சனி, 11 பிப்ரவரி, 2012

ஒழுங்கின்மையின் அழகு


எத்தனை நேர்த்தியாய் 
அழகாய்க் கலைக்கப்பட்டிருக்கின்றன
இந்தப் புத்தகங்கள்..

பெருந்தலைவர் ஒருவரின்
சுயத்தைப் புலம்பும் புத்தகம் 
சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருப்பதில்
புலம்பலின் வீரியம்
சற்றே மட்டுப்பட்டிருக்கிறது..

பெருங்கவிஞர் ஒருவரின்
கவிதைகளைச் சுமந்திருக்கும் புத்தகத்தில்
ஆங்காங்கே தட்டுப்படும் கிறுக்கல்கள்
பின்நவீனக் கவிதைகளையொத்து  பிரமிப்பூட்டுகின்றன..

பெரும் ஓவியர் ஒருவரின் ஓவியத்தை
முகப்பில் தாங்கியிருக்கும் புத்தகத்தில்
கண் காது மூக்கு உடலென எல்லா இடங்களிலும் 
செய்யப்பட்டிருக்கும் வண்ணத் தீற்றல்களில்
அவ்வோவியம் ஒரு நவீன ஓவியமென 
மாறியிருந்தது..

அத்தனையையும் அணு அணுவாய் ரசித்தபடி
இப்புத்தகங்களை ஒழுங்குபடுத்தி
மீண்டும் அடுக்கிக்  கொண்டிருக்கிறேன்..
பக்கத்து வீட்டு செவ்வந்திக் குட்டி 
இன்னொரு முறை
கலைத்தும் கிழித்தும் கிறுக்கியும் போவாளென்று..   
.
.


5 கருத்துரைகள்:

சாய் ராம் சொன்னது…

நல்லா இருக்கு கவிதை!

புத்தகத்தில்
ஆங்காங்கே தட்டுப்படும் கிறுக்கல்கள்
பின்நவீனக் கவிதைகளையொத்து பிரமிப்பூட்டுகின்றன

படிப்பவர் மனதில் தானே கவிதை உருவாகிறது

அப்துல் காதர் சொன்னது…

நன்றி திரு.சாய்ராம் அவர்களே!

சிவஹரி சொன்னது…

ஒழுங்கின்மையின் அழகு ஒரு போதும் குறைபட போவதுமில்லை. குறையும் படாது.

வரிகளின் வழியே கிறுக்கல்களின் வேரும் புரிய வருகின்றது.

“பெரும் ஓவியர் ஒருவரின் ஓவியத்தை
முகப்பில் தாங்கியிருக்கும் புத்தகத்தில்
கண் காது மூக்கு உடலென எல்லா இடங்களிலும்
செய்யப்பட்டிருக்கும் வண்ணத் தீற்றல்களில்
அவ்வோவியம் ஒரு நவீன ஓவியமென
மாறியிருந்தது..”

அப்துல் காதர் சொன்னது…

நன்றி தோழரே!நலமாய் இருக்கிறீர்களா?

dafodil's valley சொன்னது…

அருமையான கவிதை சகோ!

நாம் சேமித்த சொத்தாகினும் கலைந்தாலோ இழந்தாலோ அது நம் விருப்பும் நபர் செய்யதால் குற்றமாக தெரியாது அதுவும் ஒர் ரசிக்கும்படியான ஓவியமாய் காவியமாய் தான் தோன்றும்.

Twitter Bird Gadget