சனி, 10 ஏப்ரல், 2010

'நான்'களின் உரையாடல்ஏதோ ஒன்றை
உனக்குச் சொல்வதற்கெனத்
தொடங்கப்படுவதில்லை
எனது உரையாடல்.

ஆனாலும் எனக்கு
அவசியமாயிருக்கிறது
உன்னோடு உரையாடுவது.

சுவாரஸ்யம் ஏதுமின்றித்
தொடங்கி முடிகிறது
எனது உரையாடல்
முன்கூட்டியே அதன் உள்ளடக்கம்
உன்னால் அறியப்பட்டிருப்பதால்..

பின்
நீயும் என்னோடு
உரையாடத் தொடங்குகிறாய்
எனது இன்னொரு குரலில்..

எனது நியாயங்கள் உன்னாலும்
உனது நியாயங்கள் என்னாலும்
மீறப்படுவது குறித்து பரஸ்பரம்
கேள்விகள் எழுப்பிக் கொள்கிறோம்
நமது உரையாடலின் நடுவே..

நீ சில காரியங்களை
என்னை மீறிச் செய்ததற்காய்
நானும்
நான் சில காரியங்களை
உன்னை  மீறிச் செய்ததற்காய்
நீயும் ஒருவருக்கொருவர்
கண்டனங்களைப் பரிமாறிக் கொள்கிறோம்;
அண்டை நாடுகளின்
சம்பிரதாயங்களைப் போல..

பழைய நியாயங்கள் சாகடிக்கப்படுவதும்
புதிய நியாயங்கள் கட்டமைக்கப்படுவதும்
நிகழ்கிறது
நமது உரையாடலின் முடிவில்..

'நீ' யாரென்று
யாரேனும் வினவினால்
உன்னைத் தவிர்த்து
எனக்கு மட்டுமே தெரிந்த
அந்த உண்மையைச் சொல்வேன்;
'நீ'
இன்னொரு நானென்று..0 கருத்துரைகள்:

Twitter Bird Gadget