ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

காவல் தெய்வங்கள்



வீட்டு நாய்களைப் போலில்லை
தெருநாய்கள்;
அதிகம் நம்மால்  விரும்பப்படுவதில்லை
அவை.

அழைப்பதற்கென
பெயரெதுவும் இருப்பதில்லை
அவற்றுக்கு..
ஒரு வாய் சமிக்ஞை
போதுமானதாயிருக்கிறது
உங்கள் குறிப்பறிவதற்கு..

உயர் வகை உணவுகள்
எதுவும் தேவைப்படுவதேயில்லை
தெரு நாய்களுக்கு..
எஞ்சியவைகளும் 
குப்பையில் வீசப்படுபவைகளுமே
நிறைவாய் இருக்கின்றன அவற்றுக்கு..

தவறாமல் இரவில்
தத்தம் தெருக்களின் காவலுக்குத்
திரும்பி விடுகின்றன தெரு நாய்கள்
நீண்ட பகல் நேரத் திரிதலுக்குப் பின்னர்..

யாரும் கேட்காமலே
தெருக்களைக் காவல் புரியும்
காரணம் எதுவும் தெரிவதில்லை நமக்கு..
ஒருவேளை
காவல் தெய்வங்களின் கதைகளைப் போல
மரபு வழிக் கதைகள் எதுவும்
இடையில் மறக்கப்பட்டிருக்கலாம்
நம்மால்..

சிறுவர்களைத்தான்
அதிகம் பிடித்திருக்கிறது தெரு நாய்களுக்கு;
எப்போதும்
தெருக்களின் அடையாளங்களாய் இருக்கிறார்கள்
சிறுவர்களும் தெரு நாய்களும்..

எல்லாத் தெருக்களிலும்
உங்களால் காண முடியும்
கணிசமான அளவில் காயப்படுத்தப்பட்ட
கால் உடைக்கப்பட்ட தெரு நாய்களை..

ஆனாலும்
நம்மைப் போலில்லை தெரு நாய்கள்;
அவை மனிதர்களை
ஒருபோதும் புறக்கணிப்பதுமில்லை;
கலவியின் போது கல்லெறிவதுமில்லை.


7 கருத்துரைகள்:

கவி அழகன் சொன்னது…

நல்ல கவிதை வித்தியாசமாக உள்ளது

அம்பாளடியாள் சொன்னது…

உண்மையை மிக அழகாய் கவிதை
உருவில் தந்துள்ளீர்கள் அருமை !!....
மேலும் தொடர வாழ்த்துக்கள் .

அப்துல் காதர் சொன்னது…

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அம்பாளடியாள்!

வனம் சொன்னது…

மிக அருமையான கவிதை.........

உண்மையிலேயே கவிதை,.
நான் எப்போதும் உள்நாட்டு நாய்களை விரும்புபவன்

தெரு நாய்களை மிக அழகாக பதிவு செய்து இருக்கின்றீர்கள்.

அப்துல் காதர் சொன்னது…

மிக்க நன்றி வனம் அவர்களே!

Unknown சொன்னது…

நானும் கவிதைகளின் காதலன் தான்! ஆனால் இது நாள் வரை நான் அறிந்த கவிதைகளிலேயே இதுதான் சிறந்த கவிதை! காரணம் இதன் கரு!

அப்துல் காதர் சொன்னது…

பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க!

Twitter Bird Gadget