செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

தீராத விளையாட்டு
உலகெங்கும் போர்க்களங்களில்
விளையாட்டுக் களங்களைப் போல்
வலம் வருகிறார்கள் இராணுவ வீரர்கள்.
விமானங்கள் டாங்கிகள் துப்பாக்கிகள்
அவர்களது விளையாட்டுக் கருவிகளாய் இருக்கின்றன.
வியூகங்கள் வகுத்து
எதிரிகளை வீழ்த்தி எக்காளமிடுகிறார்கள்;
ஊர்களை பெண்களைச் சூறையாடுகிறார்கள்;
சிலசமயம்
செத்துப்போன எதிரிகளின் உடல்கள் மீது
சிறுநீர் கழித்துக் கொண்டாடுகிறார்கள்.

வாழ்க்கை என்னும் விளையாட்டை
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் தாய்மார்கள்.
விதிகளை மீறி
தாய்மார்களின் விளையாட்டில் நுழைந்து
அவர்களைத் தோற்கடிக்கிறார்கள்
இராணுவ வீரர்கள்.
கனவுகள் சிதற
கருணை மிகுந்த தங்கள் விழிகளைத்
திறந்தபடி செத்துப்போகிறார்கள்
தாய்மார்கள்.

அவர்கள் விழிகள் வெறிக்கும் திசையில்
அவர்களது குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
விதிகளை மீறி
குழந்தைகளின் விளையாட்டில் நுழைந்து
அவர்களையும் தோற்கடிக்கிறார்கள்
இராணுவ வீரர்கள்.
பொம்மைகள் சிதற
கள்ளமில்லாக் கண்களை மூடியபடி
செத்துப் போகிறார்கள்
குழந்தைகள்..

குருதி உறைந்திருக்கும்
போர்க்களங்களெங்கும்
உயிரற்ற உடல்கள்
அடையாளந் தெரியாமல்
உறுப்புகள் பிய்த்தெறியப்பட்டுச்
சிதறிக் கிடக்கின்றன.
குருதியால் கூடுதலாக வரையப்பட்ட ரேகைகளோடு
தனித்தனியாய்க் கிடக்கின்றன
கணக்கற்ற கைகளும் கால்களும்.

அவற்றிலிருக்கும்
யாதாகிலுமொரு பிஞ்சுக்குழந்தையின் கைதான்
இனி துடைத்தாக வேண்டும்
விளையாட்டை நிறுத்தத் தெரியாத
கடவுளின் கண்ணீரை.7 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மனம் கணக்க வைத்த வரிகள்... (TM 1)

அப்துல் காதர் சொன்னது…

வாருங்கள் தனபாலன்!
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி!

அப்துல் காதர் சொன்னது…

(TM 1) என்றால் என்ன?

கவி அழகன் சொன்னது…

Vali tharum valikal salothara

அப்துல் காதர் சொன்னது…

மிக்க நன்றி கவி அழகன்!

சித்திரவீதிக்காரன் சொன்னது…

இராணுவத்திற்கு செலவளிப்பதை கல்விக்கும், இயற்கையை காப்பதற்கும் செலவளித்தால் எவ்வளவு நன்றாகயிருக்கும்?

அப்துல் காதர் சொன்னது…

மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!

Twitter Bird Gadget