சனி, 2 ஜூன், 2012

கோடையெனும் காதலி


1.
கோடைக்காலத்தில்
நான் எழுதிய கவிதைகளை
வாசித்துவிட்டு
தன்னைப் பற்றிய கவிதைகள்
ஏதுமில்லையென்று சினந்து
காறி உமிழ்கிறது கோடை..
பின்னர்
தகிக்கத் தொடங்குகின்றன
என் கவிதைகள் யாவும்..

2.
ஒரு மலரைப் போலவோ
சிறு தூறலைப் போலவோ
எப்போதும் இதமாய் இருப்பதில்லை;
ஒரு கோடையைப் போலவும்
உக்கிரமாய் இருக்கக்கூடும்
அன்பு.

3.
எல்லாக் கோடைகளிலும்
ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகவே
இருக்கிறார்கள்
சிறுவர்கள்.

4.
பேரன்பின் பிரகாசத்தால்
யாவற்றையும் நனைத்துக் கொண்டிருக்கிறது
கோடை..
வெறுப்பின் நிழலில்
பதுங்கிக் கொள்கிறார்கள்
மனிதர்கள்.

5.
யாரும் விரும்பாத
தனது முத்தங்களைச் சுமந்தபடி
மாலையில்
கடலுள் மாய்கிறது
கோடைச் சூரியன்.

6.
யுகம் யுகமாய்
நிராகரிக்கப்படும்
காதலைச் சேமித்தவாறு 
இம்முறையும்
கடந்து போகக்கூடும்
கோடையெனும் காதலி.
.
.

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

தனிமைக்காலங்கள்-2


1.
கண்களாலும் காதுகளாலும்
செய்யப்பட்ட சுவர்களின் நடுவே
நம்பிக் கொண்டிருக்கிறேன்
தனித்திருப்பதாய்..

2.
தனிமை
புத்தனெனில்
நான்
தனித்திருக்கவில்லை.

3.
எரிக்கப்பட்ட
பாம்பு மாத்திரையெனக்
கருகிக் கொண்டிருக்கிறேன்..
அதன் கருப்பு சாம்பலெனப்
பெருகிக் கொண்டேயிருக்கிறது
தனிமையின் துயரம்.

(பாம்பு மாத்திரை: தீபாவளியின் போது சிறுவர்கள் கொளுத்தி மகிழும் ஒருவகைப் பட்டாசு)

4.
நனைவதற்கு யாருமற்ற
நள்ளிரவு மழையின்
துயரத்தைப் பாடிக்கொண்டிருக்கிறேன்..
வாஞ்சையுடன்
சாளரம் வழியே
சாரலாய் எனை நனைத்து
என் தனிமையழிக்கிறது
மாமழை.

5.
காயசண்டிகையின் பசியென
வாட்டுகிறதென் தனிமை..
மணிமேகலையைத்
தேடியலைகிறேன்
நான்.

6.
இலைகளுதிர்ந்த
மொட்டை மரமென
நிற்கிறேன்..
அம்மரத்தடி சருகுகளெனச்
சலசலத்துக் கொண்டேயிருக்கிறது
தனிமைத்துயர்.

7.
விலக்கப்பட்ட கனியொரு பக்கம்
புத்தன் மறு பக்கம்
நடுவில்
மதில் மேல் பூனையெனப்
படுத்திருக்கிறது
தனிமை.
.
.

வெள்ளி, 30 மார்ச், 2012

ஓ..மனமே!


பொன்மனமாய் மின்னியதே யொருநாளி லப்போது
வன்மனமாய் புன்மனமா யதுவான திப்போது
நன்மனமாய் மீட்பதுவே பெரும்பா டெனும்போது
அம்மனந்தா னம்மணமா யாவதெப்போது?

சனி, 24 மார்ச், 2012

கேள் நெஞ்சே!

அதுசரி இதுசரி என்பார் நெஞ்சே
எதுசரியென முடிவெடு நீயே!

வருவதும் போவதும் இயல்பென நெஞ்சே
சிரிப்பதும் அழுவதும் கைவிடுவாயே!

இடியொடு மழைவரும் புயல்வரும் நெஞ்சே
நொடியும் கலங்கா திருந்திடுவாயே!

வெளிப்பட புரிபடத் தெரிவதேயில்லை  நெஞ்சே
தெளிந்திட உண்மையைத் தேடிடுவாயே!

அலைந்திடு திரிந்திடு அடிபடு நெஞ்சே
உண்மை உணர்ந்தபின் உய்ந்திடுவாயே!

பெரிதினும் பெரிதது பெண்மை நெஞ்சே
அறிந்துவுன் ஆணவம் அடங்கிடுவாயே!

இறையெது ஏதென  இரைந்திடும் நெஞ்சே
மறைவாய் உள்ளுள் உணர்ந்திடுவாயே!



சனி, 11 பிப்ரவரி, 2012

ஒழுங்கின்மையின் அழகு


எத்தனை நேர்த்தியாய் 
அழகாய்க் கலைக்கப்பட்டிருக்கின்றன
இந்தப் புத்தகங்கள்..

பெருந்தலைவர் ஒருவரின்
சுயத்தைப் புலம்பும் புத்தகம் 
சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருப்பதில்
புலம்பலின் வீரியம்
சற்றே மட்டுப்பட்டிருக்கிறது..

பெருங்கவிஞர் ஒருவரின்
கவிதைகளைச் சுமந்திருக்கும் புத்தகத்தில்
ஆங்காங்கே தட்டுப்படும் கிறுக்கல்கள்
பின்நவீனக் கவிதைகளையொத்து  பிரமிப்பூட்டுகின்றன..

பெரும் ஓவியர் ஒருவரின் ஓவியத்தை
முகப்பில் தாங்கியிருக்கும் புத்தகத்தில்
கண் காது மூக்கு உடலென எல்லா இடங்களிலும் 
செய்யப்பட்டிருக்கும் வண்ணத் தீற்றல்களில்
அவ்வோவியம் ஒரு நவீன ஓவியமென 
மாறியிருந்தது..

அத்தனையையும் அணு அணுவாய் ரசித்தபடி
இப்புத்தகங்களை ஒழுங்குபடுத்தி
மீண்டும் அடுக்கிக்  கொண்டிருக்கிறேன்..
பக்கத்து வீட்டு செவ்வந்திக் குட்டி 
இன்னொரு முறை
கலைத்தும் கிழித்தும் கிறுக்கியும் போவாளென்று..   
.
.


வெள்ளி, 27 ஜனவரி, 2012

கவிதை, கவிதையைத் தவிர வேறில்லை..5


கவிதை எழுதுவதைக்
கைவிடுவதெனத் தீர்மானித்தும்
இன்னும் விட்டபாடில்லை..

பின்பு
அது குறித்தும்
கவிதை புனைந்தாயிற்று..
.
.

சனி, 21 ஜனவரி, 2012

பொம்மை உடைக்கும் குழந்தைகள்


சில காகிதங்களோ
கொஞ்சம் களிமண்ணோ போதும்
நீங்கள் ஒரு பொம்மை செய்ய..

உங்கள் கற்பனைக்கேற்றவாறு
பொம்மை செய்து முடித்தபின்
பெருமகிழ்ச்சி கொள்கிறீர்கள்
முதல் குழந்தைக்கு தகப்பனானதைப் போல..

இப்போது பொம்மையை
உங்கள் குழந்தைக்கு
விளையாடத் தருகிறீர்கள் அதே மகிழ்ச்சியுடன்..
குழந்தையும் பெருமகிழ்ச்சி கொள்கிறது
பொம்மையோடு விளையாடி
அதை உடைத்தபின்..

ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி
ஒவ்வொன்றில் இருக்கக்கூடும்;
உங்களுக்கு பொம்மை செய்வதிலும்
உங்கள் குழந்தைக்கு பொம்மையை உடைப்பதிலும்
இருப்பதைப் போல..
.
.

புதன், 18 ஜனவரி, 2012

புயல் : ஒரு ஏழையின் சில கேள்விகள்


கேள்வி 1:
ஏழைகளின்
கூரைகளைப் பிய்த்தெறிந்த
இந்தப் புயலை அனுப்பிய
பெருமுதலாளி யார்?
கடவுளா?

கேள்வி 2:
வாயு
பகவானா?
அரக்கனா?

கேள்வி 3:
புயல் உருவாகுமிடம்
கடலா?
நரகமா?

கேள்வி 4:
நாங்கள்
பாவிகளாக இருக்கலாம்..
இந்த மரங்களும்
பறவைகளும்
என்ன பாவம் செய்திருக்கக் கூடும்?

கேள்வி 5:
குடிசைகள் இல்லாத
உலகம் படைக்க
இப்படி ஒரு குறுக்கு வழியா?

கேள்வி 6:
ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காணும் நீங்கள்
எங்கள் அழுகையில்
எதைக் கண்டு கொள்வீர்கள்?
.
.

செவ்வாய், 17 ஜனவரி, 2012

குறுங்கவிதைகள்


1.சிறகசைத்து மேலெழும்பும் பறவைகள்
பின் வீழ்கின்றன
சில இறகுகள்.

2.பெய்யும் மழை
நனைந்து கொண்டிருக்கிறது
வறண்ட ஆறு.

3.கொள்ளை அழகு
எப்படி அழைப்பேன்?
பெயர் தெரியாத பூ.
.
.

திங்கள், 16 ஜனவரி, 2012

முகவரியற்ற துயரம்



யாரோ யாருக்கோ
எழுதிய இக்கடிதத்தை
என் கைகளில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது
கடந்து போன வன்புயல்

மழையில் நனைந்திருக்கும் அது
கொஞ்சம் சேற்றையும்
நிறைய துயரத்தையும் சுமந்தபடி
என் கைகளில் கனத்துக் கொண்டிருக்கிறது

முகம் தெரியாத 
எவனோ ஒருவனின் வலிகளை 
வரிகளாய்க் கொண்டிருக்கும் அது
அவனது
வறுமை
இயலாமை
ஆற்றாமை என
துயரத்தின் பல பரிமாணங்களை
அடுக்கிக் கொண்டே செல்கிறது

பகிர்வதன் மூலம்
பெருந்துயரத்தைப் பாதியாக்கவே
எத்தனிக்கும் அது
எழுதப்பட்டவனிடம் எதையும்
யாசிக்கவுமில்லை; மண்டியிடவுமில்லை

புயல் விட்டுச் சென்ற சிதிலங்களின் நடுவே
நிராதரவாய் நின்று கொண்டிருக்கும் இவ்வேளையில்
என் கைகள் பற்றியிருக்கும் இக்கடிதத்தால்
இச்சூழலின் துயரம் 
ஒரு காட்டாறென
மேலும் மேலும் பெருகிக் கொண்டேயிருக்கிறது..
.
.

Twitter Bird Gadget