சனி, 5 நவம்பர், 2011

திசைகளைத் தொலைத்தவன்

.
.
யாரும் முன்னெப்போதும்
பயணித்திராத பாதைகளில் 
பயணித்திடவே எப்போதும் திட்டமிடுகிறேன்..

வெளிச்சத்தின் சுவடுகள் ஏதுமற்ற
இந்த இருள் பாதைகளையே
மீண்டும் மீண்டும் விரும்பித் தேர்கிறேன்..

வழி நடத்தவோ
பின் தொடரவோ யாருமற்ற
கைவிடப்பட்ட இந்தப் பாதைகளில்
வழித்துணை யாருமின்றி
பயணித்துக் கொண்டிருக்கிறேன்..

கொண்டாட்டங்களுடன்
நகர்ந்து கொண்டிருந்தாலும் 
ஒரு பிண ஊர்வலத்தின் துயரங்கள் 
நிறைந்தே  தொடர்கிறது என் பயணம்..

யாரும் இப்பாதைகளில்
என்னைத் தொடர்ந்து துயருறுவதைத் தவிர்க்கவே
தடயங்களை அழித்தபடி
முன்னேறிக் கொண்டிருக்கிறேன்..

இந்தப் பாதைகளின் குறுக்கே
பள்ளத்தாக்கோ பெருமலையோ ஆழ்கடலோ
எதுவும் தடையென எதிர்ப்படலாம்..
எனினும் மாற்றுப்பாதைகளைத் தேர்ந்தெடுத்தபடி
தொடர்ந்து பயணித்துக் கொண்டேயிருப்பேன்..

கைவிளக்கேந்திய கருணையாளன் எவனும்
எதிர்ப்படுவான் என்றோ
எனக்கு வழி காட்டுவான் என்றோ
இதுவரை ஆரூடம் சொல்லவில்லை
பட்சிகள் எவையும்..

என்னிடம் நம்பிக்கைகளுமில்லை;
அவநம்பிக்கைகளுமில்லை..
சொல்வதற்கென்றோ
விட்டுச் செல்வதற்கென்றோ எதுவுமில்லை..

திசைகளின் தேவையற்றிருப்பதால்
திசைகளைத் தொலைத்தபின்னும்
தொடர்ந்து கொண்டிருக்கிறது என் பயணம்..

பயணிப்பதைத் தவிர
வேறெதுவாய்  இருக்க முடியும்
ஒரு பயணியின் நோக்கம்..
நான் பயணி என்பதால்
பயணித்தேன்; பயணிக்கிறேன்; இன்னும் பயணிப்பேன்..!
.
.

4 கருத்துரைகள்:

vasupradha சொன்னது…

திசைகளைத் தொலைத்தவன் தொலையவில்லை கவிதையில்.

// யாரும் இப்பாதைகளில்
என்னைத் தொடர்ந்து துயருறுவதைத் தவிர்க்கவே
தடயங்களை அழித்தபடி
முன்னேறிக் கொண்டிருக்கிறேன்.. //

// திசைகளின் தேவையற்றிருப்பதால்
திசைகளைத் தொலைத்தபின்னும்
தொடர்ந்து கொண்டிருக்கிறது என் பயணம்.. //


மிகத்தெளிவாக தொலைத்திருக்கிறீர்கள் போல...மிக அருமையான படைப்பிற்கு நன்றி திரு. அப்துல் காதர்.

அப்துல் காதர் சொன்னது…

தங்கள் கருத்துகளுக்கு நன்றி சகோதரி!

அம்பாளடியாள் சொன்னது…

பயணிப்பதைத் தவிர
வேறெதுவாய் இருக்க முடியும்
ஒரு பயணியின் நோக்கம்..
நான் பயணி என்பதால்
பயணித்தேன்; பயணிக்கிறேன்; இன்னும் பயணிப்பேன்..!

சொல்ல வந்த விசயத்தை மிக சிறப்பாக சொல்லி
முடித்த விதம் அருமை !......கவிஞனையும் எழுதுகோலையும் எக் காலத்திலும் தடுக்கவோ பிரிக்கவோ முடியாது என்பதை ஆழமாய் உணர வைத்துச் செல்கின்றது இக் கவிதை வரிகள் .
மிக்க நன்றி பகிர்வுக்கு .தங்கள் பயணம் மேலும் மேலும் சிறப்பாக தொடர என் வாழ்த்துக்கள் .

அப்துல் காதர் சொன்னது…

மிக்க நன்றி அம்பாளடியாள்!

Twitter Bird Gadget