ஞாயிறு, 30 ஜனவரி, 2011

கனவில் உறங்கியவன்


கைகள் நிறைய பூக்களை ஏந்தியவாறு
அடிக்கடி என் கனவுகளில் வந்து போகிறாள்
சிறுமியொருத்தி..

வழக்கமாய்
பூக்களையெனக்குப் பரிசளித்த பின்
தன் பஞ்சு விரல்களால்
என் விரல்களைப் பற்றியவாறு
இட்டுச் செல்கிறாள்
தன் வீட்டிற்குள் என்னை..

மணலால் கட்டப்பட்டிருக்கிறது
அவள் வீடு..
இன்னதென அறியமுடியாத
வடிவமற்ற கிறுக்கல்களால் நிரம்பியிருக்கின்றன
அதன் சுவர்கள் முழுவதும்..

தன் ஓவியங்களென
அவற்றை அறிமுகப்படுத்தி மகிழ்கிறாள்
சிறுமி என்னிடம்..

வீடெங்கும் இறைந்து கிடக்கும்
பொம்மைகளிலிருந்து
தானே தேர்ந்தெடுத்த
ஒன்றிரண்டை மீளவும் பரிசளிக்கிறாள்
அவளெனக்கு..

களிமண்ணால் செய்யப்பட்டிருக்கும்
அவளது பொம்மைகள்
நான் முன்னெப்போதும் அறிந்திராதவை..

சட்டென நினைவு வந்தவளாய்
மீண்டும் என் விரல்களைப் பற்றியவள்
தன் தோட்டத்தைக் காட்டுவதாய்ச் சொல்லி
அழைத்துச் செல்கிறாள்  என்னை..

வளர்ப்பவரைத் தொடரும் நாயென
நானும் தொடர்கிறேன்  அவளை..

எல்லையற்ற வெளியென
பரந்திருக்கிறது  அவள் தோட்டம்..
கணக்கிலடங்கா
செடிகளும் மரங்களும்
பறவைகளும் விலங்குகளுமாய்
ஒரு வனத்தையும் ஒத்திருக்கிறது  அது..

சிறுமி
வழியெங்கும் எதிர்ப்படும்
பறவைகள் விலங்குகளிடம்
நலம் விசாரித்தபடியே நடக்கிறாள்
அதனதன் மொழிகளில்..

அவ்வப்போது அவள் கன்னங்களில்
முத்தமிட்டுச் செல்கின்றன
வண்ணத்துப் பூச்சிகள் சில..

திடீரென மின்னல் வெட்டி மழையடிக்க
என் விரல்களை உதறியவள்
தன் கைகளை நீட்டிச் சுற்றியவாறு
நடனமிடத் துவங்குகிறாள்
மழையில் நனைந்தபடி..

அடர்ந்த மரமொன்றின் அடியிலிருந்து
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்
ஏதும் செய்ய இயலாதவனாய்..

திடீரென பெய்த மழை
திடீரென நின்றும்  போக
சுணங்கிய முகத்துடன்
மீண்டும் என் விரல்களைப் பற்றுகிறாள்
மூன்றாம் முறையாக..

நெடுந்தூரம் வந்துவிட்டதில்
அயர்ந்து அமர்கிறேன் நான்..
அவள்
புன்னகைத்தவாறு அருகமர்ந்து 
என் தலையை வருடுகிறாள் வாஞ்சையுடன்;
தீயணைந்து தணிகிறேன் நான்..

மெல்ல என் தலையை
தன் மடியில் சாய்ப்பவள்
புரியாத மொழிதனில்
பாடலொன்றை இசைக்கவும்  தொடங்குகிறாள்..

சட்டென அரவங்களனைத்தும் அற்றுப் போக
பிரபஞ்சத்தின் ஒற்றைக் குரலாய்
ஒலித்துக் கொண்டிருக்கிறது அவள் பாடல்..

மரணத்தினும் மேம்பட்ட
உறக்கமொன்றினுள்
வெகு வேகமாய் மூழ்கிக் கொண்டிருக்கும்
அவ்வேளைகளில்
வெகு வேகமாய் வெளியேறிக் கொண்டுமிருக்கிறேன்
இப்பின்னிரவுகளின்   உறக்கத்திலிருந்து..
.
.

7 கருத்துரைகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அறுமையான கவிதை..தொடருங்கள்

//விழிக்க மனமில்லை
கனவில் கவிதை..//

arasan சொன்னது…

அருமையா இருக்குங்க ... வார்த்தைகளை ரசித்தேன் ... வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

khadar avargalukku,
I felt that it was a boring narration untill
I reached the last stanza of your kavithai. The title is equally good as your end note.
Novel thought, never heard before !

-saku

அப்துல் காதர் சொன்னது…

திரு. சௌந்தர் அவர்களுக்கு நன்றிகள்..!

அப்துல் காதர் சொன்னது…

திரு. அரசன் அவர்களுக்கு நன்றிகள்..!

அப்துல் காதர் சொன்னது…

நண்பர் சாகு அவர்களுக்கு நன்றிகள்..!

Unknown சொன்னது…

கவிதை மிகவும் அருமை..

தலைப்பே என்னை உங்கள் வலைப்பதிவுக்கு ஈர்த்தது.. மிக அருமையான தலைப்பு..

பாராட்டுக்கள்..

Twitter Bird Gadget