காற்றுக்கென்று
வாசம் எதுவும் இருப்பதில்லை
பிரத்யேகமாய்..
மழை வாசம் முதல்
மண் வாசம் வரை
மலர் வாசம் முதல்
மரண வாசம் வரை
வேறு வேறு வாசங்களைச்
சுமந்து வருகிறது காற்று;
வேறு வேறு சந்தர்ப்பங்களில்.
காற்றுக்குத் தெரிந்திருக்கிறது
வாசங்களைக் கொண்டு
மனிதர்களை வகைப்படுத்த.
குழந்தையொன்றை
தாய்ப்பாலின் வாசம் கொண்டும்
உழைப்பாளியை
அழுக்கு வியர்வை
வாசங்களைக் கொண்டும்
இன்னும் சிலரை
செயற்கைப் பூச்சுகளின்
வாசங்களைக் கொண்டும்.
கூடுதலாய்
பசி கண்ணீர்
இவற்றின் வாசங்களும்
தெரிந்திருக்கலாம் காற்றுக்கு;
அது யாருடையதாய் இருந்த போதிலும்.
பூமியின் எல்லா வாசங்களையும்
சுமந்து வருகிறது காற்று;
விருப்பு வெறுப்பற்ற
ஒரு ஞானியைப் போல.
என்றாலும்
காற்றுக்கும் இப்போது மூச்சுத் திணறல்;
மெல்ல மெல்ல
விரைவில்
பூமி ஒருநாள்
கைவிடப்படலாம் நிரந்தரமாய்;
காற்றாலும் அதன் வாசங்களாலும்.
2 கருத்துரைகள்:
சிறப்பான கருத்துக்கள்! மூச்சு திணரும் காற்றை காப்பாற்ற முயற்சிப்போம்! நன்றி!
இன்று என் தளத்தில்!
பாதைகள் மாறாது! சிறுகதை
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html
நன்றி சுரேஷ் அவர்களே!
கருத்துரையிடுக