ஞாயிறு, 31 ஜூலை, 2011

ஓர் இரவு..



இருள் குறைந்த நகரத்தின்
இரைச்சலொழிந்த இவ்விரவில்
தனிமையைத் தின்று கொண்டிருக்கிறேன்
அல்லது
தனிமை என்னைத் தின்று கொண்டிருக்கிறது..

சுவர்க் கடிகாரத்தின் முள் நகரும் ஓசை
பேரிரைச்சலென செவி பிளக்கிறது..
இரவு விளக்கின் மெல்லிய வெளிச்சமோ
உச்சி சூரியனென உடலெரிக்கிறது..

அறைக்குள் நுழைந்து
பின் திடுக்கிட்டுத் திரும்பும்
எலிகளும் கரப்பான்களும்
நானின்னும் உறங்காதது குறித்து
எரிச்சலுறுகின்றன..

துயரத்தை யாரிடம்
பகிர்ந்து கொள்வதென யோசித்துக் கொண்டிருக்கையில்
’உச்’ கொட்டியவாறு
தங்கள் இரங்கலைப் பதிவு செய்கின்றன
சுவர்ப்பல்லிகள்..

நேரத்தை நகர்த்தவென
காற்றில் விரல் கொண்டு
நான் வரையும் ஓவியங்கள்
இந்த இரவைப் போலவே
அர்த்தமற்றிருக்கின்றன..

இத்தனை நீளமான
இந்த இரவைச் சபித்தபடி
படுக்கையில் புரள்கையில்
தொலைவில் ஒலிக்கிறது
சேவலொன்றின் கூவல்..

ஒருவழியாய்
இன்னும் சற்றைக்கெல்லாம்
முடிந்து விடும் இவ்விரவு
எனதிந்தக் கவிதையைப் போலவே..!

பின்குறிப்பு:
இரவு உறக்கம் பெரும்பாக்கியம்;
இரவில் உறங்குவோர் பேறு பெற்றோர்..!

(அறிஞர் அண்ணாவின் நாடகத் தலைப்பை இக்கவிதைக்கு நன்றியோடு பயன்படுத்தியிருக்கிறேன்..)

சனி, 16 ஜூலை, 2011

கவிதை, கவிதையைத் தவிர வேறில்லை..4

.
கவிதை செய்வதென தீர்மானித்தபின்
கை நழுவும் சொற்கள்
வந்து வந்து
கண் சிமிட்டிப் போகின்றன‌
கவிதையைக் கைவிடுவதென தீர்மானித்தபின்..

எனக்கும்
சொற்களுக்குமான‌
இவ்விளையாட்டில்
ஒப்புக்குச் சப்பாணியாய்
விழி பிதுங்கி நிற்கிறது
கவிதை..!
.
.

ஞாயிறு, 10 ஜூலை, 2011

கவிதை, கவிதையைத் தவிர வேறில்லை..3


அடர்ந்த வனங்களின்
நீண்ட இருள்பாதைகளைப் போல்
கவனமாய்க் கடக்க வேண்டியிருக்கிறது
வெகு நேர்த்தியாய் செய்யப்பட்டிருக்கும்
கவிதைகள் சிலவற்றை..


கவிதை, கவிதையைத் தவிர வேறில்லை..2


.
சொற்களில் இறங்கி
கவிதைகளைத்  தேடுபவர்கள்
சிலவற்றைக் கண்டு கொள்கிறார்கள்..
எஞ்சியவை
மர்மமாய்ப் புன்னகைத்தபடி
மறைவாய் நிற்கின்றன
சொற்களுக்கு வெளியே..
.
.

ஞாயிறு, 3 ஜூலை, 2011

கவிதை, கவிதையைத் தவிர வேறில்லை..1


அடுத்த கவிதைக்கென
தேடிக் கொண்டிருக்கையில்
தோட்டத்துக் குயில்
உதிர்த்துச் செல்கிறது
சொற்கள் சிலவற்றை..

அவற்றைக் கொண்டு
நிலவையெழுத
எத்தனிக்கையில்
அவை பறந்து செல்கின்றன
பட்டாம் பூச்சிகளென..

பின்
உறங்கும் பூனைக்குட்டியின் 
வெதுவெதுப்பான 
தழுவலைச் சொல்ல முயன்று
அதனின்றும்
வெளியேறுகின்றன அச்சொற்கள்..

தோட்டத்துக் குயில்
நிலவு
பட்டாம்பூச்சிகள்
பூனைக்குட்டி
என ஒவ்வொன்றாக
முயன்று தோற்றபின்
இறுதியில்
தன்னையே எழுதிக் கொள்கிறது 
இக்கவிதை..!        
.
.  
    

சனி, 18 ஜூன், 2011

செய்வது இன்னதென அறியாதிருக்கிறாய்..

தெருவோரமாய்க்
குவித்து வைக்கப்பட்டிருக்கும்
மணலைச்
சிதறடித்து விளையாடும்
சிறுவர்களைப் போல 
உன் பார்வையால்
சிதறடித்து விடுகிறாய்
என் கவனம் மொத்தத்தையும்..

சிதறியவற்றைச் சேகரித்து
பின் நான் கட்டும்
மணல் வீடுகளையோ 
அதே சிறுவர்களின் ஆர்வத்தோடு
கலைத்துப் போடுகிறாய்
உன் புன்னகையால் மீண்டும்..

உன் செயல்கள் எதுவாயினும்
சேதமுறுவதென்னவோ 
நானாகவே இருக்கிறேன்..

பா(வம்)வி நீயோ
செய்வது இன்னதென
அறியாதிருக்கிறாய் இன்னும்..!
.
.
            

செவ்வாய், 10 மே, 2011

நான் விரும்பாத கதைகள்..



'ஒரு ஊரில்' எனத் தொடங்கி
குழந்தைகளை குதூகலிக்கச் செய்யும்
கதைகளைப் போலில்லை 
உனது கதைகள்..

மாறாக 
ஓலமிடும் ஓநாய்கள்
நிறைந்ததாகவே இருக்கின்றன
அவையெப்போதும்..

ஓநாய்களின்
வாயில் வடியும் குருதியோ
உன்னுடையதாகவே இருக்கிறது 
உன் எல்லாக் கதைகளிலும்..  

உனது கதைகள்
யாருடைய கவனத்தையும்
ஈர்ப்பதற்கென
இட்டுக் கட்டப்பட்டவையல்ல
என்கிறாய்..

மேலும் சொல்கிறாய்
அவை
உனது கண்ணீராலும் குருதியாலும்
எழுதப்பட்டவை என்று..

இறுதியாய்
உன் மீது
இரக்கம் கொள்ளச் செய்வதாகவே
முடிகின்றன
உன் கதைகள் ஒவ்வொன்றும்..

என்றாலும்
நான் விரும்புவதேயில்லை
குழந்தைகள் விரும்பாத
கதையெதையும்..
.
.

சனி, 23 ஏப்ரல், 2011

கற்களும் பூக்களும்..

.
ஒவ்வொன்றாய்ச் சேகரிக்கிறேன்
என் மீது எறியப்பட்ட 
உங்களின் கற்களை..

என் குருதி தோய்ந்திருக்கும்
அவற்றில் சில
சுமந்து வந்திருக்கலாம்
எறியப்பட்டதற்கான நியாயங்களை..
எஞ்சியவை   எறியப்பட்டதற்கான
காரணங்களை நீங்களே அறிவீர்கள்..

சேகரிக்கப்படும் இக்கற்கள் 
உங்கள் மீது
திருப்பி எறிவதற்கல்ல;
இன்னொரு முறை
எவர் மீதேனும்
உங்களால் எறியப்படாமலிருக்க..
 
மேலும்
என் மீது எறியப்படும்
ஒவ்வொரு கல்லுக்கெனவும்     
பூக்களைத் திருப்பியளிக்கிறேன்
உங்களுக்கு..
இருந்தபோதிலும்
தொடர்ந்து நீங்கள்
எறிந்துகொண்டேயிருக்கிறீர்கள்
கற்களை..
நானும் 
வளர்த்துக் கொண்டேயிருக்கிறேன்
என் தோட்டம் நிறைய
பூக்களை..  
.

வியாழன், 10 மார்ச், 2011

உனது சொற்கள்

.
.
எங்கிருந்தும் களவாடப்படாத 
சொற்களைக் கொண்டு 
உனக்கான கவிதையைப் படைத்திருப்பதாய்ப்  
பெருமிதம் கொள்கிறேன்..

முறுவலிப்புடன் 
நீ மறுதலிக்கிறாய்-
அவை உன்னிடமிருந்தே
களவாடப்பட்டவையென்று..

மௌனமாய்
தலை கவிழ்ந்து கொள்கின்றன
என் கவிதையில்
உன் சொற்கள்..!
.

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

குறிப்புகளில் அடங்காதிருக்கிறது வாழ்க்கை..


.
எல்லோரும்
துரத்திக் கொண்டிருக்க
தொலைவில் ஓடிக் கொண்டிருக்கிறது
வாழ்கை..!
 ...................................................................................
வாழ்க்கைக்கு
வெளியே இருக்கிறது
சுதந்திரம்;
சிறைப்பட்டிருக்கிறது வாழ்வு..!  
....................................................................................
ஒரு நதியென
ஓடிக் கொண்டிருக்கிறது
வாழ்வு-
தாகமற்றிருக்கையில்..
தாகமுற்று
கடைசிச் சொட்டு வரை
பருகிட எத்தனிக்கையில்
அது உறைந்திறுகிப் போகிறது..!
...................................................................................
கிராம நகரங்களில் 
சிறகடிக்கும் வாழ்வு
சமயங்களில் பதுங்கிக் கொள்கிறது
காடு மலைகளில்..!
...................................................................................
நடைவண்டிகளைத் தரும் வாழ்வு
தேவைப்படுவோருக்கு
தரத் தவறுவதில்லை
கைத் தடிகளையும்..!
...................................................................................
தன் வாழ்க்கையை
எழுதுவதாய்த் தொடங்கியவர்கள்
எழுதி முடிக்கிறார்கள் 
பிறர்   வாழ்க்கையை..!
 ..................................................................................
வாழ்க்கை இருக்கிறது
ஏற்கனவே வரையப்பட்டவொரு
புராதன ஓவியமாய்..
காலம்
அதைக் கலைத்துப் போடுகிறது
ஒரு நவீன ஓவியமாய்..!  
...................................................................................
கடைசியில்
வாழ்க்கை என்பதுதான் என்ன?
தெரியவில்லை..
குறிப்புகள் எதிலும்
அடங்காதிருக்கிறது அது..! 
.
.

Twitter Bird Gadget