நான் என் நிலமெங்கும் நடந்து
சோர்ந்திருந்தேன்;
நீ உன் சிறகுகள் விரித்து
வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தாய்.
ஒருநாள் நிலமிறங்கிய நீ
உன் சிறகுகளின் பெருமிதம்
குறித்துப் பேசினாய்;
நான் என் கால்களின் துயரத்தை
உன்னுடன் பகிர்ந்து கொண்டேன்.
எனக்காக இரங்கிய நீ
என் கால்களைப் பெற்றுக் கொண்டு
உன் சிறகுகளை எனக்கணிவித்து
உன் வானத்தை ஒரு முறை
சுற்றிவரச் சொன்னாய்.
நன்றிப் பெருக்கோடும்
பெருமகிழ்வோடும்
நிலம் விட்டு வானேகினேன்.
ஒரு சுற்று முடிந்தும்
நான் நிற்கவில்லை
பெருந்தன்மையோடு நீ
இன்னொரு சுற்றுக்கும் அனுமதித்தாய்.
வானமறிந்த நான்
பின்னர் நிலமிறங்க மறுக்க
நீ உன் சிறகுகளுக்காக
மன்றாடிக் கதறத் தொடங்கினாய்.
உன் கதறல்
வானமெங்கும் எதிரொலித்த
அவ்வேளையில்
அவ்வானம் என் வசமாகியிருந்தது.
5 கருத்துரைகள்:
என்னங்க இப்படியா செய்வது...?
ஹிஹி... ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
வித்தியாசமான கருத்தாக உள்ளது சகோதரா. இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வாழ்த்தியமைக்கு திண்டுக்கல் தனபாலன் மற்றும் கோவைக்கவி இருவருக்கும் எனது நன்றிகள்!
சிறப்பு நண்பரே..
நன்றி தோழரே!
கருத்துரையிடுக