.
.
வழக்கமாய்
தன் நிழலில் வந்தமர்வோரில்
கொஞ்ச நாளாய்க் காணாமல் போயிருந்தவன்
குறித்துக் கவலையேதும் கொள்ளாமல்
நெடிதுயர்ந்து நிற்கிறது
ஊரோரத்து வேப்பமரம்..
அன்றாடம் உதிர்த்திடும்
எண்ணற்ற இலைகளின் இழப்பில்
அது பக்குவப்பட்டிருந்தது..
தன்னில் வந்தமரும் பறவைகள்
தனக்கானதல்ல என்பதையும்
அது அறிந்தேயிருந்தது..
எல்லாத் திசைகளிலும் நீண்டிருந்த
கிளைக்கரங்களால்
அது தன் இறைவனைத் தேடிக்கொண்டிருக்கவில்லை..
தன் பெருநிழல் குறித்தான
பெருமித உணர்வில்
அதன் தலைக்கனமும் கூடியிருக்கவில்லை..
தன்மீது எறும்புகள் ஊர்ந்தபோதும்
அணில்கள் விளையாடியபோதும்
அது மறுப்பேதும் சொல்லவில்லை..
தன் கிளைகளில் பறவைகள் கூடுகட்டியபோதும்
தன் பொந்துகளில் பாம்புகள் குடியிருந்தபோதும்
அது எதிர்ப்பேதும் காட்டவில்லை..
அது அதுவாகவேயிருந்தது-
வெயில் எரித்தபோதும்
மழை நனைத்தபோதும்..
அது அதுவாகவேயிருந்தது-
தென்றல் வருடியபோதும்
சூறாவளி கிளை முறித்தபோதும்..
ஒரு மரம்
முதலில் தானேயிருக்கிறது ஒரு புத்தனாய்;
அதைக் கண்டடைந்தவன்
பின் தானுமாகிறான் ஒரு புத்தனாய்..
புத்தன் அறிந்திருப்பான்
ஒரு மரம்
உலகின் மற்ற எல்லா மரங்களின்
மூலங்களையும் தன்னுள் கொண்டிருப்பதை..
புத்தனுக்குரியவை
போதி மரத்தடிகள் மட்டுமல்ல;
இந்த வேப்பமரத்தடியிலும்
உருவாகலாம் ஒரு நவீன புத்தன்..
இந்நேரம் ஒரு புத்தன் ஆகியிருக்கக்கூடும்
இவ்வேப்பமர நிழலில்
வழக்கமாய் வந்தமர்வோரில்
கொஞ்ச நாளாய்க் காணாமல் போயிருந்தவனும்..
ஆயினும்
ஒரு புத்தன்
உலகிற்கு அறிவித்துக் கொள்வதில்லை
தன்னை புத்தனென்று..
உலகை அறிந்து கொள்கிறான் புத்தன்;
உலகமோ அறிந்து கொள்வதேயில்லை புத்தனை..!
.
.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக