ஞாயிறு, 18 டிசம்பர், 2011

நினைவுக் கீறல்கள்

பாலினும் வெளுத்திருக்கும் என் பூனை;
அதன் இடக்கண்ணோ
வானின் நீலத்தை விழுங்கியிருக்கும்..
என்னையறிந்த யாவரும் என் பிள்ளையென்றே
கேலி செய்வர் அதனை;
இல்லையில்லை என்னை..

பூனை வளர்த்தல் பேரின்பமென்று
நான் சொன்னால் நீங்கள் நம்பிட வேண்டும்..
பூனை வளர்த்தல்
உங்கள் இதயத்தை மென்மையாக்குமென்று
நான் சொன்னால் நீங்கள் நம்பிட வேண்டும்..

எத்தனை அறிவு என் பூனைக்கென்று  நானறியேன்
ஆயினும் அடித்துச் சொல்வேன்
மற்றெந்த பூனையை விடவும் கூடுதலென்று..

என் வாழ்வின் கெட்ட நாளொன்றில்
தொலைந்து போனது என் பூனை..
ஏதாவது வண்டியில் அடிபட்டிருக்கக்கூடுமென்று
அச்சமூட்டினாள் அம்மா;
குறவன் குத்திப் போயிருக்கலாமென்று
நெஞ்சில் குத்தினார் எதிர்வீட்டுக்காரர்..
கிடைத்துவிடுமென்று
ஆறுதல் சொல்லவேயில்லை ஒருவரும்..

எதிர்ப்படுவோரிடமெல்லாம்
என் பூனை குறித்து விசாரிக்கும்போது
போலி வருத்தத்தோடு உதட்டைப் பிதுக்கிக் கொண்டிருந்தவர்கள்
கொஞ்ச நாள்களுக்குப் பின்
எரிச்சலோடு முறைக்க ஆரம்பிக்க
விசாரிப்பதை நிறுத்திக் கொண்டேன்..

என் பூனையோடு விளையாடும்
பக்கத்து வீட்டுச் சிறுவன் மட்டும்
என் துக்கத்தில் பங்கு கொண்டு
அவ்வப்போது ஆறுதல் சொல்வான்..

ஒருநாள் சிறுவன்
இன்னொரு பூனை வளர்க்கலாமென்றான்..
மனம் ஒப்பவில்லை..
வெள்ளை நிறத்தில் 
ஒரு கண் மட்டும் நீலமாயிருக்கும் பூனை
எங்கும் கிடைக்காது என்றேன்..
ஆமாமென்று ஆமோதித்தவன்
இப்போதெல்லாம் தன் வீட்டு நாயோடு
விளையாடிக் கொண்டிருக்கிறான்..

அடிக்கடி நீல வானை
அண்ணாந்து பார்த்து இப்போதெல்லாம்
நினைவு கூர்கிறேன் என் பூனையின் இடக்கண்ணை ..

அவ்வப்போது தடவிப் பார்த்துக் கொள்கிறேன்
பூனை என்னோடு விளையாடிய நாள்களில்
அது ஏற்படுத்தியிருந்த நகக்கீறல்களை..
கொஞ்சம் கொஞ்சமாய்
மறைந்து வரும் அவையும்
ஒருநாள்  காணாமல் போய்விடக்கூடும்
எனது பூனையைப் போலவே..!
.
.

செவ்வாய், 13 டிசம்பர், 2011

மழைக்கால ஞாயிறு


பொழிந்தது போதுமெனச்
சற்றே ஓய்வெடுத்துக் கொண்டது வானம்..
இன்னும் தாகமெனத்
தவளைகளைத் தூதனுப்பியது பூமி..

இடையறாத இடியின் இரைச்சலில்
இயல்பிழந்தது இரவு..
நாயொன்றின் சோகந்தோய்ந்த முகத்தை
நிழலாடச் செய்தது தொலைவில் அதன் ஓலம்..
தள்ளிப்போன விடியலின் தயவில்
இன்னும் கொஞ்சம் நீண்டது
தடைபட்ட உறக்கம்..

புதிதாய்ச் சமைந்த பெண்ணென
மெல்ல எட்டிப் பார்த்த ஞாயிறு
பின் வெடுக்கென மேகக்கதவுகளின் பின்னே
தன் தலையை இழுத்துக் கொண்டது ..
பரபரப்பில்லாத இந்த மழைநாள் என்னைப்போலவே
ஞாயிற்றுக்கும் ஞாயிறென ஆனது..

வானத்தை வெறித்தபடி
வெறுமையாய்க் கழிந்த இம்மழை ஞாயிற்றில்
கடைசி வரை வெளியே வரவேயில்லை
நானும் ஞாயிறும்!



Twitter Bird Gadget