திங்கள், 13 செப்டம்பர், 2010

நகரும் காட்சிகள்..


வழமையான ரயில் பயணங்களில்
நகரும் ரயிலுக்கு வெளியே
எதிர்த் திசையில்
கடந்து போகும் காட்சிகளினூடே
ஏதாவதொன்றில்
லயித்து விடுகிறது மனம்..

கையசைத்துச் செல்லும் சிறுவர்கள்
பால்யத்தை நினைவுபடுத்திப் போகிறார்கள்..

மொட்டை மாடியில் நின்றபடி
குழந்தைக்குச் சோறூட்டும் தாய்
ஏக்கப் பெருமூச்சொன்றை வரவழைக்கிறாள்..

தொலைவில்
சிறகடித்துப் பறக்கும் பறவையொன்று
மனித சுதந்திரத்தை
மறுபரிசீலனை செய்யச் சொல்கிறது..

அழகாயிருக்கும் வீடொன்று
யாரோ ஒருவரின்
கனவு நிறைவேறியதன்
குறியீடாய் நிமிர்ந்து நிற்கிறது..

உயர்ந்திருக்கும் மலையொன்று
செருக்கின் மிச்ச சொச்சங்களைச் சிதறடித்து
மண்டியிடச் சொல்கிறது..

உயிர் வீணையின் நரம்புகளில்
சுரம் மீட்டிப் போகின்றன
இவையும் இவையொத்ததுமான காட்சிகள்..

எதிர்வரும் நாளொன்றின்
ஏதாவதொரு நேரத்தில்
ரயிலுக்கு வெளியே காட்சியாகக்கூடும்
யாருக்கேனும் நானும்..

ஆயினும்
காட்சியாவதில் இல்லை;
காண்பதில்தான் இருக்கிறது
களிப்பென்பது..
.
.

சனி, 28 ஆகஸ்ட், 2010

தனிமைக் காலங்கள்


.
1.
ஆறுதலாய் நான்..
பயமற்று
எப்போதும் என்னுடனிருக்கிறது
தனிமை.
----------------------------------------------------
2.
தனித்திருக்கிறேன்..
நிலவே
நீயேனும் வருவாயா
எனதறை நிரப்ப?
----------------------------------------------------
3.
என் தனிமை
அறிமுகம் செய்து கொள்கிறது
புத்தனிடம் தன்னை.
----------------------------------------------------
4.
நீண்ட நாள் தனிமை
துயரமானது;
தற்காலிகத் தனிமை
இன்னும் துயரமானது.
----------------------------------------------------
5.
தனிமையில் அழுவதில்
வசதியிருக்கிறது;
கோழையென்று யாரும்
குற்றம் சாட்டுவதில்லை.
----------------------------------------------------
6.
கடவுள் கூட
தனித்திருப்பதில்லை
மனிதக் கற்பனையில்.
----------------------------------------------------
7.
தனித்திருக்கின்றன
வானுக்கும் மண்ணுக்கும்
இடையில்
மழைத் துளிகள்.
----------------------------------------------------
8.
காலைச் சுற்றி வரும் நாயும்
தனிமையும் ஒன்று;
துரத்தியடிப்பது
நிரந்தரத் தீர்வாகாது.
ஒன்று
நாயை வளர்க்க வேண்டும்;
இல்லை
அதைக்  கொன்று போட வேண்டும்.
.
.

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

அலையும் இருப்பு

.
.
மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறேன்
குப்பைகள் நிறைந்ததான
உலகமிதில்..

தொடக்கத்தில்
எனக்கெனவொரு
குப்பை கையளிக்கப்பட்டு
அறிமுகப்படுத்தப்பட்டது
ஆன்மீகமென..

பின்னொரு நாளில்
வேறு சிலரால்
அதன் அடையாளம் மாற்றப்பட்டது
நாத்திகமென..

தொடர்ந்து
'துவம்'களெனவும் 'இசம்'களெனவும்
அதன் வடிவம் மாறிக்கொண்டேயிருந்தது;
நிறம் மாறிக்கொண்டேயிருக்கும்
பச்சோந்தியைப் போல..

ஆயினும்
பிறிதொருவரின் குப்பையை விடவும்
அது உயர்ந்ததாகவுமில்லை;
தாழ்ந்ததாகவுமில்லை
எந்தவொரு நாளிலும்..

அவ்வப்போது
கூட்டிப் பெருக்கி
வெளியே வீசிய பின்னும்
குறையாமல் கூடிக்கொண்டேயிருக்கிறது
குப்பை இன்னும்..

இப்போதெல்லாம்
நிலை கொள்ளாமல்
அலைந்து கொண்டேயிருக்கிறது
என்னிருப்பு;
குப்பைகளற்றதானவொரு
வேற்றிடம் தேடி..
.
.

சனி, 7 ஆகஸ்ட், 2010

நீயும் எனது அறையும்: சில காதல் குறிப்புகள்


குறிப்பு 1 
உன் வருகை நிகழும்
ஒவ்வொரு முறையும்
சொற்களற்ற
கவிதையையொத்திருக்கிறது
மௌனத்தால் நிரம்பியிருக்கும்
எனதறை..

குறிப்பு 2 
சொல்லிவிட்டு
எனதறைக்குள்
நீ
நுழையும்போதெல்லாம்
சொல்லாமலே வெளியேறுகின்றன
எனது கனவுகள்..

குறிப்பு 3 
நீ
அறியாதபோதும்
என் குறிப்பறிந்திருக்கின்றன 
நீ
உள்ளே நுழைந்ததும்
காற்றில் தானாகவே மூடிக் கொள்ளும்
எனதறையின் ஜன்னல்கள்..

குறிப்பு 4 
எனதறையின் 
எல்லாப்  பொருட்களும்
உன் தொடுதலின்
சுகமறிந்தவை;
என்னைத் தவிர..

குறிப்பு 5 
உன் விரல்பட்டு 
கிழிவதற்கென
காத்திருக்கிறது
நாள்தோறும்
எனதறையின் நாள்காட்டி..

குறிப்பு 6 
நிரம்பி வழிகிறது
எனதறையின் குப்பைத் தொட்டி 
உனக்கென நான்
எழுதிக் கிழித்த கடிதங்களால்..

குறிப்பு 7 
நாணமுற்ற பல்லிகள்
காணக் கிடைக்கின்றன
எனதறையின் சுவர்களில்
அது அவைகளுக்கு
நீ
அறிமுகம் செய்தது..

குறிப்பு 8 
உனக்கெனவொரு
வாசமிருப்பதை
அறிவிக்கிறது எனதறை
நீ
வந்து போனபின்..






ஞாயிறு, 25 ஜூலை, 2010

நீயே..


.
.
பகற்பொழுதுகளில்
ஆர்த்தெழும் என் காமப் பறவையின்
பெருஞ்சிறகுகளை
வெட்டி வீழ்த்தி விடுகிறாய்
உன் ஒற்றைப் பார்வையில்..!

இன்னும் பெரிதாய்
பின் நீயே
அதன் சிறகுகளை
வளர்த்தெடுக்கவும் செய்கிறாய்
இரவுப் பொழுதுகளில்..!
.
.

சனி, 24 ஜூலை, 2010

எல்லா மரத்தடியிலும் புத்தன்..


.
.
வழக்கமாய்
தன் நிழலில் வந்தமர்வோரில்
கொஞ்ச நாளாய்க் காணாமல் போயிருந்தவன்
குறித்துக் கவலையேதும் கொள்ளாமல்
நெடிதுயர்ந்து நிற்கிறது
ஊரோரத்து வேப்பமரம்..

அன்றாடம் உதிர்த்திடும்
எண்ணற்ற இலைகளின் இழப்பில்
அது பக்குவப்பட்டிருந்தது..

தன்னில் வந்தமரும் பறவைகள்
தனக்கானதல்ல என்பதையும்
அது அறிந்தேயிருந்தது..

எல்லாத் திசைகளிலும் நீண்டிருந்த
கிளைக்கரங்களால்
அது தன் இறைவனைத் தேடிக்கொண்டிருக்கவில்லை..

தன் பெருநிழல் குறித்தான
பெருமித உணர்வில்
அதன் தலைக்கனமும் கூடியிருக்கவில்லை..

தன்மீது எறும்புகள் ஊர்ந்தபோதும்
அணில்கள் விளையாடியபோதும்
அது மறுப்பேதும் சொல்லவில்லை..

தன் கிளைகளில் பறவைகள் கூடுகட்டியபோதும்
தன் பொந்துகளில் பாம்புகள் குடியிருந்தபோதும்
அது எதிர்ப்பேதும் காட்டவில்லை..

அது அதுவாகவேயிருந்தது-
வெயில் எரித்தபோதும்
மழை நனைத்தபோதும்..

அது அதுவாகவேயிருந்தது-
தென்றல் வருடியபோதும்
சூறாவளி கிளை முறித்தபோதும்..

ஒரு மரம்
முதலில் தானேயிருக்கிறது ஒரு புத்தனாய்;
அதைக் கண்டடைந்தவன்
பின் தானுமாகிறான்  ஒரு புத்தனாய்..

புத்தன் அறிந்திருப்பான்
ஒரு மரம்
உலகின் மற்ற எல்லா மரங்களின்
மூலங்களையும் தன்னுள் கொண்டிருப்பதை..

புத்தனுக்குரியவை
போதி மரத்தடிகள் மட்டுமல்ல;
இந்த வேப்பமரத்தடியிலும்
உருவாகலாம் ஒரு நவீன புத்தன்..

இந்நேரம் ஒரு புத்தன் ஆகியிருக்கக்கூடும்
இவ்வேப்பமர நிழலில்
வழக்கமாய் வந்தமர்வோரில்
கொஞ்ச நாளாய்க் காணாமல் போயிருந்தவனும்..

ஆயினும்
ஒரு புத்தன்
உலகிற்கு அறிவித்துக் கொள்வதில்லை
தன்னை புத்தனென்று..

உலகை அறிந்து கொள்கிறான் புத்தன்;
உலகமோ அறிந்து கொள்வதேயில்லை புத்தனை..!
.
.

ஞாயிறு, 18 ஜூலை, 2010

அடித்து நொறுக்கு..!

.
.
அடித்து நொறுக்கு..!
உன் ஆத்திரம் தீரும் மட்டும்...
ஈவிரக்கமற்ற
இக்கொடுஞ்சமூகத்தின்
இழிவுகளை..!
.
.

சனி, 10 ஜூலை, 2010

காலமும் என் கனவுகளும்..


.
.
கருணையற்று
நீள்கிறது காலம்
என் கனவுகளைத் தின்றபடி..

தவிரவும்
என் கனவுகளுக்குள்  அடங்காதவாறு
அது எல்லையற்றுமிருக்கிறது..

ஏதாவதொரு புள்ளியில்
காலம் என்னையோ காலத்தை நானோ
கடந்துவிடக் கூடும்..

அதன் பின்னும்
காலத்தால் தின்றழிக்கப்பட்ட
என் கனவுகள் முன்னெடுக்கப்படும்
என்னைத் தொடரும் எவனோ ஒருவனால்..

எனினும்
இன்னும் வீச்சுடன்
காலம் அப்போதும் காத்திருக்கும் 
கனவுகளைத் தின்பதற்கென..!
.
.

சனி, 3 ஜூலை, 2010

கொடும் இரவுகளும் பாழும் பகல்களும்..

.
.
நீயற்ற
ஏக்கத் தனிமையில்
நீளும் இரவுகள்
நிரம்பி வழிகின்றன
உன் கனவுகளால்..

நிலவு சுடும்
அக்கொடும் இரவுகள்
வேண்டாமென்றாலும்
விடுவதாயில்லை இயற்கை..

ஒருவேளை
அது அறிந்திருக்கக் கூடும்-
நீ மீண்டும் வந்த பின்
பாழும் பகல்கள்  வேண்டாமென்று
பரிந்துரைப்பேன் என்பதையும்..!
.
.

சொல்லத்தான் நினைக்கிறேன்..

.
.
நீ
முகம் காட்டும் போதெல்லாம்
உன்னை
எதிர் கொள்ளத் திராணியில்லாமல்
எப்போதும் உனக்கு
முதுகு காட்டியே நிற்கிறது
என் காதல்..!
.
.
Twitter Bird Gadget