.
.
நிலவுக்குத் தெரியாது
எத்தனையாவது
நிலவுக் கவிதை இதுவென்பது..
கணக்கு எதுவும் வைத்துக் கொள்ளாமல்
காலம் காலமாய்
அது காத்துக் கொண்டேயிருக்கிறது
குழந்தைகளுக்காக;
இன்னமும் மரணித்து விடாத
வடை சுடும் பாட்டியோடு..
முழு நிலவின் இரவுகளிலோ
குறைநிலவின் இரவுகளிலோ
தொடர்ந்து நிலவில்
தொலைந்த வண்ணமிருக்கிறார்கள்
கவிஞர்கள்
தங்கள் கவிதைகளைத் தேடி..
அதிக வெளிச்சமுமில்லாத
அதிக இருளுமில்லாத
நிலவின் இரவுகள்
அழகானவையென்று
அதிசயிக்கிறார்கள் கவிஞர்கள்..
அவற்றை விடவும் அழகானவை என்பேன்
நிலவற்ற இருட்டு இரவுகளை..
மனித வன்மங்களும் அசிங்கங்களும்
இருட்டுப் போர்வைக்குள்
தங்கள் முகங்களைப் புதைத்துக் கொள்வதால்
நானும் கூட
நிலவில் தொலைந்து போகிறேன்-
நிலவற்ற அமாவாசை இரவுகளில்..!
.
.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக