ஞாயிறு, 15 ஜூலை, 2012

இயற்கையின் பெருந்துளிகளும் சிறு துரும்பாகிய நானும்..2


5.
மரவட்டையே!
கணக்கற்ற
உன் எளிய கால்களால்
யுகங்களைக் கடந்து வந்திருக்கிறாய்..

நீ
என் மூதாதைகளின் மூதாதை..
நான்
உன்னை வணங்குகிறேன்.

6.
எனக்கெனவொரு நிழலை
வனைந்து தருகிறான்
கதிரவன்..
அது என்னைப் போல
இருப்பதேயில்லை..
சமயங்களில்
அதைப் போலவும்
அது இருப்பதில்லை.

7.
பெருமலையே!
நான் உன் காலடிகளில்
வீழ்ந்து கிடக்கிறேன்..
திகைப்பூண்டை மிதித்தவனாய்
உன்னைச் சுற்றி சுற்றி வருகிறேன்..

நீ
எங்கள் நகரத்தின்
கட்டடங்களைப் போல
சீர்மையாகவும் செம்மையாகவும் இல்லை..
எனினும்
உன் ஒழுங்கின்மைதான்
எத்தனை அழகு!
நானுன்
பிரம்மாண்டத்தின் முன்
மண்டியிட்டுப் பணிகிறேன்.

8.
தருவே!
உன் பெருநிழல் குறித்த
பெருமித உணர்வில்
உன் தலைக்கனம் கூடியிருக்கவில்லை..
எல்லாத் திசைகளிலும் நீண்டிருக்கும்
எண்ணற்ற கிளைக்கரங்களால்
நீ உன் இறைவனைத் தேடிக் கொண்டிருக்கவில்லை..

அன்றாடம் உதிர்த்திடும்
எண்ணற்ற இலைகளின் இழப்பில்
நீ பக்குவப்பட்டிருக்கிறாய்..

உன்னில் வந்தமரும் பறவைகள்
உனக்கானவையல்ல என்பதையும்
நீ அறிந்தேயிருக்கிறாய்..

உன்மீது எறும்புகள் ஊர்ந்தபோதும்
அணில்கள் விளையாடியபோதும்
நீ மறுப்பேதும் சொல்வதில்லை..

உன் கிளைகளில் பறவைகள் கூடுகட்டியபோதும்
உன் பொந்துகளில் பாம்புகள் குடியிருந்தபோதும்
நீ எதிர்ப்பேதும் காட்டுவதில்லை..

நீ நீயாகவே இருக்கிறாய்
வெயில் எரித்தபோதும்
மழை நனைத்தபோதும்..

நீ நீயாகவே இருக்கிறாய்
தென்றல் வருடியபோதும்
சூறாவளி கிளை முறித்தபோதும்..

குளிர் தருவே!
நீயே புத்தன்;
நான் உன்னைச் சரணடைகிறேன்.



சனி, 14 ஜூலை, 2012

அறமே கொல்லும்



நல்லேர் உழவர்யாம் நடுக்குற் றலைவதே
சொல்லேர் உழவர்தம் சொல்லி லடங்குமோ?
அறம்பாடிக் கொல்லும் திறமேது மில்லை
அறமே கொல்லும் ஒருநாளி லும்மை




உழவர்களைக் கொலை செய்தல்



வெகுசுலபமாய் இருக்கிறது
உழவர்களைக் கொலை செய்வது..

மென்னியை முறிக்காமல்,
முதுகெலும்பை நொறுக்காமல்,
குருதி பார்க்காமல்,
வெகுசுலபமாய் இருக்கிறது
உழவர்களைக் கொலை செய்வது..

தேவைக்கதிகமாய் நீங்கள் வாங்கிக் குவிக்கும்
நிலங்களின் கீழே புதைக்கப்பட்டிருக்கக் கூடும்
கொல்லப்பட்ட உழவர்களின் உடல்கள் சில..

மினரல் வாட்டர் போத்தல்களை
வாயில் கவிழ்க்கும் வேளைகளில்
உங்கள் நாவுகள் சுவைக்கக் கூடும்
கொல்லப்பட்ட உழவர்களின்
குருதியை, கண்ணீரை, வியர்வையை..

தொழிற்சாலைகளின் ஓரம்
நெருங்க நேர்ந்தால்
வெளிவரும் புகையில், கழிவுகளில்
உங்கள் நாசிகள் உணரக்கூடும்
கொல்லப்பட்ட உழவர்களின்
உடல்கள் கருகும் வீச்சத்தை..

இப்படியாகவும், இன்னும் வேறு வழிகளிலும்
வெகுசுல‌பமாகவே இருக்கிறது
உழவர்களைக் கொலை செய்வது..

ஆயினும்
இந்தக் கொலைகள் குறித்து
நீங்கள் விசாரிக்கப்படவோ
தண்டிக்கப்படவோ போவதில்லை..
குறைந்தபட்சம்
நீங்கள் குற்ற உணர்வுறவோ
கவலையுறவோ தேவையில்லை..

காரணம்
உழவர்களின் கொலைகள் யாவும்
தற்கொலைகள் என்றே
ஒருமனதாய்ப் புனைந்து வைக்கப்படும்.




இயற்கையின் பெருந்துளிகளும் சிறு துரும்பாகிய நானும்..1


1.
பெய்யும் மழையில்
பேனாவை நிரப்பிக் கொண்டு
எழுதத் தொடங்குகிறேன்
வானம்பாடியின்
பாடலொன்றை..

2.
இரவின் அடர்பனியில்
உறைந்து கிடந்த
எனது சொற்கள்
வெயிலவிழ்ந்த விடியலில்
வெடித்துக் கிளம்புகின்றன..

இனி
அவை எதைப் பேசக்கூடும்?
இரவின் அடர்பனியையா?
இளங்காலை வெயிலையா?

3.
பெருநிழல்கள் குறுகுமோர்
உச்சி வெயிற் பொழுதில்
முடிவற்ற துயரமென நீண்டிருக்கும்
யாருமற்ற தார்ச்சாலை மீது
அலை அலையாய் அந்தரத்தில்
நர்த்தனமிடுகிறது கானல்..

எட்டியெட்டித் தொடினும்
கிட்டாதெனத் தெரிந்தும்
துரத்தித் துரத்திக் குதூகலிக்கிறேன்..

கானலின் நடனத்திற்கு
நானொரு தப்புத்தாளம்.

4.
காலை முதல் மாலை வரை
தன் நிறங்களைக் கொண்டு
பூமியை நேர்த்தி செய்யும்
கதிரவன்
மாலையில்
மலைக்குத் திரும்புகிறான்
சோர்வோடும்
எக்கச்சக்கமாய் எஞ்சிவிட்ட
சிவப்பு நிறத்தோடும்..



சனி, 2 ஜூன், 2012

கோடையெனும் காதலி


1.
கோடைக்காலத்தில்
நான் எழுதிய கவிதைகளை
வாசித்துவிட்டு
தன்னைப் பற்றிய கவிதைகள்
ஏதுமில்லையென்று சினந்து
காறி உமிழ்கிறது கோடை..
பின்னர்
தகிக்கத் தொடங்குகின்றன
என் கவிதைகள் யாவும்..

2.
ஒரு மலரைப் போலவோ
சிறு தூறலைப் போலவோ
எப்போதும் இதமாய் இருப்பதில்லை;
ஒரு கோடையைப் போலவும்
உக்கிரமாய் இருக்கக்கூடும்
அன்பு.

3.
எல்லாக் கோடைகளிலும்
ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகவே
இருக்கிறார்கள்
சிறுவர்கள்.

4.
பேரன்பின் பிரகாசத்தால்
யாவற்றையும் நனைத்துக் கொண்டிருக்கிறது
கோடை..
வெறுப்பின் நிழலில்
பதுங்கிக் கொள்கிறார்கள்
மனிதர்கள்.

5.
யாரும் விரும்பாத
தனது முத்தங்களைச் சுமந்தபடி
மாலையில்
கடலுள் மாய்கிறது
கோடைச் சூரியன்.

6.
யுகம் யுகமாய்
நிராகரிக்கப்படும்
காதலைச் சேமித்தவாறு 
இம்முறையும்
கடந்து போகக்கூடும்
கோடையெனும் காதலி.
.
.

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

தனிமைக்காலங்கள்-2


1.
கண்களாலும் காதுகளாலும்
செய்யப்பட்ட சுவர்களின் நடுவே
நம்பிக் கொண்டிருக்கிறேன்
தனித்திருப்பதாய்..

2.
தனிமை
புத்தனெனில்
நான்
தனித்திருக்கவில்லை.

3.
எரிக்கப்பட்ட
பாம்பு மாத்திரையெனக்
கருகிக் கொண்டிருக்கிறேன்..
அதன் கருப்பு சாம்பலெனப்
பெருகிக் கொண்டேயிருக்கிறது
தனிமையின் துயரம்.

(பாம்பு மாத்திரை: தீபாவளியின் போது சிறுவர்கள் கொளுத்தி மகிழும் ஒருவகைப் பட்டாசு)

4.
நனைவதற்கு யாருமற்ற
நள்ளிரவு மழையின்
துயரத்தைப் பாடிக்கொண்டிருக்கிறேன்..
வாஞ்சையுடன்
சாளரம் வழியே
சாரலாய் எனை நனைத்து
என் தனிமையழிக்கிறது
மாமழை.

5.
காயசண்டிகையின் பசியென
வாட்டுகிறதென் தனிமை..
மணிமேகலையைத்
தேடியலைகிறேன்
நான்.

6.
இலைகளுதிர்ந்த
மொட்டை மரமென
நிற்கிறேன்..
அம்மரத்தடி சருகுகளெனச்
சலசலத்துக் கொண்டேயிருக்கிறது
தனிமைத்துயர்.

7.
விலக்கப்பட்ட கனியொரு பக்கம்
புத்தன் மறு பக்கம்
நடுவில்
மதில் மேல் பூனையெனப்
படுத்திருக்கிறது
தனிமை.
.
.

வெள்ளி, 30 மார்ச், 2012

ஓ..மனமே!


பொன்மனமாய் மின்னியதே யொருநாளி லப்போது
வன்மனமாய் புன்மனமா யதுவான திப்போது
நன்மனமாய் மீட்பதுவே பெரும்பா டெனும்போது
அம்மனந்தா னம்மணமா யாவதெப்போது?

சனி, 24 மார்ச், 2012

கேள் நெஞ்சே!

அதுசரி இதுசரி என்பார் நெஞ்சே
எதுசரியென முடிவெடு நீயே!

வருவதும் போவதும் இயல்பென நெஞ்சே
சிரிப்பதும் அழுவதும் கைவிடுவாயே!

இடியொடு மழைவரும் புயல்வரும் நெஞ்சே
நொடியும் கலங்கா திருந்திடுவாயே!

வெளிப்பட புரிபடத் தெரிவதேயில்லை  நெஞ்சே
தெளிந்திட உண்மையைத் தேடிடுவாயே!

அலைந்திடு திரிந்திடு அடிபடு நெஞ்சே
உண்மை உணர்ந்தபின் உய்ந்திடுவாயே!

பெரிதினும் பெரிதது பெண்மை நெஞ்சே
அறிந்துவுன் ஆணவம் அடங்கிடுவாயே!

இறையெது ஏதென  இரைந்திடும் நெஞ்சே
மறைவாய் உள்ளுள் உணர்ந்திடுவாயே!



சனி, 11 பிப்ரவரி, 2012

ஒழுங்கின்மையின் அழகு


எத்தனை நேர்த்தியாய் 
அழகாய்க் கலைக்கப்பட்டிருக்கின்றன
இந்தப் புத்தகங்கள்..

பெருந்தலைவர் ஒருவரின்
சுயத்தைப் புலம்பும் புத்தகம் 
சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருப்பதில்
புலம்பலின் வீரியம்
சற்றே மட்டுப்பட்டிருக்கிறது..

பெருங்கவிஞர் ஒருவரின்
கவிதைகளைச் சுமந்திருக்கும் புத்தகத்தில்
ஆங்காங்கே தட்டுப்படும் கிறுக்கல்கள்
பின்நவீனக் கவிதைகளையொத்து  பிரமிப்பூட்டுகின்றன..

பெரும் ஓவியர் ஒருவரின் ஓவியத்தை
முகப்பில் தாங்கியிருக்கும் புத்தகத்தில்
கண் காது மூக்கு உடலென எல்லா இடங்களிலும் 
செய்யப்பட்டிருக்கும் வண்ணத் தீற்றல்களில்
அவ்வோவியம் ஒரு நவீன ஓவியமென 
மாறியிருந்தது..

அத்தனையையும் அணு அணுவாய் ரசித்தபடி
இப்புத்தகங்களை ஒழுங்குபடுத்தி
மீண்டும் அடுக்கிக்  கொண்டிருக்கிறேன்..
பக்கத்து வீட்டு செவ்வந்திக் குட்டி 
இன்னொரு முறை
கலைத்தும் கிழித்தும் கிறுக்கியும் போவாளென்று..   
.
.


வெள்ளி, 27 ஜனவரி, 2012

கவிதை, கவிதையைத் தவிர வேறில்லை..5


கவிதை எழுதுவதைக்
கைவிடுவதெனத் தீர்மானித்தும்
இன்னும் விட்டபாடில்லை..

பின்பு
அது குறித்தும்
கவிதை புனைந்தாயிற்று..
.
.

Twitter Bird Gadget