சனி, 20 ஆகஸ்ட், 2011

நிலாக்கதைகள்


.
.
குழந்தைகளை
வசீகரிக்க வேண்டுமெனில்
குறைந்தபட்சம் உங்களுக்கொரு
நிலாக்கதை தெரிந்திருக்க வேண்டும்..

பெரும்பாலும்
எல்லா கதைசொல்லிகளும்
தங்கள் களஞ்சியத்தில்
கையிருப்பு வைத்திருக்கிறார்கள்
ஒன்றிரண்டு நிலாக்கதைகளை..

காரணம்
நிலாக்கதை தெரியாத
கதைசொல்லி எவரையும்
அவ்வளவாக விரும்புவதில்லை
குழந்தைகள்..

நிலவற்ற
ஓர் அமாவாசை இரவில்தான்
குழந்தைகளுக்கு முதன் முதலில்
சொல்லப்பட்டிருக்க வேண்டும்
பூதங்களின் கதைகள்..
 
முந்தைய காலங்களைப் போலவே
இப்போதும் குழந்தைகள் அறிந்திருக்கிறார்கள்
நிலாக்கதைகளை..

நிலா அழகானது என
அவர்களிடம் சொல்வீர்களேயானால்
அவர்கள் திருப்பிச் சொல்வார்கள்
நிலவின் தேகம் சிதிலமடைந்திருக்கும் கதையை..

நிலாவில் வடை சுடும் பாட்டியின்
கதையைச் சொல்வீர்களேயானால்
அவர்கள் திருப்பிச் சொல்வார்கள்
நிலாவில் ஆம்ஸ்ட்ராங் கால் பதித்த கதையை..

ஆம்..!
முந்தைய காலங்களைப் போலவே
இப்போதும் குழந்தைகள் அறிந்திருக்கிறார்கள்
நிலாவை..
அவர்களின் நிலாவோ
பாறைகளாலானது..
அது நீரற்றது;
காற்றற்றது;
உயிருமற்றது..!
.
.

2 கருத்துரைகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

ஆம் இன்றைய குழந்தைகளின் மனநிலையை நன்கு அறிந்துவைத்திருக்கிறீர்கள்!!!!!!!

அப்துல் காதர் சொன்னது…

நன்றி முனைவர்.இரா.குணசீலன் அவர்களே..!

Twitter Bird Gadget