல் இரவில்
தத்தம் தெருக்களின் காவலுக்குத்
திரும்பி விடுகின்றன தெரு நாய்கள்
நீண்ட பகல் நேரத் திரிதலுக்குப் பின்னர்..

யாரும் கேட்காமலே
தெருக்களைக் காவல் புரியும்
காரணம் எதுவும் தெரிவதில்லை நமக்கு..
ஒருவேளை
காவல் தெய்வங்களின் கதைகளைப் போல
மரபு வழிக் கதைகள் எதுவும்
இடையில் மறக்கப்பட்டிருக்கலாம்
நம்மால்..

சிறுவர்களைத்தான்
அதிகம் பிடித்திருக்கிறது தெரு நாய்களுக்கு;
எப்போதும்
தெருக்களின் அடையாளங்களாய் இருக்கிறார்கள்
சிறுவர்களும் தெரு நாய்களும்..

எல்லாத் தெருக்களிலும்
உங்களால் காண முடியும்
கணிசமான அளவில் காயப்படுத்தப்பட்ட
கால் உடைக்கப்பட்ட தெரு நாய்களை..

ஆனாலும்
நம்மைப் போலில்லை தெரு நாய்கள்;
அவை மனிதர்களை
ஒருபோதும் புறக்கணிப்பதுமில்லை;
கலவியின் போது கல்லெறிவதுமில்லை.


சனி, 10 ஏப்ரல், 2010

சாயல்



வேண்டுமென்றே
இருட்டடிப்பு செய்வதற்காய்
வெகு கவனமாய்த்
திட்டமிடுகிறேன்.
பொறுக்கியெடுக்கப்பட்ட
சொற்களைக் கையாள்கிறேன்.
ஆனாலும்
தோற்றுப் போகிறேன்.

எப்போதும்
என் கவிதைகளில்
இருக்கவே செய்கிறது;
சற்றேனும்
உன் நினைவுகளின்
சாயல்.



'நான்'களின் உரையாடல்



ஏதோ ஒன்றை
உனக்குச் சொல்வதற்கெனத்
தொடங்கப்படுவதில்லை
எனது உரையாடல்.

ஆனாலும் எனக்கு
அவசியமாயிருக்கிறது
உன்னோடு உரையாடுவது.

சுவாரஸ்யம் ஏதுமின்றித்
தொடங்கி முடிகிறது
எனது உரையாடல்
முன்கூட்டியே அதன் உள்ளடக்கம்
உன்னால் அறியப்பட்டிருப்பதால்..

பின்
நீயும் என்னோடு
உரையாடத் தொடங்குகிறாய்
எனது இன்னொரு குரலில்..

எனது நியாயங்கள் உன்னாலும்
உனது நியாயங்கள் என்னாலும்
மீறப்படுவது குறித்து பரஸ்பரம்
கேள்விகள் எழுப்பிக் கொள்கிறோம்
நமது உரையாடலின் நடுவே..

நீ சில காரியங்களை
என்னை மீறிச் செய்ததற்காய்
நானும்
நான் சில காரியங்களை
உன்னை  மீறிச் செய்ததற்காய்
நீயும் ஒருவருக்கொருவர்
கண்டனங்களைப் பரிமாறிக் கொள்கிறோம்;
அண்டை நாடுகளின்
சம்பிரதாயங்களைப் போல..

பழைய நியாயங்கள் சாகடிக்கப்படுவதும்
புதிய நியாயங்கள் கட்டமைக்கப்படுவதும்
நிகழ்கிறது
நமது உரையாடலின் முடிவில்..

'நீ' யாரென்று
யாரேனும் வினவினால்
உன்னைத் தவிர்த்து
எனக்கு மட்டுமே தெரிந்த
அந்த உண்மையைச் சொல்வேன்;
'நீ'
இன்னொரு நானென்று..



ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

சொல்லப்படாதது..



'நான் உன்னை விட்டு
விலகப்போவதில்லை'
என உன் விழிகள் சொன்னாலும்
உதடுகள் ஏதும் சொல்லாதபோது
நான் என்ன செய்வது..?


முக்கோணம்

.
.
சரியான நேரத்தில்
எழுப்புகிறது 'அலாரம்'..

முன்னமேயே
விழித்துக் கொண்டது 'மனம்'..

இன்னும் போர்வையை விட்டு
விலக மறுக்கிறது 'உடல்'..
.
.

ஒழுங்கும் அலங்கோலமும்..



சுத்தம் செய்யப்பட்ட
செவ்வக அறை..
வெளிச்சம் உமிழும்
குழல் விளக்கு..
வட்டமாய்ச் சுழலும்
மின்விசிறி..
சரியான தேதி காட்டும்
நாள்காட்டி..
சீராய் அசையும்
கடிகாரப் பெண்டுலம்..
மடித்து வைக்கப்பட்ட
ஆடைகள்..
அடுக்கி வைக்கப்பட்ட
புத்தகங்கள்..
ஒழுங்காய் விரிக்கப்பட்ட   
படுக்கையில்
நான் மட்டும் அலங்கோலமாய்..
.
.

ஏக்கம்


 
ஒரு நிராகரிப்பில்தான்
தொடங்கியது என் காதல்..
ஆம்..!
என் மீதான உன் காதலை
நான் நிராகரித்த போதுதான்
உன் மீதான
என் காதல் தொடங்கியது..

முடிவு தெரியாத
இந்த பயணத்தில்
முடிந்து போனது
உன் காதல்..
முடிவற்று நீள்கிறது
என் ஏக்கம்..!
.
.

Twitter Bird Gadget