சனி, 27 மார்ச், 2010

காற்றுக்கு வாசமில்லை..
காற்றுக்கென்று
வாசம் எதுவும் இருப்பதில்லை
பிரத்யேகமாய்..

மழை வாசம் முதல்
மண் வாசம் வரை
மலர் வாசம் முதல்
மரண வாசம் வரை
வேறு வேறு வாசங்களைச்
சுமந்து வருகிறது காற்று;
வேறு வேறு சந்தர்ப்பங்களில்.

காற்றுக்குத் தெரிந்திருக்கிறது
வாசங்களைக் கொண்டு
மனிதர்களை வகைப்படுத்த.
குழந்தையொன்றை
தாய்ப்பாலின் வாசம் கொண்டும்
உழைப்பாளியை
அழுக்கு வியர்வை
வாசங்களைக் கொண்டும்
இன்னும் சிலரை
செயற்கைப் பூச்சுகளின்
வாசங்களைக் கொண்டும்.

கூடுதலாய்
பசி கண்ணீர்
இவற்றின் வாசங்களும்
தெரிந்திருக்கலாம் காற்றுக்கு;
அது யாருடையதாய் இருந்த போதிலும்.

பூமியின் எல்லா வாசங்களையும்
சுமந்து வருகிறது காற்று;
விருப்பு வெறுப்பற்ற
ஒரு ஞானியைப் போல.

என்றாலும்
காற்றுக்கும் இப்போது மூச்சுத் திணறல்;
மெல்ல மெல்ல
பூமி கருகும் வாசத்தில்.

விரைவில்
பூமி ஒருநாள்
கைவிடப்படலாம் நிரந்தரமாய்;
காற்றாலும் அதன் வாசங்களாலும்.திங்கள், 15 மார்ச், 2010

ஜீவ நதிஅணை கட்டித்
தேக்கி வைக்கத் தேவையில்லாத
வற்றாத ஜீவ நதி
உன் நினைவுகள்.

அவை
நெடுந்தூரப் பயணங்களில்
என்னோடு சேர்ந்து பயணிக்கின்றன;
கடலோரக் கால் நனைப்புகளில்
என்னோடு சேர்ந்து நனைகின்றன;
மாலை நேர உலாவல்களில்
என்னோடு சேர்ந்து உலாவுகின்றன.

ஈமச் சடங்கொன்றினிடையே
மழிக்கப்படும்
தலை மயிர் போன்றதல்ல
உன் நினைவுகள்;
அவை
பத்திரப்படுத்தப்பட்ட
பழைய நாட்குறிப்பேடொன்றின் 
பக்கங்களில் உறங்கும்
எழுத்துகளைப் போன்றவை..!ஞாயிறு, 14 மார்ச், 2010

நம் பயணங்கள்
வேறு வேறு புள்ளிகளில்
தொடங்கின நம் பயணங்கள்.

இடையில் ஒருமுறை
சந்தித்துக் கொண்டோம்.
சந்திப்பின் முகவரி
எதுவென்று விளங்கவில்லை.

காதலோ என்று சிலசமயம்
நான் குழம்பியதுண்டு.
இறுதிவரை அதை நீ
உறுதி செய்யவுமில்லை;
இல்லையென்று மறுக்கவுமில்லை.

மீண்டும் தொடர்கின்றன
நம் பயணங்கள்;
அதனதன் பாதைகளில்..

முந்தைய சந்திப்பின்
சம்பவங்களை மெல்ல
அசைபோட்டபடி
மெதுவாய்க் கேட்கிறது மனம்,
'மீண்டும் ஒரு சந்திப்பு
எப்போது நிகழும்?'நீ தெரியாத சன்னல்கள்..
புதிதாய்க் குடிபோன வீட்டில்
நிறைய சன்னல்கள்.
ஒருபோதும்
அவற்றை நான் திறப்பதேயில்லை;
இனி
எந்த சன்னல் வழியாகவும்
நீ
தெரியப்போவதில்லை என்பதால்..!


உனக்கான கவிதைகள்நான் இன்னும்
எழுதவேயில்லை
எனக்குள் தோன்றும்
உனக்கான கவிதைகளை..!
.
.

நானும் நட்சத்திரங்களும்..


ஒவ்வொரு முறையும்
எண்ணி முடிப்பதற்குள்
விடிந்து விடுகின்றன
என் இரவுகள்..!
.
.
.

ஞாயிறு, 7 மார்ச், 2010

புத்தரின் மரச்சிற்பம்
ஒரு மரத்தின் மரிப்பில்
உனதுயிர்ப்பு..
நீயோ
உயிர்க்கொலைக்கு எதிர்ப்பு.

செதுக்கலின் நுணுக்கங்களில்
வியந்தே உன்னை வாங்கினேன்..
இன்று உன் மோனத்தில்
என்னை நானே செதுக்கிக் கொள்கிறேன்.

உடன்பாடில்லைதான்
உருவ வழிபாட்டில் என்றாலும்
ஒப்புக்கொள்கிறேன் வெட்கத்தோடு
உன்னை மட்டும் வணங்கத் தோன்றுவதை..

மார்கழி மாதத்து நாய்களாய்
அலையுமென் மனம்
உன்னைக் கண்டால்
ஒடுங்கிப் போகிறது
ஓட்டுக்குள் ஆமையாய்..

'மாற்றங்கள் மட்டுமே மாறுதலற்றவை'
என்றாய்;
மாறிப்போனேன் நானும்
மாறுபாடு ஏதுமின்றி..

உன் வினைக்கோட்பாட்டை
மாற்றங்களுடன்
ஏற்றுக் கொள்கிறது,
உன் சூனிய வாதத்தோடு
உடன்பட மறுக்கும்
என் பொருள் முதல்வாத அறிவு.

உன்னோடு நான் நிகழ்த்தும்
மௌன உரையாடல்களில்
எப்போதும் எஞ்சி நிற்கின்றன
விடை தெரியாத
என் கேள்விகள்.

உன் பாதையில் பயணப்படத்தான்
எத்தனிக்கிறது மனம்.
ஆனாலும்,
தன் கோரக் கைகளை நீட்டி
அவ்வப்போது பற்றி இழுக்கிறது
வாழ்க்கை.


Twitter Bird Gadget