.
சிக்கன் பிரியாணி
வாசத்தைப் போலவே
எப்போதும் என்னை (எல்லோரையும்)
வசீகரிப்பதாய் இருக்கிறது
ஜீவகாருண்யம்..
ஆனாலும்
இன்னும் எனக்கு சாத்தியப்படவில்லை
சிக்கன் பிரியாணியைக் கைவிடுவது
இப்போதெல்லாம்
சிக்கன் பிரியாணியின்
சுவை குறைந்தேயிருக்கிறது
குற்ற உணர்வு கூடியிருப்பதால்..
குளியலறைத் தண்ணீரில்
அடித்துச் செல்லப்படாமல்
கைதூக்கி விடப்பட்ட எறும்புகளோ
கடித்தாலும் அடிக்காமல்
துரத்தி விடப்பட்ட கொசுக்களோ
அல்லது
இரவில் பொறியில் சிக்கி
காலையில் கொல்லப்படாமல்
வெளியேற்றப்பட்ட எலிகளோ
எவ்வளவு இருக்குமென்று
கணக்கு எதுவும் வைக்கவில்லை ..
நிச்சயமாக எப்போதும்
இதைவிடக் கூடுதலாகவே
இருக்கிறது
என் பிரியாணிக்காகக் கொல்லப்படும்
கோழிகளின் எண்ணிக்கை..
எனக்காகக் கொல்லாமல் விடப்பட்ட
கோழிகள் இவையென்று
எதையும் என்னால்
அடையாளம் காண முடியாவிட்டாலும் கூட
எதிர்காலத்தில்
என்றாவது ஒருநாள்
எனக்கும் சாத்தியப்படலாம்
சிக்கன் பிரியாணியைக் கைவிடுவது..
ஆனாலும்
சிக்கன் பிரியாணியைக் கைவிட வேண்டிய
அவசியம் எதுவுமில்லை உங்களுக்கு
சலிப்புத் தட்டும்வரை..
சலிப்புத் தட்டியபின்
சிக்கன் பிரியாணியைக் கைவிட்டபின்
யாரேனும் ஒருநாள் காரணம் கேட்டால்
சலித்து விட்டதாய்ச் சொல்லாதீர்கள்..
பௌத்தமோ ஜைனமோ
உங்களை ஆட்கொண்டு விட்டதாகவோ
ஜீவகாருண்யம்
உங்களைக் கவர்ந்து விட்டதாகவோ
சொல்லுங்கள்..
சமூகம் சற்று மேலதிகமாய்
உங்களை கவனிக்கக் கூடும்..
காரணம்
எதுவாயிருந்தால் என்ன?
கொல்லப்படுவதற்கென்றே
வளர்க்கப்படும்
சில கோழிகள் காப்பாற்றப்படுவதே
கடைசியில் நோக்கமாய் இருக்கட்டும்..
(கோழிகள் மட்டுமல்ல அனைத்து உயிர்களையும் நேசிப்போம்..
கொல்லான் புலால் மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிர்களும் தொழும்
-திருவள்ளுவர் ).
.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக