ஞாயிறு, 7 மார்ச், 2010

புத்தரின் மரச்சிற்பம்




ஒரு மரத்தின் மரிப்பில்
உனதுயிர்ப்பு..
நீயோ
உயிர்க்கொலைக்கு எதிர்ப்பு.

செதுக்கலின் நுணுக்கங்களில்
வியந்தே உன்னை வாங்கினேன்..
இன்று உன் மோனத்தில்
என்னை நானே செதுக்கிக் கொள்கிறேன்.

உடன்பாடில்லைதான்
உருவ வழிபாட்டில் என்றாலும்
ஒப்புக்கொள்கிறேன் வெட்கத்தோடு
உன்னை மட்டும் வணங்கத் தோன்றுவதை..

மார்கழி மாதத்து நாய்களாய்
அலையுமென் மனம்
உன்னைக் கண்டால்
ஒடுங்கிப் போகிறது
ஓட்டுக்குள் ஆமையாய்..

'மாற்றங்கள் மட்டுமே மாறுதலற்றவை'
என்றாய்;
மாறிப்போனேன் நானும்
மாறுபாடு ஏதுமின்றி..

உன் வினைக்கோட்பாட்டை
மாற்றங்களுடன்
ஏற்றுக் கொள்கிறது,
உன் சூனிய வாதத்தோடு
உடன்பட மறுக்கும்
என் பொருள் முதல்வாத அறிவு.

உன்னோடு நான் நிகழ்த்தும்
மௌன உரையாடல்களில்
எப்போதும் எஞ்சி நிற்கின்றன
விடை தெரியாத
என் கேள்விகள்.

உன் பாதையில் பயணப்படத்தான்
எத்தனிக்கிறது மனம்.
ஆனாலும்,
தன் கோரக் கைகளை நீட்டி
அவ்வப்போது பற்றி இழுக்கிறது
வாழ்க்கை.


0 கருத்துரைகள்:

Twitter Bird Gadget