இருள் குறைந்த நகரத்தின்
இரைச்சலொழிந்த இவ்விரவில்
தனிமையைத் தின்று கொண்டிருக்கிறேன்
அல்லது
தனிமை என்னைத் தின்று கொண்டிருக்கிறது..
சுவர்க் கடிகாரத்தின் முள் நகரும் ஓசை
பேரிரைச்சலென செவி பிளக்கிறது..
இரவு விளக்கின் மெல்லிய வெளிச்சமோ
உச்சி சூரியனென உடலெரிக்கிறது..
அறைக்குள் நுழைந்து
பின் திடுக்கிட்டுத் திரும்பும்
எலிகளும் கரப்பான்களும்
நானின்னும் உறங்காதது குறித்து
எரிச்சலுறுகின்றன..
துயரத்தை யாரிடம்
பகிர்ந்து கொள்வதென யோசித்துக் கொண்டிருக்கையில்
’உச்’ கொட்டியவாறு
தங்கள் இரங்கலைப் பதிவு செய்கின்றன
சுவர்ப்பல்லிகள்..
நேரத்தை நகர்த்தவென
காற்றில் விரல் கொண்டு
நான் வரையும் ஓவியங்கள்
இந்த இரவைப் போலவே
அர்த்தமற்றிருக்கின்றன..
இத்தனை நீளமான
இந்த இரவைச் சபித்தபடி
படுக்கையில் புரள்கையில்
தொலைவில் ஒலிக்கிறது
சேவலொன்றின் கூவல்..
ஒருவழியாய்
இன்னும் சற்றைக்கெல்லாம்
முடிந்து விடும் இவ்விரவு
எனதிந்தக் கவிதையைப் போலவே..!
பின்குறிப்பு:
இரவு உறக்கம் பெரும்பாக்கியம்;
இரவில் உறங்குவோர் பேறு பெற்றோர்..!
இந்த இரவைச் சபித்தபடி
படுக்கையில் புரள்கையில்
தொலைவில் ஒலிக்கிறது
சேவலொன்றின் கூவல்..
ஒருவழியாய்
இன்னும் சற்றைக்கெல்லாம்
முடிந்து விடும் இவ்விரவு
எனதிந்தக் கவிதையைப் போலவே..!
பின்குறிப்பு:
இரவு உறக்கம் பெரும்பாக்கியம்;
இரவில் உறங்குவோர் பேறு பெற்றோர்..!
(அறிஞர் அண்ணாவின் நாடகத் தலைப்பை இக்கவிதைக்கு நன்றியோடு பயன்படுத்தியிருக்கிறேன்..)
4 கருத்துரைகள்:
உறங்குவோர் பேறுபெற்றோர் எனினும்
உறக்கமற்று சிந்திப்போரால்தான்
உலகம் பல் துறைகளில் விழித்தெழுந்திருக்கிறது
இந்த சிறப்பான கவிதைக்காக ஒரு நாள் தூக்கம்
இழப்பு என்பது மிகக் குறைந்த விலை
தரமான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
நன்றி.. திரு.ரமணி அவர்களே..!
தங்கள் வாழ்த்து என்னை ஊக்குவிக்கிறது..!
நிசமா கலக்கலா இருக்கு
நன்றி.. திரு.கவி அழகன் அவர்களே..!
கருத்துரையிடுக