ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

வெயில் தேசத்தவன்வெயில் தேசத்திலிருந்து வருகிறாய்
உண்மையின் வீரியம் மிக்க
உன் சொற்களின் மீது
கவனம் கொள்ளாதிருக்கிறோம்;
வெம்மை மிக்க அவை
எங்கள் கள்ள இதயங்களைச் சுட்டுப் பொசுக்கி விடுமென்று..

குளிர்ந்த சொற்களைத் தேர்ந்தெடுத்து
உன்னோடு உரையாடுகிறோம்
மேலும்,
குளிர்ந்த சொற்கள் குறித்து
உனக்கு வகுப்பெடுக்கிறோம்
ஒரு குளிர்பதனப் பெட்டியின்
செயற்கைத்தனம் மிக்கிருப்பதை
நீ கண்டறிவிக்கிறாய்.

எங்களில் யாரோ ஒருவர்
தொலைவில் சலசலத்துக் கொண்டிருக்கும்
நதியை உனக்கு அறிமுகப்படுத்துகிறார்
உனது வெஞ்சொற்களுடன்
நதியில் இறங்குகிறாய்
நதியின் தண்மையில் குளிர்ந்த உனது சொற்கள்
மேலெழும்பி வருகின்றன;
உடன் நீயும்..

இப்போது நீ
குளிர் தேசத்தவனாகிறாய்
இருப்பினும்,
உனது சொற்களில்
அப்படியே இருக்கிறது
உண்மையின் வீரியம் இன்னும்..


ஞாயிறு, 13 அக்டோபர், 2013

செத்த நதிகளை அல்லது துயரங்களைச் சேகரிப்பவன்


செத்துப் போன நதிகளைச்
சேகரித்துக் கொண்டிருக்கிறேன்
இப்போதைக்கு அது என்
பொழுது போக்காயிருக்கிறது

பழங்கால நாணயங்களைப் போலவோ
புராதன ஓவியங்களைப் போலவோ
அல்லாமல்
வெகு எளிதாய் இருக்கிறது
செத்த நதிகளைச் சேகரிப்பது..

பிச்சைக்காரனின் தட்டில் கிடக்கும்
சில்லறைகளைப் போல
கொஞ்சமே கொஞ்சம் நீருடன்
குற்றுயிரும் குலையுயிருமாய்க்
கிடக்கும் நதிகளைக் கவனமாய்க்
குறித்து வைத்துக் கொள்கிறேன்;
என் எதிர்காலச் சேகரிப்பில்
அவை ஒரு நாள் வந்து சேரும்

செத்த நதிகளின் சேகரிப்பில்
என் சாதனை பேசப்படுமொரு நாளில்
கடற்கரையில் நின்றபடி
கடலை நோக்கிக் கேட்பேன்:
'உன்னிடம் திரும்பி வராத
நதிகள் குறித்து நீ அறிந்திருக்கிறாயா?' என்று;
'செத்துப்போன நதிகளின் ஆன்மாக்கள்
அலைந்து திரியும் தடங்களை
உன் நெடிய மணல்வெளியெங்கும்
நீ கண்டிருக்கிறாயா?' என்று

பின்னர்
ஆற்றவொணா ஆத்திரத்தில்
கடல் என்னை மூழ்கடித்து விடக் கூடும்
அல்லது
பெருந்துயரத்தில் அது வற்றிவிடக் கூடும்


ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

ஈரமிருந்தால்..மழைக்காலக் காளான்களாய்
உன் கவனம் ஈர்க்க முயன்று
தோற்றுப் போகிறேன்

வெகு அலட்சியமாய்க்
கடந்து போகிறாய்
உன் கண்களால் என்னை..

இந்த மழைக்காலம் போனாலென்ன?
இன்னும் உயிர்த்திருப்பேன்
ஈரம் எஞ்சியிருக்கும் வரை

ஈரமிருந்தால்
நீயும் கொஞ்சம் இடங்கொடு;
உயிர்த்திருப்பேன்
உன் நெஞ்சத்திலும்..


ஞாயிறு, 23 ஜூன், 2013

முன்னொரு நாளில் நீ ஆறாய் இருந்தாய்


மெல்ல என் நிலம் விழுங்கி
முன்னேறிக் கொண்டிருக்கிறது
உன் கடல்

என் நிலமெங்கும்
ஒரு நோய் போலப் பற்றிப் பரவுகிறது
உன் உவர்ப்பின் நஞ்சு

மெதுவாய்த் தன் செழுமையிழந்து
மூர்ச்சையடையும் என் நிலம்
தனக்குள் தன்னைப் புதைத்துக் கொள்கிறது

முன்னொரு நாளில்
நீ ஆறாய் இருந்தபோது
உன் நீர்மையில் என் நிலம் உயிர்த்திருந்தது;
உன் தழுவலில் அது
பசுமையாய்ப் பூரித்திருந்தது

இன்று
உன் அபரிமிதமான உவர்ப்புக்கும்
வன்மம் மிகுந்த ஆர்ப்பரிப்புக்கும்
நானே காரணம் என்கிறாய்

உன் குற்றச்சாட்டில் திடுக்கிட்ட நான்
கண்களில் கண்ணீரைத் தேக்கி
உன் முன் மண்டியிட்டபடி
அது குறித்து ஏதும் தெரியாதென்கிறேன்

என் கண்ணீர்த் துளிகள்
உன் கடலில் எந்தச் சலனத்தையும்
ஏற்படுத்தாது போகவே
நான் அறிந்து கொண்டேன்
ஆறுகளால் ஆனதுதான் கடல் என்றாலும்
ஆறும் கடலும் வேறு வேறு என்பதை..


சனி, 15 ஜூன், 2013

கவிஞனைக் கொல்லும் கவிதைகள்


நானொன்று நினைக்க
என் கவிதைகள்
வேறொன்றை எழுதிச் செல்கின்றன

என் சொற்படி கேளாத
இக்கவிதைகளின் மீது
பெரும் வன்மம் கொண்டிருக்கிறேன்

இந்த இரவின் முடிவில்
நாளை அதிகாலையில்
என் கவிதைகளைக் கொன்று விடுவதெனத் தீர்மானித்து
திட்டங்களைத் தீட்டியபடி
உறங்கிப் போகிறேன்

அதிகாலையில்
என் பிணத்தின் மீது குதித்தபடி
என் கவிதைகள் அறிவிக்கின்றன
கவிஞன் இறந்து விட்டானென..ஞாயிறு, 12 மே, 2013

இனி இந்தச் சிறகுகளும் வானமும் என்னுடையவை..


நான் என் நிலமெங்கும் நடந்து
சோர்ந்திருந்தேன்;
நீ உன் சிறகுகள் விரித்து
வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தாய்.

ஒருநாள் நிலமிறங்கிய நீ
உன் சிறகுகளின் பெருமிதம்
குறித்துப் பேசினாய்;
நான் என் கால்களின் துயரத்தை
உன்னுடன் பகிர்ந்து கொண்டேன்.

எனக்காக இரங்கிய நீ
என் கால்களைப் பெற்றுக் கொண்டு
உன் சிறகுகளை எனக்கணிவித்து
உன் வானத்தை ஒரு முறை
சுற்றிவரச் சொன்னாய்.

நன்றிப் பெருக்கோடும்
பெருமகிழ்வோடும்
நிலம் விட்டு வானேகினேன்.

ஒரு சுற்று முடிந்தும்
நான் நிற்கவில்லை
பெருந்தன்மையோடு நீ
இன்னொரு சுற்றுக்கும் அனுமதித்தாய்.

வானமறிந்த நான்
பின்னர் நிலமிறங்க மறுக்க
நீ உன் சிறகுகளுக்காக
மன்றாடிக் கதறத் தொடங்கினாய்.

உன் கதறல்
வானமெங்கும் எதிரொலித்த
அவ்வேளையில்
அவ்வானம் என் வசமாகியிருந்தது.


வியாழன், 11 ஏப்ரல், 2013

என் காட்டில் அலையுமொரு வண்ணத்துப்பூச்சி


அங்கிங்கெனாதபடி
என் காடெங்கும் பறந்து திரிகிறாய்
ஒரு வண்ணத்துப் பூச்சியென..

உன் சிறகுகள்
உதிர்க்கும் வண்ணங்களில்
தன் இருளைத் தொலைத்து
மிளிர்கிறதென் காடு

நீ அமர்ந்துண்ணும்
ஒவ்வொரு துளித்தேனும்
கனிந்த எனதன்பின்
சாறென்பதை
நீ அறிந்திருக்கிறாயா?

ஒரு சிறுவனைப் போல்
ஓயாதுன்னைத் தேடியலைகிறேன்
நீ தென்படாப் பொழுதுகளில்
என் காட்டில்
நானே திக்கின்றித் தவிக்கிறேன்

முடிவற்றதென் காடு;
அவ்வாறே
உன் பறத்தலும்
என் தேடலும்..


ஞாயிறு, 16 டிசம்பர், 2012

நான் ஆதி மனிதன்


நான் ஆதி மனிதன்
என்னை விட்டு விடுங்கள்
திரும்பிச் செல்கிறேன்

நான் ஆதி மனிதன்
உங்கள் நாகரிகங்களிலிருந்து
என்னை விடுவியுங்கள்
என் குகைகளுக்குத் திரும்புகிறேன்

நான் ஆதி மனிதன்
உங்கள் கலாச்சாரங்களிலிருந்து
என்னை விடுவியுங்கள்
என் காடுகளுக்குத் திரும்புகிறேன்

நான் ஆதி மனிதன்
உங்கள் சமத்துவமின்மைகளிலிருந்து
என்னை விடுவியுங்கள்
என் மலைகளுக்குத் திரும்புகிறேன்

நான் ஆதி மனிதன்
உங்கள் மொழிகளிலிருந்து
என்னை விடுவியுங்கள்
என் சைகைகளுக்கும் குறிகளுக்கும் திரும்புகிறேன்

நான் ஆதி மனிதன்
உங்கள் ஆடைகளிலிருந்து
என்னை விடுவியுங்கள்
நான் நிர்வாணத்துக்குத் திரும்புகிறேன்

நான் ஆதி மனிதன்
உங்கள் சாத்தான்களின் உலகத்திலிருந்து
என்னை விடுவியுங்கள்
என் கடவுளிடம் திரும்புகிறேன்

நான் ஆதி மனிதன்
என் காடுகளை எனக்குத் திருப்பித் தாருங்கள்
உங்கள் மொத்தத்தையும் திருப்பித் தருகிறேன்;
உங்கள் ஆயுதங்களையும்..


சனி, 27 அக்டோபர், 2012

மணல்வெளித் துயரம்முன்னொரு நாளில்
பாய்ந்திருந்த நதியின் தடங்களைத்
தனக்குள் புதைத்துக் கொண்டு
ஒரு பாலையென நீண்டு விரிந்து கிடக்கிறது
மணல்வெளி

தகிக்கும் அதன் வெம்மையின்
துயர் தணிக்கும் உபாயம் யாரறியக் கூடும்?

இரு கரைகளிலும்
அடர்ந்திருக்கும் பச்சை மரங்களின்
இலைகளில் கிளைகளில்
இன்னுமிருக்கக்கூடும் நதியின் எச்சங்கள்

அம்மரங்கள்
அசைந்து அசைந்து விசிறியும்
ஆற்றவியலாது நீள்கிறது
மணல்வெளியின் வெம்மைத்துயர்

அது
பருவமழையின் துக்க விசாரிப்புகளின்
போதாமையில்
தணிவதாயில்லை

நகரும் மேகங்கள்
கடந்து செல்லும் பறவைகள்
பயணிக்கும் நான்
யாரும் அறியக்கூடுவதில்லை;
காலணிகளற்றுக் கடந்துபோகும்
ஏதேனும் சில கால்கள் மட்டுமே
பகிர்ந்து கொள்ள முடியும்
அதன் வெம்மையின் துயரத்தை..

இருகரைகளையும் இணைக்கும்
இப்பாலத்தின் மீது
ரயிலில் கடக்கும் போதெல்லாம்
அதிர்ந்து அதிர்ந்து
விம்மி விம்மி அடங்குகின்றன
இப்பெரு மணல்வெளியும்
என் சிறுநெஞ்சமும்..


சனி, 29 செப்டம்பர், 2012

வீடுகளைக் கனவு காண்பவன்


வீடுகளால் நிரம்பி வழியும்
கனவுகளுக்குச் சொந்தக்காரன் அவன்
வீடுகளைத் தவிர வேறெதையும்
அவன் கனவு காண்பதேயில்லை

அவன் கனவில் வரும் வீடுகள்
நகரத்து மாடி வீடுகளைப் போலவே
யாரும் எளிதில் அணுகமுடியாதவாறு
இரும்புக் கதவுகளோடும் குறைந்த வெளிச்சத்தோடும்
அமானுஷ்யமாய் இருக்கின்றன

மழையும் வெயிலுங்கூட
அவற்றின் ரகசியங்களை அறியமுடியாதவாறு
இறுகச் சாத்தப்பட்டிருக்கும் அவ்வீடுகளைக்
கதவுகளிடமிருந்தும் சாளரங்களிடமிருந்தும்
அவன் விடுவிக்கிறான்

எல்லா அறைகளும் படுக்கையறைகளாகவே
இருக்கும் அவ்வீடுகளில்
அவனோடு படுத்துறங்குவோர் யாவரையும்
அவன் முன்பே அறிந்திருக்கிறான்

கனவில் ஒருநாள் திடீரென மழைபெய்ய
அவன் வேறுவழியில்லாமல்
கதவுகளாலும் சாளரங்களாலும்
மழையின் முகத்தில் ஓங்கி அறைகிறான்

அதிர்ச்சியில்  கனவிலிருந்து வெளியேறிய மழை
யதார்த்தத்தில் நுழைய
திடுக்கிட்டுக் கண்விழித்தவன்
தன் கனவை வாரிச் சுருட்டிக் கொண்டு
ஓரிடம் தேடி ஒதுங்குகிறான்

கனவு வீடுகளில் அவனோடு
படுத்துறங்கியோர் யாவரும்
பக்கத்தில் ஒதுங்கியிருக்க
அவர்கள் அவனைக் கண்டு
புன்முறுவல் பூக்கிறார்கள்

நேரந்தெரியாத அந்த இரவில்
விடாமல் பெய்து கொண்டிருந்த மழையில்
அந்தச் சாலையோர சிறுவனின் கனவு
கொஞ்சம் கொஞ்சமாய்
நமுக்கத் தொடங்குகிறது


Twitter Bird Gadget