ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

பதில்களற்ற கேள்விகள்

கேள்விகளே
மீண்டும் மீண்டும்
பரிமாறப்படுகின்றன
பதில்களுக்காய்ப்
பசித்திருக்கும் வேளைகளில்..

ஒரு புதிருக்கும்
இன்னொரு புதிருக்கும்
இடையே
அவகாசங்களாய்த் தரப்படுகின்றன
இன்னும் சில புதிர்கள்..

'அடைதல்'
இல்லாத பயணங்கள்
எப்போதும் முடிகின்றன
எதிர்த் திசைகளில்..

விடுதலை வேண்டியவர்களுக்காய்
விரல் நீட்டப்பட்ட திசைகளில்
இன்னும் பெரிதாய்க்
காத்திருக்கின்றன
வேறு சிறைகள்..

அன்றாட
ஒத்திகைகளினூடாக
விரைந்து கழிகின்றன நாட்கள்
நெடியதொரு தூக்கத்தை நோக்கி..

இன்னும்
இருக்கவே செய்கின்றன
இருட்டு மூலைகள்
தத்துவ வெளிச்சங்களால்
தீண்டப்படாமல்..

இறுதியில்
கேள்வியற்றதாகிறது
வாழ்க்கை
அதற்கான விடை
அதுவே என்பதை
அறிந்து அடங்கும்போது..

வாழ்க்கையைத் தவிர்த்தும்
வாழ்க்கைக்கு வெளியேயும்
எப்போதும் இருப்பதில்லை
இன்னொரு  வாழ்க்கை..!
.
.

0 கருத்துரைகள்:

Twitter Bird Gadget