சனி, 23 ஏப்ரல், 2011

கற்களும் பூக்களும்..

.
ஒவ்வொன்றாய்ச் சேகரிக்கிறேன்
என் மீது எறியப்பட்ட 
உங்களின் கற்களை..

என் குருதி தோய்ந்திருக்கும்
அவற்றில் சில
சுமந்து வந்திருக்கலாம்
எறியப்பட்டதற்கான நியாயங்களை..
எஞ்சியவை   எறியப்பட்டதற்கான
காரணங்களை நீங்களே அறிவீர்கள்..

சேகரிக்கப்படும் இக்கற்கள் 
உங்கள் மீது
திருப்பி எறிவதற்கல்ல;
இன்னொரு முறை
எவர் மீதேனும்
உங்களால் எறியப்படாமலிருக்க..
 
மேலும்
என் மீது எறியப்படும்
ஒவ்வொரு கல்லுக்கெனவும்     
பூக்களைத் திருப்பியளிக்கிறேன்
உங்களுக்கு..
இருந்தபோதிலும்
தொடர்ந்து நீங்கள்
எறிந்துகொண்டேயிருக்கிறீர்கள்
கற்களை..
நானும் 
வளர்த்துக் கொண்டேயிருக்கிறேன்
என் தோட்டம் நிறைய
பூக்களை..  
.

வியாழன், 10 மார்ச், 2011

உனது சொற்கள்

.
.
எங்கிருந்தும் களவாடப்படாத 
சொற்களைக் கொண்டு 
உனக்கான கவிதையைப் படைத்திருப்பதாய்ப்  
பெருமிதம் கொள்கிறேன்..

முறுவலிப்புடன் 
நீ மறுதலிக்கிறாய்-
அவை உன்னிடமிருந்தே
களவாடப்பட்டவையென்று..

மௌனமாய்
தலை கவிழ்ந்து கொள்கின்றன
என் கவிதையில்
உன் சொற்கள்..!
.

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

குறிப்புகளில் அடங்காதிருக்கிறது வாழ்க்கை..


.
எல்லோரும்
துரத்திக் கொண்டிருக்க
தொலைவில் ஓடிக் கொண்டிருக்கிறது
வாழ்கை..!
 ...................................................................................
வாழ்க்கைக்கு
வெளியே இருக்கிறது
சுதந்திரம்;
சிறைப்பட்டிருக்கிறது வாழ்வு..!  
....................................................................................
ஒரு நதியென
ஓடிக் கொண்டிருக்கிறது
வாழ்வு-
தாகமற்றிருக்கையில்..
தாகமுற்று
கடைசிச் சொட்டு வரை
பருகிட எத்தனிக்கையில்
அது உறைந்திறுகிப் போகிறது..!
...................................................................................
கிராம நகரங்களில் 
சிறகடிக்கும் வாழ்வு
சமயங்களில் பதுங்கிக் கொள்கிறது
காடு மலைகளில்..!
...................................................................................
நடைவண்டிகளைத் தரும் வாழ்வு
தேவைப்படுவோருக்கு
தரத் தவறுவதில்லை
கைத் தடிகளையும்..!
...................................................................................
தன் வாழ்க்கையை
எழுதுவதாய்த் தொடங்கியவர்கள்
எழுதி முடிக்கிறார்கள் 
பிறர்   வாழ்க்கையை..!
 ..................................................................................
வாழ்க்கை இருக்கிறது
ஏற்கனவே வரையப்பட்டவொரு
புராதன ஓவியமாய்..
காலம்
அதைக் கலைத்துப் போடுகிறது
ஒரு நவீன ஓவியமாய்..!  
...................................................................................
கடைசியில்
வாழ்க்கை என்பதுதான் என்ன?
தெரியவில்லை..
குறிப்புகள் எதிலும்
அடங்காதிருக்கிறது அது..! 
.
.

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

கனவில் உறங்கியவன்


கைகள் நிறைய பூக்களை ஏந்தியவாறு
அடிக்கடி என் கனவுகளில் வந்து போகிறாள்
சிறுமியொருத்தி..

வழக்கமாய்
பூக்களையெனக்குப் பரிசளித்த பின்
தன் பஞ்சு விரல்களால்
என் விரல்களைப் பற்றியவாறு
இட்டுச் செல்கிறாள்
தன் வீட்டிற்குள் என்னை..

மணலால் கட்டப்பட்டிருக்கிறது
அவள் வீடு..
இன்னதென அறியமுடியாத
வடிவமற்ற கிறுக்கல்களால் நிரம்பியிருக்கின்றன
அதன் சுவர்கள் முழுவதும்..

தன் ஓவியங்களென
அவற்றை அறிமுகப்படுத்தி மகிழ்கிறாள்
சிறுமி என்னிடம்..

வீடெங்கும் இறைந்து கிடக்கும்
பொம்மைகளிலிருந்து
தானே தேர்ந்தெடுத்த
ஒன்றிரண்டை மீளவும் பரிசளிக்கிறாள்
அவளெனக்கு..

களிமண்ணால் செய்யப்பட்டிருக்கும்
அவளது பொம்மைகள்
நான் முன்னெப்போதும் அறிந்திராதவை..

சட்டென நினைவு வந்தவளாய்
மீண்டும் என் விரல்களைப் பற்றியவள்
தன் தோட்டத்தைக் காட்டுவதாய்ச் சொல்லி
அழைத்துச் செல்கிறாள்  என்னை..

வளர்ப்பவரைத் தொடரும் நாயென
நானும் தொடர்கிறேன்  அவளை..

எல்லையற்ற வெளியென
பரந்திருக்கிறது  அவள் தோட்டம்..
கணக்கிலடங்கா
செடிகளும் மரங்களும்
பறவைகளும் விலங்குகளுமாய்
ஒரு வனத்தையும் ஒத்திருக்கிறது  அது..

சிறுமி
வழியெங்கும் எதிர்ப்படும்
பறவைகள் விலங்குகளிடம்
நலம் விசாரித்தபடியே நடக்கிறாள்
அதனதன் மொழிகளில்..

அவ்வப்போது அவள் கன்னங்களில்
முத்தமிட்டுச் செல்கின்றன
வண்ணத்துப் பூச்சிகள் சில..

திடீரென மின்னல் வெட்டி மழையடிக்க
என் விரல்களை உதறியவள்
தன் கைகளை நீட்டிச் சுற்றியவாறு
நடனமிடத் துவங்குகிறாள்
மழையில் நனைந்தபடி..

அடர்ந்த மரமொன்றின் அடியிலிருந்து
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்
ஏதும் செய்ய இயலாதவனாய்..

திடீரென பெய்த மழை
திடீரென நின்றும்  போக
சுணங்கிய முகத்துடன்
மீண்டும் என் விரல்களைப் பற்றுகிறாள்
மூன்றாம் முறையாக..

நெடுந்தூரம் வந்துவிட்டதில்
அயர்ந்து அமர்கிறேன் நான்..
அவள்
புன்னகைத்தவாறு அருகமர்ந்து 
என் தலையை வருடுகிறாள் வாஞ்சையுடன்;
தீயணைந்து தணிகிறேன் நான்..

மெல்ல என் தலையை
தன் மடியில் சாய்ப்பவள்
புரியாத மொழிதனில்
பாடலொன்றை இசைக்கவும்  தொடங்குகிறாள்..

சட்டென அரவங்களனைத்தும் அற்றுப் போக
பிரபஞ்சத்தின் ஒற்றைக் குரலாய்
ஒலித்துக் கொண்டிருக்கிறது அவள் பாடல்..

மரணத்தினும் மேம்பட்ட
உறக்கமொன்றினுள்
வெகு வேகமாய் மூழ்கிக் கொண்டிருக்கும்
அவ்வேளைகளில்
வெகு வேகமாய் வெளியேறிக் கொண்டுமிருக்கிறேன்
இப்பின்னிரவுகளின்   உறக்கத்திலிருந்து..
.
.

வெள்ளி, 14 ஜனவரி, 2011

பெயரற்றவன்

.
.
பெயர்கள் இறைந்து கிடக்கும்
தெருக்களெங்கும்
பெயரெதுவுமற்றுத் திரிந்தேன்
பெருமிதத்துடன்..

எப்பெயரிட்டு
எனையழைப்பதென
குழம்பிப் போனவர்கள்
அழைத்து மகிழ்ந்தனர்
ஆளுக்கொரு பெயரிட்டு..

ஆளுக்கொரு பெயரிட்டதில்
அழிந்து போன எனதடையாளத்தால்
அகமகிழ்ந்தேன்; ஆனந்தம் கொண்டேன்..

ஆயினும்
அடையாளச் சிக்கல் வந்த போது
திடுக்கிட்டுப் போனவர்கள்
பின் தீர்மானித்தார்கள்
பொதுப் பெயரிட்டு அழைப்பதென..

இறுதியாய்
'பெயரற்றவன்' என்பதே
பெயராகிப் போனபின்
என் பெருமித கிரீடம்
நொறுங்கிச்  சிதறியது
தெருக்களெங்கும்..!
.
.

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

குறுங்கவிதை

.
.
எரிச்சலூட்டுவதாய்
இருக்கிறது
இந்த மழைக்காலம்..

போன மழைக்காலத்தில்
என்னோடு இருந்தாய்
நீ..!
.
.

வெள்ளி, 24 டிசம்பர், 2010

எரியும் நிலவு..!

.
.
பற்றியெரிகிறது நிலவென
மனப்பிறழ்வுற்றவன்
அலறியபோது
வேடிக்கையாய்த் தெரிந்தது
ஊருக்கும் எனக்கும்..

பிறிதொரு சமயம்
நீயென்னை
உதறியெறிந்து போன
மார்கழி மாத நள்ளிரவொன்றில்
பின் நானும் கூட  கண்ணுற்றேன்
பற்றியெரியும் நிலவதனை..!
.
.

ஞாயிறு, 28 நவம்பர், 2010

பெருமலையொன்றின் அடிவாரமும் அதன் உச்சியும்..


.
.

பெருமலையொன்றின்
அடிவாரத்திலிருந்து
தொடங்குகிறது பயணம்..
முன்னரே தீர்மானிக்கப்படுகிறது
மலையின் உச்சியை அடைவதே
அதன் இலக்கென்று..
ஆயினும் பயணம் தொடங்கும் முன்
ஒருவரும் அறிந்திருக்கவில்லை
மலையின் உயரத்தை..

பயமுறுத்துவனவாகவும்
சவால் நிறைந்தனவாகவும் இருக்கின்றன
வழுக்குப் பாறைகள் நிறைந்த
மலையின் சரிவுகள்..
சமயங்களில் அவை
மலையடிவாரத்திற்கே
மீளக் கொண்டு சேர்த்து விடவும் செய்கின்றன
பரமபத பாம்புகளென..

பெரும்பாலோர் மலையடிவாரத்திலேயே
தங்கிப் போகிறார்கள்
அங்கேயே வசதியாயிருக்கிறதென்று..
வெகுசிலரே பயணத்தில்
முன்னேறிச் செல்கின்றனர்
கிழிந்து தொங்கும் சதைகளையும்
பொங்கிப் பெருகும் குருதியையும்
பொருட்படுத்தாது..

எப்போதும் கண்ணுக்கெட்டாத
மலையுச்சியும்
எப்போதும் தென்பட்டுக் கொண்டேயிருக்கும்
மலையடிவாரமும்
தொடர்ந்து
நிலைநிறுத்திக் கொண்டேயிருக்கின்றன
நினைவில் பயத்தை..

இடை தங்கிப் போனவர்கள் நீங்கலாய்
வெகு சொற்பமானவர்களே
மலையின் உச்சியை அடைகிறார்கள்
பயத்தினூடாய்த் தொடரும் பயணத்தில்..

தங்களுக்கிடையேயான
உரையாடலுக்குப் பின்
மலையுச்சியை அடைந்தவர்கள்
பிரமித்துப் போகிறார்கள்
தாங்கள் பயணித்து வந்த பாதைகள்
வேறு வேறானவை என்பதையறிந்து..

இறுதியாய்
கழுத்து நரம்புகள் புடைக்க
தொண்டையில் குருதி கசிய
அவர்கள் உரத்துக் கத்துகிறார்கள்-
மலையடிவாரத்தை விடவும்
மலையின் உச்சி
எவ்வகையிலும் மேம்பட்டதில்லையென்று..

அந்தப் பேரரவம்
எல்லையற்ற பெருவெளியெங்கும்
காற்றினூடே கலந்து விரவி
காணாமல் போய்விடுகிறது
பெருமலையின் அடிவாரத்தை
அடையும் முன்பாக..
.
.

செவ்வாய், 23 நவம்பர், 2010

ஆறுவதில்லை நெஞ்சம்..



மழைக்காலச் சாலையைக்
கடக்கும் ஊர்தியொன்று
சட்டென மேலே வாரியிறைத்திடும்
சேற்றைப் போல
எதிர்பாராத தருணங்களில் வீசி விடுகிறாய்
சுடு சொற்களை..!

ஆயினும்
சேற்றை உதறியவாறு
நகர்ந்து செல்லும்
வழிப்போக்கனைப் போல
அத்தனை எளிதாய்
ஆறுதல் கொள்வதில்லை
ஈரம் கசியும் விழிகளும்
காயம்பட்ட நெஞ்சமும்..!



ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

கிளை முறிந்த மரங்கள்


.
.
எதுகை மோனைகளிட்டு
உவமை உருவகங்கள் கூட்டி
அணிகள் சேர்த்து
அழகு பார்த்த பின்னும்
கிளை முறிந்த மரங்களென
ஊனப்பட்டு நிற்கின்றன
உன் மீதான காதலைச் சுமந்து வரும்
என் சொற்கள் யாவும்..!
.
.
Twitter Bird Gadget