சனி, 26 நவம்பர், 2011

குறுங்கவிதை


சற்று முன்
நிலவை மறைத்திருந்த மேகம்
விலகிவிட்டது
ஆயினும்
கலங்கியிருக்கிறது குளம்
இப்போது.
.
.

சனி, 5 நவம்பர், 2011

ஆயுதம் கொல்வோம்!



யாரேனும் எங்கேனும்
நாள்தோறும் செத்துக் கொண்டேயிருக்கிறார்கள்
எப்படிச் சாகக்கூடாதோ அப்படி...
இனத்தின் பேரால்
மதத்தின் பேரால்
மொழியின் பேரால்
சாதியின் பேரால்
பட்டினியால்
துரோகத்தால்
அவமானத்தால்
ஏமாற்றத்தால்
வன்மத்தால்
இன்னும் எண்ணற்ற காரணங்களால்..

தேவபானங்கள் அருந்தி
கடவுளர்கள் மயங்கியிருக்கும் வேளைகளில்
இந்தச் சாவுகள் நிகழ்ந்து விடுகின்றன
அல்லது நிகழ்த்தப்படுகின்றன..

பின்னர் மயக்கந் தெளிந்து பதறியடித்து
கடவுளர்கள் விழித்தெழும் வேளைகளில்
சர்வாதிகாரிகள் சிலர் வன்முறையால் சாகடிக்கப்படுகிறார்கள்
சிலர் நாடு கடத்தப்படுகிறார்கள்
இன்னும் சிலர்
தண்டனை என்னும் பேரால்
அரசுகளால் தூக்கிலிடப்படுகிறார்கள்..

அவசர அவசரமாய்க் கூடும் அறிவுஜீவிகள்
பன்னாட்டுத் தொலைக்காட்சிகளில்
கலந்து விவாதிக்கிறார்கள்-
மரண தண்டனை தேவையா இல்லையா என்று..
விவாதங்கள் முற்றுப் பெறுவதற்குள்
நிகழ்ந்துவிடுகின்றன மேலும் சில மரணங்கள்..

ஆயுதங்கள் குவிந்துவிட்ட உலகில்
இரவில் ஆடைகளைக் களைந்து
ஆயுதங்களைத் தரித்தபடி உறங்குகிறார்கள்..
எதிரிகளுடன் சமாதானம் பேசும் வேளைகளில்
மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களை
கமுக்கமாய்த் தடவி உறுதி செய்தபடி
உரக்கப் பேசுகிறார்கள்..

எதிரிகள் தீர்ந்து போன வேளைகளிலும்
ஆயுதங்களில் துருவேறாமல் பாதுகாக்க
சகோதரர்களைக் கொன்று பழகுகிறார்கள்..
காரணம் கேட்டால்
தொன்மங்களைத் துணைக்கழைக்கிறார்கள்..
ஆயுதங்களும் தீர்ந்து போனால்
பின் சொற்களைக் கூர்தீட்டத் தொடங்குகிறார்கள்..

திட்டமிட்டு எல்லாப் பாவங்களையும்
செவ்வனே செய்து முடித்தபின்
பாவச்சிலுவைகளைச் சுமக்க
இன்னொரு இளிச்சவாயனைத் தேடுகிறார்கள்..

எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளும்
எதையும் செய்ய வக்கற்றவர்கள்
கவிதைகள் எழுதிப் பரிசு பெறுகிறார்கள்
அல்லது
மேடைகளில் முழங்கிக் கைத்தட்டல் பெறுகிறார்கள்..

படைத்தவன் எனப் போற்றப்படுபவன்
எல்லாவற்றையும் கண்டு மனம் வெம்பியபின்
ஒருநாள் செத்துப் போகக்கூடும்
எப்படிச் சாகக்கூடாதோ அப்படி..!



திசைகளைத் தொலைத்தவன்

.
.
யாரும் முன்னெப்போதும்
பயணித்திராத பாதைகளில் 
பயணித்திடவே எப்போதும் திட்டமிடுகிறேன்..

வெளிச்சத்தின் சுவடுகள் ஏதுமற்ற
இந்த இருள் பாதைகளையே
மீண்டும் மீண்டும் விரும்பித் தேர்கிறேன்..

வழி நடத்தவோ
பின் தொடரவோ யாருமற்ற
கைவிடப்பட்ட இந்தப் பாதைகளில்
வழித்துணை யாருமின்றி
பயணித்துக் கொண்டிருக்கிறேன்..

கொண்டாட்டங்களுடன்
நகர்ந்து கொண்டிருந்தாலும் 
ஒரு பிண ஊர்வலத்தின் துயரங்கள் 
நிறைந்தே  தொடர்கிறது என் பயணம்..

யாரும் இப்பாதைகளில்
என்னைத் தொடர்ந்து துயருறுவதைத் தவிர்க்கவே
தடயங்களை அழித்தபடி
முன்னேறிக் கொண்டிருக்கிறேன்..

இந்தப் பாதைகளின் குறுக்கே
பள்ளத்தாக்கோ பெருமலையோ ஆழ்கடலோ
எதுவும் தடையென எதிர்ப்படலாம்..
எனினும் மாற்றுப்பாதைகளைத் தேர்ந்தெடுத்தபடி
தொடர்ந்து பயணித்துக் கொண்டேயிருப்பேன்..

கைவிளக்கேந்திய கருணையாளன் எவனும்
எதிர்ப்படுவான் என்றோ
எனக்கு வழி காட்டுவான் என்றோ
இதுவரை ஆரூடம் சொல்லவில்லை
பட்சிகள் எவையும்..

என்னிடம் நம்பிக்கைகளுமில்லை;
அவநம்பிக்கைகளுமில்லை..
சொல்வதற்கென்றோ
விட்டுச் செல்வதற்கென்றோ எதுவுமில்லை..

திசைகளின் தேவையற்றிருப்பதால்
திசைகளைத் தொலைத்தபின்னும்
தொடர்ந்து கொண்டிருக்கிறது என் பயணம்..

பயணிப்பதைத் தவிர
வேறெதுவாய்  இருக்க முடியும்
ஒரு பயணியின் நோக்கம்..
நான் பயணி என்பதால்
பயணித்தேன்; பயணிக்கிறேன்; இன்னும் பயணிப்பேன்..!
.
.

திங்கள், 24 அக்டோபர், 2011

எட்டாத காதலும் கிட்டாத தோழிகளும்..


இதுவரை நான்
காதல் வசப்படவுமில்லை;
காதல்
என் வசப்படவுமில்லை..!
--------------------------------------------
மனுக்கள் இல்லை என்னிடம்
குறையிருக்கிறது;
தீர்க்க வருமா காதல்..?
-------------------------------------------
தடுக்கி விழுமிடமெல்லாம்
கதவுகள்
தட்ட மனமில்லை;
தட்டாமலே திறக்குமா
காதல்..?
------------------------------------------
மயிலிறகு வேண்டுமென்றால்
மயிலிடம் கேட்டுக் கொண்டிருக்க
முடியாதுதான்;
ஆயினும்
வன்முறையில் வருமா காதல்..?
------------------------------------------
செடியிலேயே
காய்ந்து விடுகின்றன
பறிக்கப்படாத
என் தோட்டத்து ரோஜாக்கள்..
------------------------------------------
'அட'
என அசர வைக்கும்
பெண்களைச் சந்திக்க முடிவதேயில்லை
அடுத்த நாள்
ரயில் பயணத்திலும்..
-----------------------------------------
இன்னும்
தற்கொலை செய்து கொள்ளாதது
அதிசயம்தான்;
ஆண் குரல்களையே
கேட்டுக் கொண்டிருக்கும்
என் கைப்பேசி..
.
.

சனி, 10 செப்டம்பர், 2011

குறுங்கவிதைகள்


.
1. அமாவாசை இருட்டு
    எதையோ தேடிக்கொண்டிருக்கின்றன 
    மின்மினிப் பூச்சிகள்.

2. பெருமழைக்கு அச்சாரம்
    இச்சிறு தூறலே போதும்
    மண்வாசம்.

3. எப்போது இறங்கியதெனத்  தெரியவில்லை
    நீராடிக் கொண்டிருக்கிறது
    குளத்தில் நிலா.  

4. ஆடைகள் அர்த்தமற்றவை
    அவிழ்த்தெறிகிறேன்
    இளவேனிற்கால நண்பகல்.

5. ஆடைகள் அர்த்தமுள்ளவை
    மேலும் மேலும் அணிகிறேன் 
    முன்பனிக்கால இரவு.

6. சோறுண்ண அடம்பிடிக்கும் குழந்தை
    வேடிக்கை பார்க்கிறது வெளியே 
    நாக்கில் நீர் சொட்டச் சொட்ட தெருநாய்.

7. அழகுப் பெண் 
    அருகில் அழகுக் குழந்தை
    தொலைந்த காமம்.

8. ஊற்றெடுக்கும் கவிதை
    எழுதியே ஆக வேண்டும்  
    மை தீர்ந்த பேனா.

9. ஓய்வைத் தேடும் கால்கள்
    சோராதிருக்கிறது மனம்
    இன்னும் முடியாத பயணம்.
.
.

சனி, 3 செப்டம்பர், 2011

புத்தாயுதம் - வீழ்த்தப்பட்டவனின் அல்லது சரணடைந்தவனின் ஒப்புதல் வாக்குமுலம்




ஒன்று:
கொஞ்ச காலம்
உன்னைத் தொடர்ந்த போதுதான்
அறிந்து கொண்டேன்
உன்னைத் தொடரவேயில்லை என்பதை..  

இரண்டு:
நானெப்படி
உன்னைத் தொடர்வேன்
நீயே விரும்பாதபோது..

மூன்று:
நிறைய மாறிவிட்டேனென்று
எல்லோரும் சொல்லும்போது 
நினைத்துக் கொள்கிறேன் 
உன்னை..

நான்கு:
நீ நிரம்பிய பின்தான் 
காலியானது
என் குடுவை..

ஐந்து:
உன் பிடிக்குள்
சிக்கிய பின்தான் 
தளர்ந்தது என் பிடி..

ஆறு:
எல்லாவற்றையும் பற்றியிருந்தேன்
சுமையாய் இருந்தது;
உன்னைப் பற்றினேன் 
இலேசாயிருக்கிறது..

ஏழு:
எங்கேயோ சிக்கிவிட்டேன்
என்கிறார்கள்;
இப்போதுதான் சுதந்திரமாயிருப்பதை
எப்படிச் சொல்வது..?

எட்டு:
எதிலேயோ வீழ்ந்து விட்டேன் 
என்கிறார்கள்;
எனது எழுச்சியை
எப்படிப் பறைசாற்றுவது..? 

ஒன்பது: 
பத்தாது ஆயுதம் என்றார்கள்;
புத்தாயுதம் இருக்கிறது என்றேன்
புது ஆயுதமா என்றார்கள்;
புத்த ஆயுதம் என்றேன்..!
.
.

சனி, 20 ஆகஸ்ட், 2011

நிலாக்கதைகள்


.
.
குழந்தைகளை
வசீகரிக்க வேண்டுமெனில்
குறைந்தபட்சம் உங்களுக்கொரு
நிலாக்கதை தெரிந்திருக்க வேண்டும்..

பெரும்பாலும்
எல்லா கதைசொல்லிகளும்
தங்கள் களஞ்சியத்தில்
கையிருப்பு வைத்திருக்கிறார்கள்
ஒன்றிரண்டு நிலாக்கதைகளை..

காரணம்
நிலாக்கதை தெரியாத
கதைசொல்லி எவரையும்
அவ்வளவாக விரும்புவதில்லை
குழந்தைகள்..

நிலவற்ற
ஓர் அமாவாசை இரவில்தான்
குழந்தைகளுக்கு முதன் முதலில்
சொல்லப்பட்டிருக்க வேண்டும்
பூதங்களின் கதைகள்..
 
முந்தைய காலங்களைப் போலவே
இப்போதும் குழந்தைகள் அறிந்திருக்கிறார்கள்
நிலாக்கதைகளை..

நிலா அழகானது என
அவர்களிடம் சொல்வீர்களேயானால்
அவர்கள் திருப்பிச் சொல்வார்கள்
நிலவின் தேகம் சிதிலமடைந்திருக்கும் கதையை..

நிலாவில் வடை சுடும் பாட்டியின்
கதையைச் சொல்வீர்களேயானால்
அவர்கள் திருப்பிச் சொல்வார்கள்
நிலாவில் ஆம்ஸ்ட்ராங் கால் பதித்த கதையை..

ஆம்..!
முந்தைய காலங்களைப் போலவே
இப்போதும் குழந்தைகள் அறிந்திருக்கிறார்கள்
நிலாவை..
அவர்களின் நிலாவோ
பாறைகளாலானது..
அது நீரற்றது;
காற்றற்றது;
உயிருமற்றது..!
.
.

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

பேசிக் கொண்டேயிருக்கிறாய்..



திடீரெனத் தலையில் விழும்
காக்கையின் எச்சத்தைப் போல
அவ்வப்போது எனது சூழ்நிலையின்
சமநிலையைக் குலைத்து விடுகின்றன
உனது கைப்பேசி அழைப்புகள்..

உனதழைப்பு வரும் ஒவ்வொரு முறையும்
பதற்றத்தோடே கையாள வேண்டியிருக்கிறது
எனது கைப்பேசியை..     

நேரில் பேசும் தருணங்களில்
எதையோ சொல்ல வருவதைப் போலவே
பாவனை செய்து
கூட்டிவிடுகிறாய் எனது  எதிர்பார்ப்புகளை..  
கைப்பேசியிலோ வெகு இயல்பாய்ப் பேசி
ஏமாற்றி விடுகிறாய் ஏதுமில்லை என்பது போல்..

ஒருவர் சட்டையை ஒருவர் பற்றியவாறு
சிறுவர்கள் ஓட்டும் ரயில் வண்டியைப் போல
உனது பேச்சைத் தொடர்ந்தவாறே
எனது பேச்சும் இருப்பதால்
தவிடு பொடியாகிப் போகின்றன
எனது முன் ஒத்திகைகள்..  

நண்பர்களுடனான அரட்டைகளின் இடையில்
விலகிச் சென்று உன் அழைப்பை ஏற்கும் நேரங்களில்
விழிகளில் குறும்பு மிளிர
புன்முறுவல் பூக்கிறார்கள்..

பாதி சாப்பிட்ட கையோடு
அவசரமாய் வெளியே வந்து பேசும் சமயங்களில் 
சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறாள்
அம்மா..

நள்ளிரவு தாண்டிய நேரங்களில்  
பேச்சொலி கேட்டு
அறைக்குள் எட்டிப் பார்க்கும் தம்பி
தனக்கு வழி கிடைத்து விட்டதென
நண்பர்களிடம் சொல்லிக் கொள்கிறான்..

இப்படியாக
எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்
யாரையோ நான் காதலிக்கிறேனென்று..
நானும் நம்பிக் கொண்டிருக்கிறேன்
நீ உன் காதல் சொல்வாயென்று..

பெண்ணே நீயோ
பேசிக் கொண்டேயிருக்கிறாய்
உன் காதலை மறைத்து 
மற்றெல்லாவற்றையும்..!
.
.

சனி, 13 ஆகஸ்ட், 2011

குறுங்கவிதை



பெருங்காற்று
ஆர்ப்பரிக்கிறது மரம்
அமைதியாய் உறங்கிக் கொண்டிருக்கிறது
காக்கைக் கூட்டில் 
குயில் குஞ்சு..!
.

ஞாயிறு, 31 ஜூலை, 2011

ஓர் இரவு..



இருள் குறைந்த நகரத்தின்
இரைச்சலொழிந்த இவ்விரவில்
தனிமையைத் தின்று கொண்டிருக்கிறேன்
அல்லது
தனிமை என்னைத் தின்று கொண்டிருக்கிறது..

சுவர்க் கடிகாரத்தின் முள் நகரும் ஓசை
பேரிரைச்சலென செவி பிளக்கிறது..
இரவு விளக்கின் மெல்லிய வெளிச்சமோ
உச்சி சூரியனென உடலெரிக்கிறது..

அறைக்குள் நுழைந்து
பின் திடுக்கிட்டுத் திரும்பும்
எலிகளும் கரப்பான்களும்
நானின்னும் உறங்காதது குறித்து
எரிச்சலுறுகின்றன..

துயரத்தை யாரிடம்
பகிர்ந்து கொள்வதென யோசித்துக் கொண்டிருக்கையில்
’உச்’ கொட்டியவாறு
தங்கள் இரங்கலைப் பதிவு செய்கின்றன
சுவர்ப்பல்லிகள்..

நேரத்தை நகர்த்தவென
காற்றில் விரல் கொண்டு
நான் வரையும் ஓவியங்கள்
இந்த இரவைப் போலவே
அர்த்தமற்றிருக்கின்றன..

இத்தனை நீளமான
இந்த இரவைச் சபித்தபடி
படுக்கையில் புரள்கையில்
தொலைவில் ஒலிக்கிறது
சேவலொன்றின் கூவல்..

ஒருவழியாய்
இன்னும் சற்றைக்கெல்லாம்
முடிந்து விடும் இவ்விரவு
எனதிந்தக் கவிதையைப் போலவே..!

பின்குறிப்பு:
இரவு உறக்கம் பெரும்பாக்கியம்;
இரவில் உறங்குவோர் பேறு பெற்றோர்..!

(அறிஞர் அண்ணாவின் நாடகத் தலைப்பை இக்கவிதைக்கு நன்றியோடு பயன்படுத்தியிருக்கிறேன்..)

Twitter Bird Gadget