பூமி
தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது
பிரளய நாளொன்றில்..
பூமியின் மறு உயிர்ப்பாகவும்
இருக்கக்கூடும்
பிரளயமென்பது..
அது
உலகம் உறங்கி வழியும்
இரவின் அமைதியிலோ
உலகம் விரைந்து இயங்கும்
பகலின் பரபரப்பிலோ
நிகழக் கூடும்..
அந்நாளில் கோப்பைத் தேநீருடன்
நாளிதழில் முந்தைய நாள் நிகழ்வுகளை
நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கக்கூடும்
நடக்கவிருக்கும் அபாயம் அறியாமல்..
அல்லது
சாலையை வெகுகவனமாய்க் கடந்து கொண்டிருக்கக்கூடும்
இனியும் கவனத்தில் கொள்வதற்கொன்றுமில்லை
என்பதறியாமல்..
உங்கள் பிள்ளைகள்
'ஒளிமயமான எதிர்காலம்' குறித்தான
தன்னம்பிக்கைக் கருத்தரங்கைச்
செவிமடுத்துக் கொண்டிருக்கக்கூடும்
காலங்கள் முற்றுப் பெறப்போகும்
கதை தெரியாமல்..
உங்கள் வாழ்க்கைத்துணை
உங்களின் தவற்றை மன்னித்து விட்டதாய்
ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கக் கூடும்
பாவங்கள் மட்டுமின்றி
புண்ணியங்களும் தண்டிக்கப்படப் போகும்
தீர்ப்பு நாள் வந்துவிட்டது தெரியாமல்..
அப்பிரளய முடிவில்
நோவாவின் கப்பலைப் போன்றொரு
விண்வெளிக் கப்பலில்
நீங்கள் பயணம் செய்யக்கூடும்..
அராரத் மலையைப் போன்றொரு
வேற்றுக் கிரகம்
உங்களுக்குத் தஞ்சமளிக்கவும் கூடும்..
எந்த ஒரு கணத்திலும்
பிரளயம் நிகழ்ந்து விடுவதற்கான
வாய்ப்புகள் இருக்கவே செய்தாலும்
மறு பரிணாமத்திற்கெனத் தெரிந்தெடுக்கப்படும் உயிர்களில்
நீங்களும் ஒருவராய் இருப்பதற்கான
வாய்ப்புகள் மட்டும்
இல்லாமலே போகக்கூடும்..!
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக